TNPSC Thervupettagam

தரவுப் பாதுகாப்பு

July 17 , 2023 416 days 287 0
  • இன்றைய டிஜிட்டல் உலகில், பயனரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, தரவுகளாகப் பராமரிப்பதன் மூலம் இணையதளங்களும் செயலிகளும் சேவை வழங்கிவருகின்றன. மக்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்துப் பராமரித்து, அதன் அடிப்படையில் நலத்திட்ட உதவிகளை அரசாங்கங்கள் செயல்படுத்திவருகின்றன. மறுபுறம், தகவல்-தரவுக் கசிவு, திருட்டு போன்ற இணையக் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.
  • இந்தப் பின்னணியில், ‘டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டம்’ (Digital Personal Data Protection Bill) என்கிற மசோதாவை மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ளது. ஜூலை 5 அன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில், மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • முன்னதாக, ‘தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா’ (Personal Data Protection Bill) என்கிற பெயரில், 2019இல் மத்திய அரசு ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. எந்தவொரு அரசு நிறுவனமும் மசோதாவுக்கு இணங்குவதிலிருந்து மத்திய அரசு விலக்களிக்கலாம்; மசோதாவின் கீழ் எந்தவொரு பாதுகாப்பையும் பின்பற்றாமல் தனிப்பட்ட தரவை அரசு முகமைகளால் செயலாக்கத்துக்கு (process) உள்படுத்த முடியும் என்பன போன்ற அரசுக்குச் சாதகமான அம்சங்களை அந்த மசோதா கொண்டிருந்தது. அதில் இடம்பெற்ற அம்சங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்தல், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். எனவே, அந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
  • மசோதாவில் பல்வேறு திருத்தங்களையும் மாற்றங்களையும் வலியுறுத்தி, கூட்டுக் குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து, அந்த மசோதாவைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு, விரைவில் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தது. அதன்படி, தற்போதைய புதிய மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. எனினும், முந்தைய மசோதாவில் இடம்பெற்ற - அரசுக்குச் சாதகமான அம்சங்கள் இதிலும் தொடர்வதாகத் தெரிகிறது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழங்கும் வசதிகள் சிலவற்றையும் இந்த மசோதா நீர்த்துப் போகச் செய்கிறது.
  • இந்த மசோதாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அரசுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் விலக்களிக்கும் அம்சங்கள் பெரும் கவலைதருகின்றன’ என ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா கருத்துத் தெரிவித்துள்ளார். 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவின் வரைவு உருவாக்கத்துக்கு மத்திய அரசு அமைத்த குழுவின் தலைவராக இருந்தவர் கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் இணையப் பயனாளர்களின் தற்போதைய எண்ணிக்கை சுமார் 69.2 கோடி; இது 2025இல் 90 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியுரிமையை (privacy) ஓர் அடிப்படை உரிமையாக உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில், இத்தனை கோடி மக்களின் தனியுரிமையில் இந்த மசோதா அதிகக் கவனம் செலுத்தவில்லை எனத் தனியுரிமைச் செயல்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தரவுக் கையாளுகையில் அரசின் பங்கு முதன்மையானது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், அது குடிநபர்களின் தனியுரிமையில் பின்னடைவைக் கொண்டுவந்துவிடக் கூடாது. அரசு இதைப் பரிசீலிக்கும் என நம்புவோம்.

நன்றி: தி இந்து (17 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories