- கோவா சிறிய மாநிலம். அங்கு சுற்றுலா மட்டுமே பிரதான தொழில். மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் சுற்றுலாவை மேலும் மேம்படுத்தப் பல யோசனைகள் பரிசீலிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் கடலோரம் இருக்கும் தரிசு நிலங்களில் சாகுபடி மேற்கொண்டு அதைப் பசுமை போர்த்திய நிலப்பரப்பாக மாற்றுவது.
- தரிசு நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.60 ஊக்குவிப்புத் தொகையாக அளிக்கப்படும் என்றும், குறைந்தபட்சக் கொள்முதல் விலை, விதை-உரம்-பூச்சிக்கொல்லி மானியம், குறைந்த வட்டியில் விவசாயக் கடன் ஆகிய சலுகைகளும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரிசு நிலம்
- தரிசாக உள்ள நிலங்களில் பெரும்பகுதி கடலோரம் உள்ளவை மட்டுமல்ல, சற்று தாழ்வான பகுதிகளுமாகும்.
- மிதமிஞ்சிய மழைக் காலங்களில் கடல்நீர் உட்புகுவதால் நிலத்தில் உவர்ப்புத்தன்மை கூடிவிடுகிறது.
- வேளாண் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று இவ்வகை நிலங்களுக்கு ஏற்ற பயிர்களை விவசாயிகள் தேர்ந்தெடுக்க உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது.
கஜான்
- கடலோர விவசாய நிலங்களை கோவாவில் ‘கஜான்’ என்றழைக்கின்றனர். கி.பி. 400-லிருந்தே இந்நிலங்களைப் பற்றிய குறிப்புகள் மராட்டிய, கொங்கண இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. கடல்நீர் உள்ளே நுழையாமல் தடுக்க தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அப்படியும் பெரிய அலைகள் வாயிலாக வரும் கடல்நீரை வடித்து மீண்டும் கடலுக்கு அனுப்ப ஆங்காங்கே வடிகால்களும் அமைக்கப்பட்டிருந்தன.
- நவீனக் கல்வியைப் பெறுவதற்கும் முன்னதாக கோவா மாநிலத்தவர் கட்டுமானப் பொறியியலில் நிபுணத்துவம் பெற்றிருந்ததை இந்தக் கட்டுமானங்கள் தெரிவிக்கின்றன. கோவாவில் கஜான்களின் மொத்தப் பரப்பளவு 18,000 ஹெக்டேர். இது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 5%. கடந்த 15 ஆண்டுகளாக சரியாகப் பராமரிக்காததால் இந்நிலங்களில் சுமார் 4,000 ஹெக்டேர் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டது. கோவாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கடற்கரையோரக் காட்சிகளைப் போல, கஜான்களின் பாசன வடிநீர் வாய்க்கால்களையும் காட்டி மகிழ்விக்கலாம் என்று மாநில அரசு கருதுகிறது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதுடன் விவசாயிகளுக்கு மேல்வருமானம் கிடைக்கவும் வழிவகுக்கும்.
- ‘தரிசு நிலங்களில் விவசாயத்தைப் புதுப்பிக்க அரசு விரும்பினாலும் தனித்தனியாக விவசாயிகளால் இதைச் செய்வது எளிதல்ல. அரசே கிராமங்கள்தோறும் விவசாயிகளைத் திரட்டி கூட்டுப் பண்ணைகளை ஏற்படுத்த வேண்டும்; பண்ணையில் வேலை, விளைச்சல், வருவாய், லாபம், இழப்பு என்று அனைத்தையும் விவசாயிகள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.
- வட கோவாவின் கடலோர நிலங்களில் சாகுபடிக்குப் புத்துயிரூட்ட நாங்கள் தனியாக முயன்று தோற்றுவிட்டோம். அரசு கைகொடுத்தால் இது சாத்தியமே’ என்கின்றனர் விவசாயிகள். கடலோர நிலங்களில் விவசாயம் செய்வதால் பயிர்ச் சாகுபடி பெருகுவது மட்டுமல்லாமல், கடலோரப் பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் கரைக்கு வந்து இனப்பெருக்கம் செய்யவும் ஏதுவாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- இந்திய அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் வரவேற்கத்தக்க நல்ல மாறுதல், ஆட்சியாளர்கள் சற்று வித்தியாசமாகச் சிந்தித்து பிரச்சினைகளைத் தீர்க்க திட்டங்களைத் தீட்டுவதுதான். சில வேளைகளில் இந்த திட்டங்கள் எதிர்பார்த்தபடி பலன் தராமலும்போகலாம் அல்லது இலக்கை முழுதாக எட்ட முடியாமல் பாதி வெற்றியாகக்கூட முடியலாம்.
- ஆனால், செயல்பாடாகச் சிந்தனை மாறும்போது முதலில் கிடைப்பது அனுபவம். அது வெற்றியை மேலும் வலுப்படுத்தவும் தோல்வியை வெற்றியாக மாற்றவும் நிச்சயம் உதவும்.
நன்றி: இந்து தமிழ் திசை (20-11-2019)