- கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவர்களை உலகெங்கும் மருத்துவர்கள் பரிசோதித்துவருகிறார்கள். அவர்களுடைய ரத்தத்தில் அதிக அளவிலான நோய்முறிகள் (antibodies) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
- இந்த நோய்முறிகளெல்லாம் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்பட்டவை. செல்களில் நுழையக்கூடிய கரோனா வைரஸ்களின் திறமையை இந்த நோய்முறிகள் தடுத்துவிடுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
- ஆனால், பிரச்சினை என்னவென்றால் இந்தத் தற்பாதுகாப்பு ஆயுள் முழுவதும் கிடைக்காது என்கிறார்கள். “ஒரு ஆண்டோ இரண்டு ஆண்டுகளோ கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்க வாய்ப்பிருக்கிறது” என்கிறார் வைரஸியலாளர் ஸ்கின்னர். அதற்குப் பிறகு நோய்த்தொற்று ஏற்பட்டால் மறுபடியும் முதலிலிருந்துதான் தொடங்க வேண்டுமாம்!
குழந்தைகளை முடக்கிய கரோனா
- ஊரடங்கால் வீட்டுக்குள்ளே குழந்தைகள் அடைந்துகிடப்பது அவர்களின் உளவியலில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- இதையொட்டி, ஸ்பெயின் நாட்டில் குழந்தைகளை இந்தத் தளையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற குரல்கள் தீவிரமடைந்துள்ளன. இத்தனைக்கும் உலகிலேயே மிக மோசமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று ஸ்பெயின். கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில்கூட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் தெருவில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி உண்டு. ஸ்பெயினில் அதுவும் கிடையாது.
- உலகம் முழுவதுமே இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறது. கிராமத்துக் குழந்தைகள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் விளையாடும் சுதந்திரம் இருக்கிறது.
- ஆனால், நகரங்களில் வீட்டுக்குள் அடைக்கலமாகும் குழந்தைகள் ஒன்று தொலைக்காட்சியில் மூழ்கிப்போகிறார்கள், இல்லையென்றால் செல்பேசியில் மூழ்குகிறார்கள்.
- உடல்ரீதியான செயல்பாடுகள் முற்றிலும் குறைந்துபோய்விட்டன. குழந்தைகளிடம் பெற்றோர் உரையாடவோ, வீட்டுக்குள்ளேயே விளையாடுவதோ அவசியம்.
நன்றி: தினமணி (21-04-2020)