TNPSC Thervupettagam

தற்கொலை பாதிப்புகளும் மீட்சிக்கான பாதைகளும்

September 21 , 2023 347 days 340 0
  • பள்ளி, கல்லூரிப் பருவத்தின் இளவயது மரணங்கள் பெரும் துயரம் தருபவை. நடிகர்-இசையமைப்பாளரின் பதின்பருவ வயது மகள் தற்கொலை செய்துகொண்ட செய்திதமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு மனநல மருத்துவராக, அதுவும் குழந்தைகள்-பதின்ம வயதினரின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிந்த ஒருவராக இச்செய்தியை அணுகும்போது, தற்கொலை செய்துகொண்டவரோடு நேரடித்தொடர்பு இல்லா விட்டாலும், குற்ற உணர்வுக்கு ஆட்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
  • நுணுக்கமாகப் பார்த்தால், குற்றமே புரியாமல் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் ஆழ்மனதில் குற்ற உணர்வு மேலெழும். பெற்றோர் குற்ற உணர்வுக்கு ஆளாகாமல் மீள்வது கடினம். நாம் முறையாகக் கவனிக்கத் தவறினோமா, வேண்டியதைச் சரியாகச் செய்யாமல் விட்டுவிட்டோமா எனப் பல கேள்விகள் அவர்களைத் துளைத்தெடுக்கும்; ஒரு கட்டத்தில் மனஅழுத்தத்தில் தள்ளும். கடினமான இந்தக் காலகட்டத்தைக் கடந்துவருவதற்கு உறவினர்களும் நண்பர்களும் உடனிருந்து அவர்களுக்கு உதவ வேண்டும். தேவைப்படும் பட்சத்தில், மனநல மருத்துவரை அணுகுவதற்குத் தயங்கக் கூடாது.
  • அதேபோல், சம்பந்தப்பட்டவர்கள் படித்தபள்ளி-கல்லூரியில் அவர்களுடன் பழகிய சக மாணவ-மாணவியர், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் சில உதவிகள்தேவைப்படும். அவர்கள் அனைவரும் இத்தருணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், உடன்இருப்பவர்களும் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று அர்த்தம் கிடையாது. அதேநேரம், இந்தப் பருவத்தில் தனிநபருக்கு இருக்கும் மனஅழுத்தம் அவரைச் சார்ந்தவர்களையும் பாதிக்கக்கூடும். ஒவ்வொருவரும் அதை எப்படிக் கையாள்வார்கள் என்பது நமக்குத் தெரியாது.
  • இதுவரை கவனிக்காமல்விட்ட பெற்றோர்கள், சிறிது நேரம் ஒதுக்கிக் கூர்ந்து கவனித்தால் மனஅழுத்தப் பிரச்சினைகளை எளிதில் முடிவுக்குக் கொண்டுவரலாம். பிரபலங்களோ அவர்களைச் சார்ந்தவர்களோ தற்கொலை செய்துகொள்ளும்போது, அவர் சார்ந்த சமூகத்துக்கும் ஒருவித மனஅழுத்தம் ஏற்படும் என்பது பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப் பட்டிருக்கிறது.
  • வளர்ச்சியடைந்த நாடுகளில், தற்கொலைநிகழ்வுகள் நடந்தால், அதை ஒரு செய்தியாகக் கடந்து போகாமல், சக மனிதர்களை ஆற்றுப்படுத்தும் பணியையும் உடனடியாகத் தொடங்கி விடுவார்கள். குடும்பத்தினர், பள்ளி, கல்லூரியில் பயிலும் சக மாணவ-மாணவியர் என அனைவருக்கும் நேரில்/தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்குவார்கள்.
  • எந்தஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்லஎன்பதை வலியுறுத்தும் விதமாக ஆலோசனைகளை வழங்குவார்கள். பிரச்சினைகளுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, எளிய தீர்வுகளை முன்வைப்பார்கள். அதேநேரம், தற்கொலை செய்துகொள்பவர்கள் கோழைகள்என்பது போன்ற கடினமான சொற்களை மறந்தும் பயன்படுத்த மாட்டார்கள்.
  • மனஅழுத்தம் என்பது மரணத்துக்குப் பிறகு சிந்திக்க வேண்டிய விஷயம் அல்ல; வாழும் போதே மனஅழுத்தம் இல்லாமல் வாழப் பழக வேண்டும். அதற்கான வழிகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தேடித் தருவதும், தெரிந்துகொள்வதும் நம்முடைய கடமை. நம் அன்புக்கு உரியவர்களுக்காக, நாம் நேசிப்பவர்களுக்காக இதைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories