- துப்புரவுத் தொழிலாளர்களின் அவலத்தை தேசியக் களங்கமாகவோ, மனித உரிமை மீறலாகவோ, மனிதாபிமானத்துக்கு இழுக்காகவோ நாம் கருதுவதில்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.
- பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்து, மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சராக ராம்தாஸ் அதாவலே பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு இந்தப் பிரச்னை குறித்து அரசின் கவனம் திரும்பியிருக்கிறது என்பது என்னவோ உண்மை.
- முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் அரசிலும் இது குறித்து சில சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால், நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
- மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 340 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது பணியின்போது உயிரிழந்திருப்பதாக அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
- உயிரிழந்தவர்களில் 75% உத்தர பிரதேசம், தமிழ்நாடு, தில்லி, மகாராஷ்டிரம், குஜராத், ஹரியாணா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
- அவர்களில் பலரும் எந்தவிதப் பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் கழிவுநீரோடைகளிலும், தொட்டிகளிலும் இறங்கிய போது உயிரிழந்திருக்கிறார்கள்.
- தேசிய சஃபாய் கர்மசாரி நிதியுதவி மேம்பாட்டு ஆணையம் என்கிற மத்திய அரசின் அமைப்பு, துப்புரவுத் தொழிலாளர்கள் இயந்திரங்களையும் உபகரணங்களையும் வாங்குவதற்கு 50% மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்குகிறது.
- அந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியையும் வழங்குகிறது. ஆனாலும், இதற்கான முதலீடு செய்யும் நிலையில் அப்பாவித் துப்புரவுத் தொழிலாளர்கள் இல்லை என்கிற அடிப்படை உண்மை ஏனோ அரசுக்குப் புரியவில்லை.
- 2013-இல் பிரதமர் மன்மோகன் சிங் அரசு ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி, விதிகளுக்குக் கட்டுப்பட்டு பாதுகாப்பு உடைகள், உபகரணங்களுடன் மட்டுமே கழிவுநீர்த் தொட்டிகள், ஓடைகளில் தொழிலாளர்கள் இறங்க வேண்டும் என்றும், அவர்களை முறையான பாதுகாப்பில்லாமல் வேலைக்கு அமர்த்துவது கிரிமினல் குற்றம் என்றும் தெளிவாகவே வரையறுக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் ஏட்டளவில் முடங்கிக் கிடக்கின்றன.
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மனித துப்புரவுத் தொழிலாளர்கள் சட்டத்தில் ஒரு முக்கியமான திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி, இந்தியாவின் நகர்ப்புறங்களில் இயந்திரங்களின் மூலம் மட்டுமே கழிவுநீரோடைகள், தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
- 243 நகரங்களுக்கு சுத்தம் செய்யும் இயந்திரங்களை வாங்க நிதியுதவியும் வழங்க முன்வந்தது. இதுபோன்ற அறிவிப்புகள் இதற்கு முன்னாலும் செய்யப்பட்டு பின்பற்றப்படவில்லை என்பதால் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
- 1955-இல் குடிமை உரிமை பாதுகாப்புச் சட்டத்தில் தொடங்கி, மனிதக் கழிவுகளை அகற்றுவது, கழிவுநீரோடைகளில் இறங்கி துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றுவது உள்ளிட்ட அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல குழுக்கள் அமைக்கப்பட்டு திட்டங்களும் வகுக்கப்பட்டிருக்கின்றன.
- துப்புரவுத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. 1933-இல் இயற்றப்பட்ட சட்டமும், 2013-இல் இயற்றப்பட்ட சட்டமும், இப்போது இயற்றப்பட்டிருக்கும் சட்டத்திருத்தமும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பையும், அவர்களது குடும்பத்திற்கு சில உத்தரவாதங்களையும் வழங்குகின்றன.
- இந்த முயற்சிகள் எல்லாம் செய்யப்பட்டும்கூட, 2018-இல் சஃபாய் கர்மசாரி (துப்புரவுத் தொழிலாளர்கள்) தேசிய ஆணையம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவிலுள்ள 18 மாநிலங்களில் 39,000 துப்புரவுத் தொழிலாளர்கள் காணப்படுகிறார்கள். இந்தக் கணக்கு எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை.
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 26 லட்சம் கழிப்பறைகள் துப்புரவுத் தொழிலாளர்களால் மனிதக் கழிவுகளை அகற்றும் வகையில் அமைந்திருக்கின்றன.
- 2011-இல் மேற்கொள்ளப்பட்ட சமூக, பொருளாதார, ஜாதி கணக்கெடுப்பின்படி, தேசிய அளவில் 1,82,505 துப்புரவுத் தொழிலாளர்கள் காணப்படுகிறார்கள். இது ஊரகப்புறங்களுக்கு மட்டுமான கணக்கு. நகர்ப்புற துப்புரவுத் தொழிலாளர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
- துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கத்தின் (ஃசபாய் கர்மசாரி ஆந்தோலன்) புள்ளிவிவரப்படி, 7.70 லட்சம் பேர் நாடு தழுவிய அளவில் கழிவுநீர்த் தொட்டிகள், ஓடைகள், சாக்கடைகளில் நேரடியாக இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
- அவலம் என்னவென்றால், கழிவுநீர் தொட்டிகளின் அடைப்புகளை அகற்றும்போது உயிரிழந்தோர்களின் குடும்பத்தினர் பலருக்கும் (அநேகமாக எல்லோருக்கும்) துப்புரவுத் தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய எந்த உதவியோ, உரிமையோ வழங்கப்படுவதில்லை.
- காந்தியடிகளுக்குப் பிறகு இவர்களுக்காகக் கவலைப்பட யாருமே இல்லை. தலித்தியம் பேசுகிறார்கள். தலித்துகளை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள் நடத்துகிறார்கள். தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களாக வலம் வருகிறார்கள்.
- ஆனால், அவர்கள் யாருக்குமே அடித்தட்டு நிலையிலிருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்த அக்கறையோ, அவர்களின் உரிமைக்காக குரலெழுப்ப வேண்டும் என்கிற உணர்வோ இருப்பதில்லை. ஏனென்றால், துப்புரவுத் தொழிலாளர்கள் அவர்களின் வாக்குவங்கி அல்ல.
- அதுமட்டுமல்லாமல், தலித்திய வர்ணாஸ்சிரம இலக்கணப்படி, துப்புரவுத் தொழிலாளர்கள் தீண்டத்தகாதவர்கள்!
நன்றி: தினமணி (04-02-2021)