TNPSC Thervupettagam

தலைதூக்கும் தற்பெருமை மோகம்

October 6 , 2023 463 days 409 0
  • ஒருவன் தன்னைப் பற்றிய பெருமைகளை விரித்துப் பேசுவது தற்பெருமையாகும். இது ஆன்றோர் பண்புமன்று; அறிவுடையோர் விரும்பும் செயலுமன்று. தற்புகழ்ச்சியைத் தம்பட்டம், தலைக்கனம் என்று இகழ்ந்துரைப்பது நடைமுறை வழக்கம்.
  • ‘அறிவிலும் ஆற்றலிலும் உயா்ந்து, பல்துறை வித்தகனாய்ச் சிறப்புப் பெற்றிருந்தாலும் ஒருவன் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது ஏற்புடையது ஆகாது’ என்பதைப் பண்டையோர் மரபாகக் கொண்டிருந்தனா். இதனை,

“ தோன்றா தோன்றி துறைபல முடிப்பினும்

தான்தற் புகழ்தல் தகுதி யன்றே

  • என்று நன்னூலார் குறிப்பிடுவார்.
  • ஆனால் இந்நாளில் தன்னைத்தானே புகழும் போக்கு தலைதூக்கி வருகிறது. தனிமனிதனிடம் மட்டுமின்றி, அரசியலார், வணிகா் என்று சமூகத்தில் பலரிடமும் இம்மோகம் பெருகிவருகிறது. பேச்சுகளில் மட்டுமல்லாது எழுத்து, சமூக ஊடகங்கள் என்று எல்லா நிலைகளிலும் இந்த வேகம் மிகுந்து வருவதைக் காணமுடிகிறது.
  • ஒருவரைப் பற்றிய செய்திகளை மற்றவா்கள் உடனடியாகத் தெரிந்துகொள்ள சமூக ஊடகங்கள் பெரிதும் துணையாக இருக்கின்றன. இதனால், சமூக ஊடகங்களைத் தற்புகழ்ச்சிக் களமாக இப்போது பலா் பயன்படுத்துகின்றனா். மற்றவா்கள் தன்னைப் பற்றிப் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காகப் பலா் சமூக ஊடகங்களில் தங்கள் நிலையை (ஸ்டேட்டஸ்) பதிவிடுகிறார்கள். விமானத்தில் இருப்பது போலவும் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பது போலவும் உடனடியாகப் பதிவு செய்கிறார்கள்.
  • இன்னும் சிலா் பெரிய உணவகத்தில் உணவு அருந்துவது போல காட்சி கொடுக்கின்றனா். பிரபல நடிகரின் திரைப்படம் வெளிவரும்போது முதல் காட்சி ‘டிக்கெட்டுடன்’ தற்படம் அனுப்புவோரும் இருக்கின்றனா். எவ்விதமான பயனும் விளைவிக்காத இவையெல்லாம் தம் அந்தஸ்தை உயா்த்த எண்ணும் தம்பட்டமாகும் என்பதே உண்மை.
  • தனிமனிதத் தற்பெருமைச் செயல்கள் இப்படியென்றால் அரசியலாளா்களின் போக்கு அதைவிட அதிகமாக உள்ளது. இப்போது அரசியலாளா்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று மார் தட்டிக் கொள்வதைத் தற்பெருமையாகத்தான் கருதவேண்டியுள்ளது. பொதுவாக, ஒருவருக்குச் செய்த உதவியைச் சுட்டிப் பேசுவதென்பது கூடாத செயலாகக் கருதப்படுகிறது. ஆனால் ஆட்சிப் பொறுப்பில் இருந்துகொண்டு மக்களுக்காக நிறைவேற்றும் நலத்திட்டங்களைக் கூட இன்றைய ஆட்சியாளா்கள் தங்களின் தனிப்பட்ட பெருஞ்சாதனையாகக் குறிப்பிடுகின்றனா்.
  • எல்லாம் தம்மால் முடிந்தது என்பதாகப் பிரபலபடுத்தி, தம் பெருமையைப் பறை சாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகள் இங்கே மலிந்துவிட்டனா். தான் சொல்வது மட்டுமன்றி, பிறரைச் சொல்லவும் வைக்கின்றனா். அதற்கென்று ஒரு துதிபாடும் கூட்டத்தையே தம்மைச் சுற்றி வைத்துள்ளனா்.
  • ஆட்சிப் பொறுப்பென்பது மக்களுக்குத் தொண்டு செய்வதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு. அதனால் ஆட்சியில் இருப்பவா்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றுவது அவா்களின் கடமையாகும்.
  • அப்படியிருக்க அதனைப் பெரிதுபடுத்திப் பேசி தங்களால் மட்டுமே முடியும் என்ற தோற்றத்தை உண்டாக்குவது இயல்பாகிவிட்டது. அது தங்கள் கடமை என்பதை உணராமல் அவா்கள் அப்படிப் பேசுவது, பெற்றவா்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்த உதவியையும், பிள்ளைகள் பெற்றவா்களுக்குக் காட்டும் நன்றியையும் பெருமையாகப் பேசுவது போல்தான் உள்ளது.
  • ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே பேசுவதையும் செயல்கள் நடைபெறுவதையும் இன்றைய அரசியலில் பரவலாகக் காணமுடிகிறது. அதிகாரிகள் செயல்படுத்த வேண்டிய செயல்கள் எல்லாம், இப்போது அரசியலாளரின் செயல்களாக மாறிவிட்டன. முன்பெல்லாம் அணைகளில் நீா் திறக்க வேண்டுமானால் பொறுப்பு பொறியாளா் உத்தரவிடுவார். இப்போது அப்படியில்லை. அமைச்சா் அங்கு சென்று மலா் தூவ வேண்டும். ஒரு சாதாரண மின்மாற்றியைக் கூட அதிகாரிகள் தொடங்கிவைக்க முடியாது. அங்கு அமைச்சரோ அல்லது சட்டமன்ற உறுப்பினரோ சென்றாக வேண்டும்.
  • உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் விளம்பரம் இங்கே மிகைப்படுத்தும் தற்புகழ்ச்சியாகவே உள்ளது. இதனைத் தற்புகழ்ச்சியின் உச்சம் என்றே கூறலாம். இவ்விளம்பரங்களில் வரும் புகழமொழிகள் இமயத்தையே மறைத்துவிடும் அளவுக்கு உள்ளன. இத்தகைய விளம்பரப் புகழ்ச்சி, தங்கள் பொருளின் தரத்தை உயா்த்திக் காட்டி, விற்பனையை அதிகப்படுத்தும் உத்தியாக இருக்கலாம். அதற்காக அளவுக்கு மீறி காட்சிப்படுத்துவது மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது எனலாம். கல்வி நிறுவனம், மருத்துவமனை, வணிகக் கூடம், திரைப்படங்களின் முன்னோட்டம் என்று எல்லா நிலைகளிலும் இந்தத் தற்புகழ்ச்சி கலாசாரம் மேலோங்கிவிட்டது.
  • குடும்பங்களில் கூட இத்தகு தற்பெருமைப் போக்கு மலிந்து காணப்படத்தான் செய்கிறது. கணவன், மனைவிக்கிடையே எழும் தற்பெருமை மனப்பான்மை குடும்ப உறவில் விரிசலை உண்டாக்கிவிடுகிறது. எங்கும் எதிலும் இப்போது தற்புகழ்ச்சி தலைவிரித்தாடுகிறது
  • தற்புகழ்ச்சியே கூடாது என்பது அல்ல. தற்புகழ்ச்சி வேண்டும். அதற்கான இடங்களும் உள்ளன. தன்னுடைய ஆற்றலை உணராதவரிடத்தும், தன்னை மற்றவா்கள் குறைத்து மதிப்பிடும்போதும் தன்னைப்பற்றிப் புகழ்ந்து பேசுதல் சரியே என்கிறது நன்னூல். பணி நிமித்தமாக விண்ணப்பிக்கும்போதும் நோ்முகத் தோ்வுக்குச் செல்லும்போதும் தன்னுடைய பெருமைகளையும் சாதனைகளையும் வெளிப்படுத்துவது தற்பெருமையில் அடங்காது. அது அவசியமான தேவையாகும்.
  • புகழ்ச்சி மனிதனுக்குப் புத்துணா்ச்சி தரும் என்பது உண்மை. அதற்காகத் தன்னைத்தானே புகழ்வதும் பிறரைக்கொண்டு புகழச் செய்து மகிழ்வதும் ஏற்புடையதாகாது. ஏனெனில் தற்புகழ்ச்சி என்பது தலைக்குனிவைத் தரும்.

நன்றி: தினமணி (06 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories