TNPSC Thervupettagam

தலைநகர ஆட்சி யாருக்கு?

February 5 , 2025 2 hrs 0 min 11 0

தலைநகர ஆட்சி யாருக்கு?

  • 2024 மக்களவைத் தேர்தலின்போது டெல்லிவாசி ஒருவர் ஒரு விபத்தில் சிக்கி கோமாவில் விழுந்து - கடந்த சில நாள்களுக்கு முன்புதான் கண் விழித்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மனிதர் கடுமையான மனக் குழப்பத்துக்கு ஆளாவது நிச்சயம். பாஜகவுக்கும், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகித்த இண்டியா கூட்டணிக்கும் இடையிலான கடும் போட்டியைக் கண்ணுற்றவர், தற்போது டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மூன்று கட்சிகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வதைப் பார்த்தால் தலையே சுற்றிவிடும். தலைநகர் தேர்தல் களத்தின் மும்முனைப் போட்டி அந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது.

இதுவரையிலான நிலவரம்:

  • 2014, 2019, 2024 மக்களவைத் தேர்தல்​களில் பாஜகவுக்கே ஏகோபித்த வெற்றி​வாய்ப்பை அளித்த டெல்லி மக்கள், சட்டமன்றத் தேர்தல்​களில் ஆம் ஆத்மிக்கே ஆதரவளித்​தனர். 2015 சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 தொகுதி​களில் 67 இடங்களில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, 2020 தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்​துக்​கொண்டது. அந்தத் தேர்தலில் 8 இடங்கள் பாஜகவுக்குக் கிடைத்தன.
  • இரண்டு தேர்தல்​களிலும் காங்கிரஸுக்கு ஓர் இடம்கூட கிடைக்க​வில்லை. 26 ஆண்டு​களுக்கு முன்னர் டெல்லியை ஆட்சி செய்த பாஜகவும், 12 ஆண்டு​களுக்கு முன்னர் ஆட்சி செய்த காங்கிரஸும் இந்த முறை ஆம் ஆத்மி​யிட​மிருந்து ஆட்சியைக் கைப்பற்றப் போட்டி​யிடு​கின்றன. ஹரியாணா தேர்தலில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்துக் களம் கண்டதன் பலனை அறுவடை செய்த பாஜக, டெல்லி​யிலும் வெல்லலாம் என்று கருதுகிறது.

தேர்தல் வியூகங்கள்:

  • இலவச மின்சாரம், குடிநீருக்கு மானியம், தரமான கல்வி, மேம்பட்ட சுகாதார வசதிகள் எனப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் ஆம் ஆத்மியின் தொடர் வெற்றிகளுக்கான காரணி​களாகச் சொல்லப்​படு​கின்றன. எனினும், ஊழலுக்கு எதிரான போராட்​டத்தின் தொடர்ச்​சியாக முகிழ்த்த ஆம் ஆத்மியின் பிம்பத்தை உடைக்க பாஜக வகுத்த வியூகங்கள் கைகொடுத்தன.
  • கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மியின் மணீஷ் சிசோடியா முதல் அர்விந்த் கேஜ்ரிவால் வரை முக்கியத் தலைவர்கள் கைதுசெய்​யப்​பட்டதன் மூலம், ஆம் ஆத்மியின் ‘அப்பழுக்கற்ற கட்சி’ என்ற பிம்பம் தகர்க்​கப்​பட்டு​விட்டதாக பாஜகவினர் நம்பு​கிறார்கள்.
  • ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த காலத்​தில்​தான், உலகத்​தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் என டெல்லி பல முன்னேற்​றங்களை அடைந்​த​தாகச் சொல்லும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் அவையெல்லாம் பின்னடைவைச் சந்தித்​த​தாகக் குற்றம்​சாட்டு​கிறது. பாஜக, ஆம் ஆத்மி என இரண்டு கட்சிகளும் வாக்காளர்​களுக்குப் பணம் கொடுப்​ப​தாக காங்கிரஸ் குற்றம்​சாட்டு​கிறது.
  • ஆம் ஆத்மியைப் பொறுத்தவரை அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் முகமாக முன்வைக்​கப்​படு​கிறார். பாஜகவும் காங்கிரஸும் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்க​வில்லை. ஹரியாணா, மகாராஷ்டிரத் தேர்தல்​களில் அதிகமாகப் பிரச்​சா​ரத்தில் ஈடுபடாத மோடி டெல்லியில் தீவிர​மாகப் பிரச்​சாரம் செய்திருக்​கிறார்.
  • அரசுப் பள்ளி​களின் வளர்ச்​சியைத் தங்கள் வெற்றிகளில் ஒன்றாக ஆம் ஆத்மி கட்சி அரசு முன்வைத்து​வரும் நிலையில், “ஒன்பதாம் வகுப்பில் சரியாகப் படிக்காத மாணவர்​களைப் பத்தாம் வகுப்​புக்கு அனுப்​பாமல் தடுத்து​விடு​கிறது ஆம் ஆத்மி அரசு” என்று பள்ளி மாணவர்​களிடம் நேரடி​யாகப் பேசியிருப்பது மோடியின் கடைசி அஸ்திரங்​களில் ஒன்றாகப் பார்க்​கப்​படு​கிறது.

சமூகக் கணக்குகள்:

  • டெல்லி வாக்காளர்​களில் 45% பேர் நடுத்தர வர்க்​கத்​தினர்; கணிசமானோர் மாதச் சம்பளக்​காரர்கள். கடந்த பத்தாண்​டு​களில் மக்களவைத் தேர்தல்​களில் பாஜகவுக்​கும், சட்டமன்றத் தேர்தல்​களில் ஆம் ஆத்மி கட்சிக்கும் வாக்களித்து​வந்​தவர்கள் இவர்கள். இந்தச் சூழலில், ரூ.12 லட்சம் வரை மாத வருமானம் கொண்ட​வர்​களுக்கு வருமான வரி இல்லை என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்​கப்​பட்​டிருப்பது, 8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வரவிருப்பது போன்ற பல அம்சங்கள் மாதச் சம்பளக்​காரர்களை பாஜக பக்கம் ஈர்க்கும் என்றும் பேசப்​படு​கிறது.
  • 13% முஸ்லிம் வாக்காளர்​களின் வாக்கு​களில் பெரும்​பாலானவை, ஆம் ஆத்மி கட்சிக்கே கிடைத்துவந்த நிலையில், இந்த முறை காங்கிரஸும், ஒவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் அந்த வாக்கு​களைப் பிரித்து​விடும் என்று பாஜக கணக்குப் போடுகிறது. குடிசைப் பகுதி​களில் வசிப்​பவர்​களில் பெரும்​பாலானோர் தலித் மக்கள். டெல்லி வாக்காளர்​களில் 20% ஆக உள்ள தலித்துகள் பெரும்​பாலும் ஆம் ஆத்மி கட்சிக்​குத்தான் வாக்களிப்​பார்கள். இந்த முறை, அந்த வாக்கு​களைக் கவர பாஜக முயற்சிக்​கிறது. குடிசைப் பகுதி​களில் வசிப்​பவர்​களுக்குத் தரமான குடியிருப்புகள் கட்டித்​தரப்​படும் என்கிற வாக்குறுதியை பாஜக முன்வைத்​திருக்​கிறது.
  • ஆனால், மும்பை தாராவி குடிசைப் பகுதி - மறுசீரமைப்பு என்ற பெயரில் அதானி குழுமத்​துக்கு வழங்கப்​பட்டது போல டெல்லி​யிலும் நடக்கும் என்று ஏழை மக்களை எச்சரிக்​கிறது ஆம் ஆத்மி. தலித் மாணவர்​களுக்கு இலவசமாக வெளிநாட்டில் உயர் கல்வி என்றெல்லாம் ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்​திருக்​கிறது. இலவசத் திட்டங்​களுக்கு எதிராக அடிக்கடி முழங்​கி​னாலும், இந்தத் தேர்தலிலும் பாஜக பல்வேறு இலவசத் திட்டங்களை வாக்குறு​திகளாக முன்வைத்​திருக்​கிறது.

விபரீதக் குற்றச்​சாட்டுகள்:

  • டெல்லிக்குக் குடிநீர் அளிக்கும் யமுனை நதியில் ஹரியாணா பாஜக அரசு விஷம் கலந்து​விட்டதாக அர்விந்த் கேஜ்ரிவால் முன்வைத்த அதிர்ச்​சிகரக் குற்றச்​சாட்டு பரபரப்பைக் கிளப்​பியது. ‘ஹரியாணாவின் மைந்தன்’ எனத் தன்னைச் சொல்லிக்​கொள்ளும் அர்விந்த் கேஜ்ரி​வால், அபாண்டமாக அம்மாநிலத்தின் மீது பழிசுமத்துவதாக பாஜகவினர் கடுமையாக விமர்​சித்தனர். தேர்தல் ஆணையம் வரை விவகாரம் கொண்டு​செல்​லப்பட்ட பின்னர், நீரில் அதிகப்​படியான அமோனியம் கலக்கப்​பட்​டதையே அப்படிச் சொன்னதாக அர்விந்த் கேஜ்ரிவால் விளக்​கமளித்​தார்.
  • பூர்வாஞ்சல் பிரதேசத்தைச் சேர்ந்​தவர்கள், டெல்லி தேர்தலில் வாக்களிக்க முறைகேடாக அழைத்து​வரப்​படுவதாக கேஜ்ரிவால் பேசியதும் சர்ச்​சை​யானது. ரோஹிங்கியா முஸ்லிம்​களையும் வங்க தேச முஸ்லிம்​களையும் வாக்காளர்​களாகச் சேர்த்து தனக்கு ஆதரவு தேடிக்​கொள்வதாக ஆம் ஆத்மி அரசு மீது பாஜக குற்றம்​சாட்​டியது.
  • பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு​களில் சிறையில் இருக்கும் பாபா குர்மீத் ராம் ரஹீம், தேர்தல் காலத்தில் பாஜகவுக்குச் சகாயம் செய்யும் வகையில் பரோலில் வெளியே விடப்​படுவதாக ஏற்கெனவே விமர்​சனங்கள் உண்டு. இந்த முறையும் அவருக்குப் பரோல் வழங்கப்​பட்​டிருப்பது சர்ச்​சை​யாகி​யிருக்​கிறது. குடிசைப் பகுதி மக்களின் வாக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைக்​காமல் செய்யும் வகையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் என்கிற போர்வையில் பாஜகவினர் அவர்களுக்குத் தவறாக வழிகாட்டு​வ​தாகக் கடைசி நேரத்தில் இன்னொரு புகாரையும் கேஜ்ரிவால் முன்வைத்​திருக்​கிறார்.

இண்டியா கூட்ட​ணியின் எதிர்​காலம்:

  • இண்டியா கூட்ட​ணியைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலின் மூலம், அதிக இடங்கள், எதிர்க்​கட்சித் தலைவர் அந்தஸ்து எனக் காங்கிரஸுக்குக் கிடைத்த அனுகூலம் பிற கட்சிகளுக்குக் கிடைக்க​வில்லை. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தல்​களிலும் காங்கிரஸுக்குக் கிடைத்த தோல்விகள், கூட்டணிக் குழப்​பங்கள் போன்ற​வற்றால் ஏற்கெனவே புகைச்சல் தொடங்கி​விட்டது. இந்தச் சூழலில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி​யிடுவதாக அறிவித்து​விட்டது. சமாஜ்வாதி கட்சி​யும், திரிணமூல் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து​விட்டன.
  • ஆரம்பத்​தில், டெல்லி தேர்தல் பிரச்​சா​ரத்தில் கலந்து​கொள்​வதில் ராகுல் காந்திக்கு விருப்பம் இல்லை. ஊழல் அரசியல்​வா​திகள் பட்டியலில் ராகுலின் படத்தையும் போட்டு ஆம் ஆத்மி கட்சி அடித்த போஸ்டருக்குப் பின்னர், டெல்லி காங்கிரஸார் அவரை வற்புறுத்திப் பிரச்​சா​ரத்​துக்குக் கொண்டு​வந்​து​விட்​டனர்.
  • ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லி​கார்ஜுன கார்கே போன்ற காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மி, பாஜக இரண்டையும் விமர்​சித்துத் தீவிரப் பிரச்​சாரம் செய்தனர். இந்தச் சூழலில், யாருக்கும் பெரும்​பான்மை கிடைக்​கா​விட்​டால்கூட ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கைகோக்க வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது. ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பம் துடைத்​தகற்​றப்​படும் என்று அமித் ஷா ஆரூடம் கூறியிருக்​கிறார். அது பலிக்குமா என பிப்ரவரி 8 இல் தெரிந்​துவிடும்!

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories