- கோடையை ஒட்டித் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தண்ணீர்ப் பற்றாக்குறை இன்னும் குறையவில்லை. இதனால் டெல்லி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பாக நிகழ்ந்துவரும் அரசியல் மோதல்களும் அயர்ச்சி அளிக்கின்றன.
- டெல்லியின் குடிநீர்த் தேவையில் 40% ஹரியாணா மாநிலத்திலிருந்து வரும் தண்ணீரால் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், டெல்லியில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், தண்ணீர் தர இயலாது என்கிற நிலைப்பாட்டை ஹரியாணா அரசு தொடர்கிறது.
- யமுனா நதிநீர்ப் பங்கீட்டில் தொடர்புடைய இன்னொரு மாநிலமான இமாச்சலப் பிரதேசம் தண்ணீர் தருவதற்கு ஒப்புக்கொண்டாலும், சில நாள்களிலேயே அதிலிருந்து பின்வாங்கிவிட்டது. தண்ணீர்ப் பயன்பாட்டைக் குறைக்கச் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு, இப்பிரச்சினையில் தீர்வை எட்ட முடியாததால் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
- உச்ச நீதிமன்றம் ஹரியாணாவைக் கண்டித்தும் கசிவு காரணமாகத் தண்ணீர் வீணாகாதவாறு கட்டமைப்பை மேம்படுத்தும்படி டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியும் உத்தரவிட்டது. ஹரியாணாவிடமிருந்து தண்ணீர் பெற்றுத் தரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியின் நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி சிங் கடிதம் எழுதியிருந்தார்.
- இதற்குப் பலன் இல்லாத நிலையில், காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை அண்மையில் அறிவித்தார் அதிஷி சிங். மத்தியில் ஆளும் பாஜக அரசு ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசை அறிவுறுத்த மறுப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார். ஐந்து நாள்கள் நடந்த உண்ணாவிரதம், அதிஷி சிங் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் நிறுத்தப்பட்டது.
- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி அரசுக்கு இது பெரும் நெருக்கடிதான். தண்ணீர்ப் பஞ்சம் ஆம் ஆத்மி அரசின் நிர்வாகத் தோல்வி எனக் கூறி பாஜக ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது.
- யமுனா நீரைப் பகிர்வதற்கு காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசமும் முன்வராத சூழலில், ஆம் ஆத்மி அரசு பாஜக ஆளும் ஹரியாணாவை மட்டும் இதில் பொறுப்பாளி ஆக்குவது ஏன் என்கிற கேள்வியைப் புறக்கணிக்க முடியாது. இதற்கு வலுசேர்ப்பதுபோல, காங்கிரஸின் டெல்லி பிரிவுத் தலைவர், உண்ணாவிரதம் மூலம் அதிஷி சிங் அரசியல் விளம்பரம் தேடுவதாக விமர்சித்துள்ளார்.
- ஒவ்வொரு கோடையிலும் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் டெல்லி அரசு, இம்முறையாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். நீரைக் கொண்டுவரும் கட்டமைப்பு பழுதடைந்து கசிவு காரணமாக நீர் விரயமாவதை டெல்லி அரசு தடுக்க வேண்டும். டெல்லியில் வரம்பு மீறி நிகழும் மக்கள் குடியேற்றம், இப்பிரச்சினைக்கு முதன்மைக் காரணம். அத்துடன், நதிநீர்ப் பங்கீட்டில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்குமான ஒத்திசைவு, சக மாநிலங்களுக்கு இடையிலான இணக்கம் போன்றவை கானல்நீர்தானா என்கிற கேள்வியையும் டெல்லி நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன.
- கட்சி வேறுபாடுகளைக் கடந்து, அடிப்படைப் பிரச்சினைகளில் தாயின் பரிவோடு மத்திய அரசு நடந்துகொள்வதில்தான் இந்திய அரசியல் அமைப்பின் கூட்டாட்சித் தத்துவம் தக்க வைக்கப்படுகிறது. தற்போது டெல்லியில் பெருமழை காரணமான சிக்கல்கள். இயற்கையின் போக்கை மாற்ற இயலாது.
- ஆனால், அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் தங்கள் சுயநலக் கணக்குகளைக் கைவிட்டு, நிர்வாகக் கோளாறுகளைச் சரிசெய்வது சாத்தியமானதுதான். அதை நோக்கிய பயணத்தை அனைத்துத் தரப்பினரும் மேற்கொண்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு தேட வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 07 – 2024)