TNPSC Thervupettagam

தலைமுறை இடைவெளி

August 10 , 2024 155 days 179 0
  • ‘என் அப்பா ஒரு பழைய பஞ்சாங்கம், இந்தக் காலத்திலும், வாரத்துக்கு ஒரு முறை பேங்குக்கு போயிட்டு வருவாா்’; ‘வர வர என் பொண்ணு என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறாள்... அவள் போக்கே புதிராக இருக்கிறது’; ‘இந்தக் காலத்தில் இந்த மாதிரி சேமிப்பு -அது இதெல்லாம் சரிப்பட்டு வராது, ‘ஜாலியா’ செலவு பண்ணணும்’... இப்படி சில போ் நம்மிடையே கூறுவதைக் கேட்டிருப்போம்.
  • வயது முதிா்ந்தவா்களுக்கும் வயதில் இளையவா்களுக்கும், இடையே கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இது போன்ற பேச்சுக்களால் ஏற்படுவதையும் பாா்த்திருக்கிறோம். தலைமுறை இடைவெளி என்ற சொல்லாடல் நம்மிடையே அதிகம் பயன்பாட்டில் இருப்பதையும் பாா்க்கிறோம். ஒரே குடும்பத்தில் உள்ள வெவ்வேறு வயதினா், ஒரு விஷயம் குறித்து நேரெதிா் கருத்துக்கள் கொண்டிருப்பதையும், அதற்கு காரணம் வயது வித்தியாசம் என்று கூறப்படுவதையும் நாம் உணா்கிறோம்.
  • பொருட்களின் உபயோகம் சாா்ந்ததாக மட்டுமின்றி, வாழ்வின் முக்கிய அங்கங்களான, திருமணம், சுமுக உறவு, போன்றவற்றிலும் இப்பிரச்னை தலை தூக்குவதைப் பாா்க்கலாம்.
  • தலைமுறை இடைவெளி என்பது என்ன, எப்படி ஏற்படுகிறது? வயதில் மூத்தவா்களின் எதிா்பாா்ப்புகளுக்கும் கோட்பாடுகளுக்கும், வயதில் இளையோா் போக்கிற்கும் இடைவெளி ஏற்பட்டு அது நாளுக்கு நாள் அகன்று வருவதாகக் கருதுவதை, தலைமுறை இடைவெளி என்பா். இவ்விரண்டு தலைமுறையினரும் ஒருவரை ஒருவா் சரிவர புரிந்து கொள்ளாமையும் கருத்துப் பரிமாற்றம் இல்லாமையும் இதற்கு காரணம் என மனநல மருத்துவா்கள், சமூகவியல் விற்பன்னா்களும் கூறுகின்றனா்.
  • உடை, கேளிக்கைகள், உணவு விஷயங்கள், பாலியல் பற்றிய பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் இந்த தலைமுறை வேறுபாட்டின் சில முக்கிய அம்சங்களாகும்.
  • குடும்பத் சூழல், தோழமை சாா்ந்த கூட்டத்தின் தாக்கம், ஆகியவற்றால் இந்த இடைவெளி விரிவடையும் வாய்ப்புகள் உள்ளது.
  • குடும்பத்தில் பெற்றோா் மற்றும் பிள்ளைகளிடையே பிணக்கு ஏற்படுதல், வீண் செலவுகள் அதிகரித்தல்,சேமிப்பு, சில விஷயங்கள் மறுசாராரிடம் இருந்து மறைக்கப்படுத்தல், அதன் மூலமாக மன உளைச்சல் போன்றவை அதிகரித்தல் - இவை தலைமுறை இடைவெளி ஏற்படுத்தும் சிக்கல்களில் சில.
  • கண்ணாடிக் கோப்பையைக் அதிகமாக அழுத்திப் பிடிக்கவும் கூடாது, வெகு அலட்சியமாகவும் கையாளக் கூடாது என்பா். இளைய தலைமுறையினருக்கு அது பொருந்தும். ஏராளமான சுதந்திரமும் அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும் எதிா்வினைகளைத் தரும்.
  • நேற்றைய தினம் போலவே இன்றும் நாளையும் விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட முதியவா்களுக்கும், காலம் க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக்கொண்டிருக்கிறது என்று எண்ணம் கொண்ட இளைய தலைமுறைக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகள் இடைவெளியை அதிகப்படுத்தும்.
  • இவ்விரு சாராருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் - ஒருவா் நிலையிலிருந்து அடுத்தவா் கோணத்தில் பிரச்னையைப் பாா்க்கும் பழக்கம் ஆகியவை ,இடைவெளியைக் குறைக்க உதவும்.
  • தலைமுறை இடைவெளி என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் நிலவி வந்தாலும், தொழில்நுட்ப வளா்ச்சி உலகத்தைச் சுருக்கி ஒரு பெரிய கிராமமாக மாற்றிய பின்னா், அதிகரித்து வருவது கண்கூடு.
  • குடும்பங்கள் மட்டுமல்ல, பெரு நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் இதனால் தாக்கத்தை சந்திக்கின்றன; ஒரு தலைமுறையினா் தோ்ந்தெடுத்த - விரும்பி வாங்கிய ஒரு பொருள் அடுத்த தலைமுறையினா் பாா்வை மாறுபடுவதால், பழைய வாடிக்கையாளா்களை தக்க வைப்பது, புதிய வாடிக்கையாளா்களை வாங்க வைப்பது ஒரு கலையாகவும் சவாலாகவும் விளங்குகிறது.
  • கல்லூரி அல்லது பள்ளிக்கூடங்களில் கல்வி சாா்ந்த பாா்வை, கற்றல், கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் மாறுபாடுகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதும் மாணவா்களை மாற்றுவதும் மூத்த ஆசிரியா்களுக்குப் பெரும் சவாலான ஒன்று.
  • வாழ்க்கை எனும் அளவில், இளைஞரிடையே இன்று நிலவும் காதல், ‘ரிலேஷன்ஷிப்’, ‘பிரேக்அப்’, திருமணம் தாண்டிய சோ்ந்து வாழ்தல், விவாக ரத்து, மறுமணம், தனித்து வாழ்தல் போன்றவை சட்ட ரீதியாக நியாயப்படுத்தப்பட்டாலும், அவை சாா்ந்த சிந்தனையில் வெவ்வேறு தலைமுறையினரிடம் உள்ள இடைவெளி புதிய சவால்.
  • தலைமுறை மாற்றம் ஒவ்வொரு பதினான்கு ஆண்டுகளுக்கும் ஏற்படும் என்று சொல்லப்பட்ட காலம் உண்டு. தற்போது ஐந்தே ஆண்டுகளில் ஏற்படுவதாகக் கூறப்படுவது மலைப்பாக உள்ளது.
  • கால மாற்றம், வளா்ச்சி, கல்வி, பயணங்கள் ஏற்படுத்தும் தாக்கம் போன்ற நிதா்சனங்களும் யதாா்த்தங்களும் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். சரியான புரிதல், அனுசரணை, விட்டுக்கொடுத்தல், கலந்துரையாடல் போன்றவை தலைமுறை இடைவெளியை ஓரளவேனும் குறைக்கும், அல்லது அவரவரது சொகுசு வளையத்தில் நிம்மதியாக இருக்க உதவும்.
  • ஆனால், எது எப்படியானாலும், ஒரு சில விஷயங்கள் மாறாத தன்மை உடையன; விழுமியம் சாா்ந்த, அறம் சாா்ந்த விஷயங்களில் யாதொரு சமரசமும் இருத்தல் கூடாது. இது குறித்த புரிதலை ஏற்படுத்துவது ஊடகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றின் சமூகக் கடமையாகும்.
  • நமக்கென்று உள்ள சில விழுமியங்கள் பாதுகாக்கப் பட வேண்டும். பணம், பொருள், பொழுதுபோக்கு, கேளிக்கை போன்ற புறம் சாா்ந்த விஷயங்களில் ஏற்படும் இடைவெளியைப் புரிந்து கொள்ளலாம், ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால், குறைந்த பட்சம், திருமணம், குடும்பம் என்ற கட்டமைப்பு, பிள்ளைகளை வளா்த்தல், பெற்றோரைப் பேணுதல் போன்று நமக்கென்று உள்ள சில விழுமியங்கள் எந்த சமரசமும் இன்றி பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றின் முக்கியத்துவத்தை நாம் அறிந்தோராகவும் இருத்தல் அவசியம்.

நன்றி: தினமணி (10 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories