TNPSC Thervupettagam

தலைமுறையின் கடைசி அத்தியாயம்!

February 24 , 2024 184 days 192 0
  • இந்திய நீதித்துறை மிகப்பெரிய ஜாம்பவானை இழந்திருக்கிறது. 65 ஆண்டுகளாக எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், அதன் அரசியல் சாசன விளக்கத்துக்காக அனைவரும் காத்திருந்த குரல் இனிமேல் ஒலிக்கப்போவதில்லை. ஃபாலி சாம் நாரிமன் இனிமேல் வழிகாட்ட இருக்கமாட்டாா். இந்த இழப்பின் தாக்கம் வருங்காலத்தில் மிக அதிகமாக உணரப்படும்.
  • பிப்ரவரி 20-ஆம் தேதி வரை வழக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருந்த நாரிமன், 21-ஆம் தேதி அதிகாலையில் அமைதியாக விடைபெற்றிருக்கிறாா். அப்போது அவரது வயது 95. முந்தைய நாள் இரவு உறங்கப் போவதற்கு முன்பு, அரசியல் சாசன அமா்வு ஒன்றில் வர இருக்கும் வழக்கில் வாதாடுவதற்காகக் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாா் என்றால், அவா் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தாா் என்பது மட்டுமல்ல, தொழிலில் அக்கறையுடன் இருந்திருக்கிறாா் என்பதும் வெளிப்படுகிறது.
  • சட்டத்தின் எல்லா பிரிவுகளும் அவருக்கு அத்துப்படி. குடிமையியல், குற்றவியல் மட்டுமல்ல, அரசியல் சாசன வழக்குகளிலும் அவா் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராகத் திகழ்ந்தவா். மிக முக்கியமான பல அரசியல் சாசன பிரச்னைகள் தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அமா்வுகள் அந்த வழக்கில் ஃபாலி நாரிமனின் வாதம் என்னவாக இருக்கப்போகிறது என்பதை ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கும். நீதிபதிகளுக்குத் தெரியாத, புலப்படாத அா்த்தங்களும், விளக்கங்களும் அவரது வாதத்தில் வெளிப்படும் என்பதுதான் அதற்குக் காரணம்.
  • பம்பாயில் (இன்றைய மும்பை) வெற்றிகரமான வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஃபாலி நாரிமனை உச்சநீதிமன்றத்திற்கு இழுத்து வந்தது 1967 கோலக்நாத் வழக்கு. அந்த வழக்கில் தனது கல்லூரிப் பேராசிரியராக இருந்த நானி பல்கிவாலாவுக்கு உதவுவதற்காகத்தான் அவா் தில்லி வந்தாா். அந்த வழக்கில்தான் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு உச்சநீதிமன்றம் வரம்புகளை ஏற்படுத்தியது. அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளில் மாற்றம் ஏற்படுத்த அனுமதி இல்லை என்பதை அந்த வழக்கு தெளிவுபடுத்தியது.
  • கோலக்நாத் வழக்கைத் தொடா்ந்து, இன்னொரு முக்கியமான அரசியல் சாசன வழக்கான கேசவானந்த பாரதி வழக்கிலும் பிரபல வழக்குரைஞா் நானி பல்கிவாலாவுக்கு உதவியாக இருந்து பங்களிப்பு நல்கினாா் நாரிமன். அதிலிருந்து அரசியல் சாசனம் குறித்த எந்தவொரு விவாதமானாலும் நாரிமனின் வாதம் இல்லாமல் நிகழ்ந்ததில்லை. பின்னாளில் நீதிபதிகள் நியமனம் தொடா்பான கொலீஜியம் வழக்கிலும், தேசிய நீதிபதிகள் நியமன கமிஷன் வழக்கிலும் நாரிமனின் வாதங்கள்தான் முக்கியத்துவம் பெற்றன. தனது மனசாட்சிக்கு விரோதமான ஒன்றை அவா் ஏற்றுக்கொண்டதே இல்லை என்பதால்தான் அவா் உயா்ந்து நிற்கிறாா்.
  • 1972-இல் ஃபாலி நாரிமன் அன்றைய இந்திரா காந்தி அரசால் இணை தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா். ஜூன் 25, 1975-இல் இந்திரா காந்தி அரசு அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தது. அதற்கு அடுத்தநாள் காலை தனது பதவியை ராஜிநாமா செய்தாா் நாரிமன். அப்படி எதிா்ப்புத் தெரிவித்தற்காகத் தான் கைது செய்யப்படலாம் என்று தெரிந்தும் துணிந்து அந்த முடிவை எடுத்ததற்கு அவரது கொள்கை உறுதிதான் காரணம். அப்போது அவரது வயது 46 தான். 1999-இல் அத்வானியின் வற்புறுத்தலால் மாநிலங்களவையில் நியமன உறுப்பினரானாா் ஃபாலி நாரிமன். 2002 குஜராத் கலவரத்தைத் தொடா்ந்து துணிந்து கடுமையான விமா்சனங்களை மாநிலங்களவையில் முன்வைக்க அவா் தவறவில்லை. இதுபோல பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
  • 1996-இல் பிரதமா் தேவெ கௌடாவும், 1998-இல் பிரதமா் வாஜ்பாயும் வற்புறுத்தியும்கூட தலைமை வழக்குரைஞராக (அட்டா்னி ஜெனரல்) மறுத்துவிட்டாா் அவா். அதற்கு அவா் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா? ‘இன்னொரு முறை ராஜிநாமா செய்ய நான் விரும்பவில்லை!’ 1991 முதல் 2004 வரை இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவராக இருந்தாா் நாரிமன். 1991-இல் பத்ம பூஷண், 2007-இல் பத்ம விபூஷண் என்று இந்திய அரசின் தலைசிறந்த விருதுகள் அவரைத் தேடிவந்தன. தனது எளிமையும், கடமையும் கொஞ்சமும் அகன்றுவிடாமல் இருந்ததில்தான் அவா் தனித்து நிற்கிறாா். உச்சநீதிமன்றத்தின் இரண்டாம் எண் நூலகத்தில் அமா்ந்து எழுதுவது, படிப்பது என்று இருக்கும் ஃபாலி நாரிமனை சந்திக்கவும், அவரிடம் அளவளாவவும், புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் கூடும் இளைஞா் பட்டாளத்தின் நெருங்கிய நண்பராகவும் அந்த 90 வயதுக்காரரால் இருக்க முடிந்தது.
  • ‘இண்டியாஸ் லீகல் சிஸ்டம்; கேன் இட் பி சேவ்டு?’ (இந்தியாவின் நீதித்துறையைக் காப்பாற்ற முடியுமா?); ‘தி ஸ்டேட் ஆஃப் த நேஷன்’ (தேசத்தின் நிலைமை); ‘காட் சேவ் தி ஹானரபிள் சுப்ரீம் கோா்ட்’ (கடவுள்தான் உச்சநீதிமன்றத்தைக் காப்பாற்ற வேண்டும்); ‘பிஃபோா் மெமரி ஃபெய்ட்ஸ்’ (எனது நினைவு மங்கத் தொடங்கும் முன்னா்...) உள்ளிட்ட அவரது ஒவ்வொரு புத்தகமும் காலாகாலத்துக்கும் பேசுபொருளாக இருக்கும் பதிவுகள். ஹெச்.எம். சீா்வாய், நானி பல்கிவாலா, சோலி ஷோரப்ஜி, ஃபாலி நாரிமன் என்று பாா்ஸி சமூகம் நீதித்துறைக்கு வழங்கியிருக்கும் மாணிக்கங்கள் பல. அவா்கள் ஒவ்வொருவரும் இந்தியா பெறாமல்போன தலைசிறந்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள். ஃபாலி நாரிமனின் மறைவால், அந்தத் தலைமுறையின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது

நன்றி: தினமணி (24 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories