தலைமை மனநல மருத்துவமனை: ஏன் அரசிடமே இருக்க வேண்டும்?
- சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கிவரும் அரசு தலைமை மனநல மருத்துவமனையின் நிர்வாகத்தில் பல போதாமைகள் இருப்பதாகக் கூறி, இருநூறு வருடங்கள் பழமையான அந்த அரசு நிறுவனத்தைத் தனியார் பொறுப்பில் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனச் சுகாதாரத் துறைச் செயலாளர் பரிந்துரை செய்திருக்கிறார். அரசு மனநல மருத்துவமனையின் போதாமைகளை அரசுதான் சரிசெய்ய வேண்டுமே தவிர, அதன் நிர்வாகத்தில் தனியார் அமைப்புகளை அனுமதிப்பது சரியல்ல.
- இந்த முயற்சி நாளடைவில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் தனியார்மயமாவதில் சென்று முடியும் எனச் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் போன்ற மருத்துவர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக, அரசு மனநல மருத்துவமனையின் நிர்வாகத்தில் தனியாரை அனுமதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார். உலகளவில் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துவரும் சூழலில், ஒரு தலைமை அரசு மனநல மருத்துவமனை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? அது ஏன் அரசு நிர்வாகத்தில் மட்டுமே இருக்க வேண்டும்?
பராமரிப்புக் காப்பகம் மட்டுமல்ல:
- பொதுவாகவே, நீண்ட கால மனநோயாளிகளையும், குடும்பத்தால் கைவிடப்பட்ட மனநோயாளிகளையும் பராமரிப்பது மட்டுமே மனநல மருத்துவமனையின் பணி என்கிற புரிதல்தான் இங்குள்ளது. அதனால்தான் பெரும்பாலானவர்கள் மனநல மருத்துவமனையை ‘மனநலக் காப்பகம்’ என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். உள் நோயாளிகளைப் பராமரிப்பது மனநல மருத்துவமனையின் முக்கியமான பணியாக இருந்தாலும், மனநல மருத்துவமனை என்பது வெறும் பராமரிப்புக் காப்பகம் மட்டுமே அல்ல.
உண்மையில், ஒரு மாநிலத்தின் தலைமை மனநல மருத்துவமனைக்கு நான்கு வகைப் பணிகள் இருக்கின்றன:
- நீண்ட நாள் மனநோயாளிகளைப் பராமரிப்பது, அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களை வகுப்பது, சமூகத்தோடு அவர்களை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது;
- மனநலப் பிரச்சினைகள், மனநோய்கள் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை வழங்குவது, அதன் வழியாக மனநோயினால் வரக்கூடிய இழப்புகளைத் தடுப்பது; இந்த மனநலச் சேவைகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது;
- ஒரு சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் மனநலத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, அதற்கான செயல் திட்டங்களை உருவாக்குவது, அதை அரசுக்குப் பரிந்துரை செய்வது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், போதைப் பொருள்கள், பேரிடர்கள், அரசின் புதிய கொள்கை முடிவுகள் போன்ற பல்வேறு சமூக அவலங்களால் ஏற்படக்கூடிய அவசர, நீண்ட நாள் மனநல பாதிப்புகளை ஆராய்ச்சி செய்வது / அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்வது;
- ஒரு கல்வி நிறுவனமாக இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்பு, மன நலம் சார்ந்த பிற படிப்புகளுக்குப் பயிற்சியளிப்பது. இந்த நான்கு பணிகளையும் திறம்படச் செய்ய வேண்டியதுதான் ஒரு தலைமை மனநல மருத்துவமனையின் பொறுப்பு. இந்தப் பணிகளை எந்தவித நெருக்கடிகளும் இல்லாமல் செய்வதன் மூலமாகவே ஒரு சமூகத்தில் மனநலப் பிரச்சினைகளும், மனநோய்களும் அதிகரிப்பதைத் தடுத்து ஆரோக்கியமான சமூகமாக வாழ வைக்க முடியும்.
- பராமரிப்பும் ஒருங்கிணைப்பும்: ஒரு மாநிலத்தில் தலைமை மனநல மருத்துவமனையின் மிக முக்கியமான பணி இதுவே. மனநோய்கள் மீது இந்தச் சமூகத்தில் நிலவக்கூடிய களங்கப் பார்வையின் காரணமாக, முழுமையாகக் குணமடைந்த பின்னரும்கூட, மனநோயாளிகளைத் திரும்ப அழைத்துச் செல்லாத நிலை இங்கிருக்கிறது. இதனால் இந்த நோயாளிகள் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, மனநல மருத்துவமனைகளிலேயே தங்கிவிடுகிறார்கள். கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் கிட்டத்தட்ட 800 நோயாளிகள் இப்படி இருக்கிறார்கள்.
- இவர்களைப் பராமரித்து மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும். அதேபோல மனநல சிகிச்சையே கிடைக்காமல், நோய் முற்றிய நிலையில் சாலைகளில் கைவிடப்பட்ட மனநோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சரியான சிகிச்சையளித்து, அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இந்தப் பணிக்காகத் தமிழக அரசு சில அரசு சாரா நிறுவனங்களுடன் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டிருக்கிறது. மாவட்டம் முழுக்க இப்படிப்பட்ட நோயாளிகளுக்கான மீட்பு மையங்களை அரசு தனியாகவும், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்தும் சமீப காலத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆரம்பத்திலேயே சிகிச்சை:
- இந்தியாவைப் பொறுத்தவரையில், மனநோய்களுக்கும், அதற்கான சிகிச்சைக்குமான இடைவெளி மிக அதிகம். அதாவது, மனநலப் பிரச்சினை இருப்பவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு அதற்கான சிகிச்சையே கிடைப்பதில்லை என்கிறது ஆய்வு. இந்த இடைவெளியைக் குறைத்து மனநலப் பிரச்சினைகளையும், மன நோய்களையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கான முழுமையான சிகிச்சையை அளிப்பதும் தலைமை மனநல மருத்துவமனையின் முக்கியமான பணி.
- இந்த மனநலச் சேவையை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதும் அதை ஒருங்கிணைப்பதும், மேற்பார்வையிடுவதும் அதன் பணியே. அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களையும், மனித வளத்தையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மாவட்ட மனநலத் திட்டங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை, ஆரம்பச் சுகாதார நிலையங்கள் என அனைத்து மருத்துவமனைகளிலும் மனநலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சைகள் முழுமையாகக் கிடைக்கின்றன. இந்தத் திட்டங்களையும் சென்னை அரசு தலைமை மனநல மருத்துவமனையே ஒருங்கிணைக்கிறது.
அரசு செய்ய வேண்டியவை:
- ஒரு சமூகத்தின் மனநலத்தை மேம்படுத்துவது என்பது அரசுடன் கைகோத்து செய்ய வேண்டிய பணி. மாணவர் தற்கொலைகள் அதிகரிப்பது, போதைப் பழக்கம், பேரிடர்கள், வேலையிழப்பு, தொற்றுநோய், ஊரடங்கு, காலநிலை மாற்றம் போன்ற சமூக அவலங்களினால் உருவாகக்கூடிய மனநலப் பாதிப்புகள் மிகவும் மோசமானவை.
- இவை தொடர்பாக அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வதும், அவற்றுக்கான தீர்வுகளை இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பெறுவதும், அதை அரசுக்குப் பரிந்துரை செய்வதும் மிகவும் முக்கியமான பணி. மக்களின் மனநிலையை மேம்படுத்துவதன் வாயிலாகவே நம்மால் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க முடியும். இதற்காக அதிசிறந்த உயர் படிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.
- மாநில அரசு தலைமை மனநல மருத்துவமனையே இந்தப் பணிகளைத் திறம்படச் செய்யவும் ஒருங்கிணைக்கவும் வேண்டும். இந்த நான்கு பணிகளும், (குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பணிகள்) மாநில அரசின் கொள்கை முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால், அதை எந்தக் காலத்திலும் தனியாரிடம் ஒப்படைப்பது சரியானதல்ல.
- நீண்ட கால நோயாளிகளைப் பராமரிப்பதிலும், மனநலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சையை வழங்குவதிலும், அதை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதிலும் அரசு தலைமை மனநல மருத்துவமனை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. ஆனால், அதிசிறந்த ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதிலும், மனநல மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுப்பதிலும், அதற்கான நவீன அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், உயர் சிறப்புப் படிப்புகளை உருவாக்குவதிலும் பல போதாமைகள் இருக்கின்றன.
- அதற்குக் காரணம் தேவையான கட்டமைப்பு வசதிகள் அங்கு இல்லை. அதனால்தான் நீண்ட காலமாக மனநலத் துறையில், ஓர் அதிசிறந்த (State of Art) நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்துவருகிறது. தற்போதைய அரசும்கூட அப்படி ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது.
- சமூக நீதியையும், விளிம்பு நிலை மக்களின் நலனையும் அடிப்படையாக கொண்டிருக்கும் இந்த அரசு, ஒருபோதும் மனநல மருத்துவமனை நிர்வாகத்தில் தனியாரை அனுமதிக்காது என நம்புகிறோம். அமைச்சரும் அதற்கு உறுதிஅளித்திருப்பதால், இந்த நம்பிக்கை இன்னும் வலுவடைந்திருக்கிறது. நம்பிக்கை பலிக்க வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 11 – 2024)