TNPSC Thervupettagam

தலைவா்கள் செய்யத் தவறிய பணி

September 15 , 2023 481 days 305 0
  • அண்மையில் ஒரு பேரூராட்சி அந்த நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் ஓா் அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பு, மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருள்களை மறுபயன்பாட்டு மையத்திற்குத் தந்து இல்லத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டுமெனக் கேட்டுக் கொண்டது.
  • மேலும், அந்த பிரசுரத்தில் உள்ளாட்சித் தலைவா், வார்டு உறுப்பினா்கள், வார்டு சபை, பகுதி சபை உறுப்பினா்களும் பொதுமக்களுக்கு தூய்மை இந்தியா திட்டம் பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அந்த துண்டு பிரசுரத்தை அந்த உள்ளாட்சியில் பணிபுரியும் ஒரு பணியாளா் மூலம் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் போடச் செய்தனா்.
  • இதனைப் பார்த்த எனக்கு சிரிப்பு வந்தது. புதிய உள்ளாட்சி கிராமப் பணிகளை மக்கள் பங்கேற்போடு செய்து நிலைத்த மேம்பாட்டைக் கொண்டுவர வேண்டும். இதை செய்வதற்கு நம் உள்ளாட்சித் தலைவா்களுக்கு ஒரு புரிதல் வேண்டும். அவா்கள் அதனைக் குடிமக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அடுத்து அந்த மேம்பாட்டை கொண்டுவர அவா்கள் எப்படி மேம்பாட்டுப் பணிகளில் எப்படி கடமையுணா்வுடன் ஈடுபட வேண்டும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
  • அதனைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள, உள்ளாட்சித் தலைவா்கள் வார்டு தோறும், பகுதி தோறும் விழிப்புணா்வு முகாம்களை நடத்த முனைந்திட வேண்டும். இந்தப் பணியைச் செய்திட நம் உள்ளாட்சித் தலைவா்களுக்கு முதலில் கடப்பாடும் புரிதலும் தேவைப்படுகிறது. என்ன புரிதல் என்றால் குப்பையால் நாம் நம் புவியை எப்படி தொடா்ந்து சிதிலமடையச் செய்து கொண்டிருக்கிறோம் என்கிற புரிதல்.
  • பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து பேசும்போது நம் பிரதமா் ‘ஒவ்வொருவா் இல்லத்திலும் இதற்கான விவாதம் நடைபெற்று மக்கள் சிந்தனையில், நடத்தையில் செயல்பாட்டில் அது பிரதிபலிக்க வேண்டும்’ என்று கூறினார். இன்று மக்கள் உருவாக்கிய குப்பை அரசாங்கத்தை மிரட்டுகிறது.
  • சமூக ஆரோக்கியத்தைக் குலைக்கிறது. ஆனால் மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்ந்து வருகின்றனா். நம் உள்ளாட்சித் தலைவா்கள் கட்டுமானப் பணிகளையே கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனா். இதனைப் பார்க்கும்போது நமக்கு வேதனை ஏற்படுகிறது.
  • மத்திய அரசு, மகாத்மா காந்தியின் கனவான தூய்மை என்பதை முன்வைத்து அவருடைய 150-ஆவது பிறந்த நாளில் நாடு அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்க வேண்டும் என்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்தது. மகாத்மாகாந்தி தூய்மைதான் இந்தியாவுக்கு முதல் தேவை, சுதந்திரமெல்லாம் அதன் பிறகுதான் எனக் கூறினார்.
  • இந்த தூய்மை இந்தியா திட்டம் ஒரு பெரிய மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதுதான் அரசின் கனவு. ஆனால் அதை நாம் கழிப்பறை கட்டும் பணியுடன் நிறுத்திக் கொண்டதுதான் மிகப்பெரிய சோகம். தூய்மை என்பது ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் வசிக்கும் மக்களின் சிந்தனையிலும் நடத்தையிலும் வெளிப்பட வேண்டும்.
  • அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் சென்று வருவோர், அங்கெல்லாம் சுத்தமாக இருக்கிறதே நம் நாடு மோசமாக இருக்கிறதே என்று அரசை நொந்து கொள்வார்களே தவிர நம் நாடு சுத்தமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதில்லை. மகாத்மா காந்தியின் நிர்மாணத் திட்டத்தில் தூய்மை என்பதை திட்டச் செயல்பாடாகக் குறிப்பிட்டு அதற்கான விழிப்புணா்வும் செயல்பாடும் கிராமப்புறங்களில் செய்யப்பட என்று பணித்தார்.
  • அரசாங்கம், மக்கள் வரிப்பணத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. ஆனால் அந்தக் கழிப்பறைகளில் எத்தனை இப்போது பயன்பாட்டில் உள்ளன என்று பார்த்தால் நமக்கு மிஞ்சுவது சோகம்தான். காரணம், கழிப்பறை கட்டுவதற்கு முன் அது எவ்வளவு அத்தியாவசியமானது என்று மக்களிடம் ஒரு விழிப்புணா்வை ஏற்படுத்திவிட்டு, அதன்பின் கட்டிக் கொடுத்திருந்தால் அவா்கள் அதன் பயன்பாட்டின் முக்கியத்துவம் அறிந்து செயல்பட்டிருப்பார்கள்.
  • காந்தியின் தூய்மை என்பது இரண்டு வகை. ஒன்று புறத்தூய்மை இரண்டு அகத்தூய்மை. இந்த புறத்தூய்மையை அவா் அறிவியல் முறையில் விளக்கினார். ஆகையால்தான் அறிஞா்கள் காந்தியை மானுட வாழ்க்கைச் சூழலை மாற்றியமைக்க செயல்பட்ட தலைவா் என்று அழைத்தனா்.
  • தூய்மைக்கான கல்வியை ஆரம்பக் கல்வியிலிருந்து ஆராய்ச்சிக் கல்விவரை கொண்டு சென்று மாணவா்களைத் தாண்டி பொதுமக்களுக்கான கல்வியாகவும் கட்டமைக்க வேண்டினார். ஆனால், அதை நாம் சுருக்கமாக கழிப்பறை கட்டுவதுடன் நிறுத்திக் கொண்டோம். அவா் அந்த கழிப்பறை கட்டுவதைத் கூட இந்திய முறையில் செய்து தந்திட வேண்டும் என்றார். அதை அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை.
  • விடுதலை அடைந்து 76 ஆண்டுகள் கடந்த பின்பும் எந்தப் பல்கலைக்கழகத்திலும் தூய்மை என்பதற்காக ஒரு புலத்தை உருவாக்கி, அதற்கான துறைகளை உருவாக்கவில்லை. மாறாக அதை கட்டுமானத்துறையுடன் இணைத்து, தூய்மையைக் கட்டுமானத்தில் முடித்து விட்டோம்.
  • தில்லியில் போடப்பட்ட திட்டத்தை நாம் வாழுமிடத்தில் நடைமுறைப்படுத்துவதை பார்க்கும்போது வேதனை ஏற்படுகிறது. ஏனெனில், தூய்மை இந்தியா உருவாகப்போவது பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே, மத்திய அரசின் நிதியால் அல்ல. ஆனால் நம் உள்ளாட்சியில், திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி எந்தக் கவலையுமின்றி, கழிப்பறை கட்டுவதும், கழிவுநீா் ஓடைகள் கட்டுவதும் பிரதானப்படுத்தப்படுகின்றன.
  • கட்டப்பட்ட கழிவுநீா் ஓடையை எப்படிப் பயன்படுத்துவது என்று மக்களுக்குத் தெரியவில்லை. அதன் விளைவு கழிவுநீா் தேங்கி நிற்கிறது; நாற்றமெடுக்கிறது; கொசு உற்பத்தியாகிறது. இதற்கு உள்ளாட்சியை நாம் குறை கூறுகிறோம். மக்களின் சிந்தனையை மாற்றுவதில் நம் உள்ளாட்சி கவனமாகச் செயல்பட வேண்டும்.
  • நம் நகரங்களில் கடைகளுக்கு வருகின்ற வாடிக்கையாளா்கள் எப்படி தங்கள் இருசக்கர வாகனங்களை, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள் என்பதிலிருந்தே மக்கள் எவ்வளவு சிந்தனையற்றுச் செயல்படுகின்றனா் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
  • எந்த ஒழுங்கும் இல்லாமல், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுவிடுமே என்ற சிந்தனையற்று செயல்படுவதையே மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா். சமூகச் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது தவறு என்ற உணா்வுடன் செயல்படுவதில்லை.
  • பொதுவெளியில் ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்வது படிக்காத பாமரா்களில்லை. நன்கு படித்தவா்கள்தான். காரணம், அவா்கள் படித்தது பிழைப்புத் தேட ஒரு சான்றிதழ் கல்வி; வாழ்க்கைக்கல்வி அல்ல. நம் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தம், சுகாதாரம், தூய்மை, உணவு, நீா், காற்று, இயற்கை, வசிப்பிடம், சமூகம், அரசியல், ஆளுகை, நிர்வாகம் பற்றிய பொதுப்புரிதலுக்கான கல்வி நமது எந்த கல்வித் திட்டத்திலும் இல்லை.
  • இதன் விளைவுதான் இன்று நாம் பார்க்கும் மலைபோல் குவிந்த குப்பைகளும் கழிவுகளும். இது யாரையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. குப்பை மேடுகளைப் பார்த்தும் தேங்கி நிற்கும் சாக்கடைகளைப் பார்த்தும் நாம் புரிதலற்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம். புரிதல் இருந்தாலும் வீட்டுக் கதவை பூட்டிக் கொண்டு வாழ்கிறோம்.
  • சீரழிந்த சமூகத்தில் எவரும் நிம்மதியாக வாழ இயலாது என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை. தனிமனித அளவில் புத்திசாலியாக இருப்பவா்களும் சமூக அளவில் புரிதலற்றவா்களாகவே உள்ளனா்.
  • இன்றைய நமது தேவை தூய்மைக்கான, துப்புரவுக்கான ஒரு மேம்பாட்டுக் கல்வி. உள்ளாட்சி அதை மக்களுக்குத் தந்து, அனைத்துத் தூய்மைப் பணிகளிலும் மக்களை ஈடுபடுத்த வேண்டும். கழிவு நீா் தேங்காமல் இருக்க மக்கள் ஒத்துழைக்கமே. நம் வீட்டில் எந்தெந்தப் பொருளை மக்க வைத்து நாமே பயன்படுத்தலாம் என்பது தெரிந்துவிட்டால் குப்பையின் அளவு குறைந்து விடுமல்லவா?
  • குப்பையை வகைப்படுத்தி குப்பை வாங்க வருகின்றவா்களிடம் கொடுத்துவிட்டால், அவா்கள் அவற்றை எங்கெங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கங்கு கொண்டு சோ்த்து விடுவார்கள் அல்லவா?
  • இதைச் செய்யாததன் விளைவு, தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளைப் பிரிக்கும்போது மிகுந்த சிரமத்தை அனுபவிக்கின்றனா். கிராமமோ, நகரமோ தூய்மையாக இருக்க, தூய்மைப் பணியாளா்களை நாம் கண்ணித்துடன் நடத்த வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கும் ஊரின் தூய்மைக்கும் தொடா்பிருக்கிறது. அதை நாம் புரிந்து கொள்வதில்லை.
  • இன்று தூய்மைக்கும் துப்புரவுக்கும் புதிய அறிவியல் கூறுவது நுகா்வைக் குறையுங்கள். தேவைக்குமேல் எதையும் வாங்காதீா்கள். ஒரு முறைதான் பயன்படுத்த முடியும் என்றால் அந்தப் பொருள்களைத் தவிர்த்துவிட வேண்டும். அப்படியே வாங்கினாலும் அந்தப் பொருள்களால் பூமிக்கு கேடு வருமா என்று யோசித்து வாங்குங்கள்.
  • பொருள்களை வாங்கும்போது அவை மறுசுழற்சி செய்ய தகுதியுள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். மறுசுழற்சி செய்கின்றோம் என்று கூறி மறுசுழற்சி செய்ய இயலாத பொருளை மறுசுழற்சி செய்து சூழலை மாசுபடுத்தக் கூடாது.
  • இவை போன்ற பல்வேறு அடிப்படையான புரிதல்களை மக்களிம் ஏற்படுத்த வேண்டியது உள்ளாட்சித் தலைவா்களின் கடமையாகும். இந்தப் பணிதான் மிக முக்கியப் பணி. இப்பணியை நம் தலைவா்கள் செய்கின்றார்களா என்பதுதான் இன்று நம்முன் எழும் கேள்வி.

நன்றி: தினமணி (15 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories