TNPSC Thervupettagam

தளபதியின் எச்சரிக்கை!| இந்திய விமானப் படையை நவீனப் படுத்த வேண்டியதன் அவசியம்

October 3 , 2019 1737 days 780 0
  • விமானப் படையில் கடந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற்ற ஏர் சீஃப் மார்ஷல் டி.எஸ்.தனாவ் விடுத்திருக்கும் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளத்தக்கது.
  • நமது விமானப் படையின் மிக் - 21 ரக விமானங்கள் உருவான காலத்தைச் சேர்ந்த மோட்டார் வாகனங்கள் சாலைகளில் இப்போது இல்லை என்பதிலிருந்து, எந்த அளவுக்குப் பழைமையான விமானங்களுடன் இந்திய விமானப் படை செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். 
எம்ஐ - 17
  • கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி பட்காமில் எம்ஐ - 17 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அதற்குக் காரணம், பாகிஸ்தானிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்திய விமானப் படையிலிருந்தே செலுத்தப்பட்ட ஏவுகணையால் அந்த ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது.
  • ஜம்மு - காஷ்மீர் மாநிலம் நவ்ஷெராவில் இந்திய - பாகிஸ்தான் விமானப் படைகள் ஒருபுறம் மோதிக் கொண்டிருக்கும்போது, பட்காமில் இந்த விபத்து நிகழ்ந்தது. அதில் 6 விமானப் படை வீரர்களும், 1 சாமானியரும் மரணமடைந்தனர்.அந்த நிகழ்ச்சி பல கேள்விக்குறிகளை எழுப்பியது.
நவீனத் தொழில்நுட்பம்
  • விமானக் கட்டுப்பாட்டு அறை, நட்பு விமானத்துக்கும் எதிரி விமானத்துக்கும் இடையேயான வேறுபாட்டைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியாததால்தான் நமது விமானப் படை ஹெலிகாப்டர், நமது வீரர்களாலேயே வீழ்த்தப்பட்ட அவலம் நேர்ந்தது.
  • முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல் தனாவ், ஸ்ரீநகர் விமான தளத்தில் விமானப் படைத் தளபதியையும், இன்னும் சில அதிகாரிகளையும் நடைமுறைக் குறைபாடுகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். 
  • இந்திய விமானப் படையின் கவனக்குறைவும், கண்காணிப்புக் குறைவும் ஒருபுறமிருந்தாலும்கூட, எதிரி விமானத்தையும் நட்பு விமானத்தையும் வித்தியாசப்படுத்தி தெரிவிக்கும் அதிநவீன தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்கிற குறைபாட்டை அந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டிருக்கிறது.
  • இந்திய விமானப் படையின் விமானக் கட்டுப்பாட்டு அறையின் வசமுள்ள ராடார்கள் மிகவும் பழைமையானவை.
  • நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பத்துடன் கூடிய ராடார்கள் எல்லைப்புறப் பகுதியில், அதிலும் குறிப்பாக, சீன - பாகிஸ்தான் எல்லைகளில் இல்லாமல் இருப்பது விமானப் படையின் குற்றமல்ல. அவர்களுக்கு அவற்றை வழங்காமல் இருப்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் குற்றம். 
  • ராடார்கள் மட்டுமல்ல, இந்திய விமானப் படையின் தாக்குதல் விமானங்களின் எண்ணிக்கையும் போதுமான அளவில் இல்லை என்பது முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல் டி.எஸ். தனாவின் குற்றச்சாட்டிலிருந்து தெரிகிறது.
  • பல்வேறு பாதுகாப்புச் சவால்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டுமானால், உடனடியாக இந்திய விமானப் படையின் தாக்குதல் படையில் (பைட்டர் ஸ்குவாட்ரன்ஸ்) காணப்படும் கடுமையான தேவைக்கு விடை காண வேண்டும். 
இன்றைய நிலையில்....
  • இன்றைய நிலையில் இந்திய விமானப் படையில் 30 தாக்குதல்  படைகள்தான் இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் அது 26-ஆகக் குறைந்துவிடும். நம்மைவிட, அளவிலும் வலிமையிலும் குறைந்த பாகிஸ்தான் விமானப் படையில் 2021-இல் 25 தாக்குதல் படைகள் காணப்படும் என்பதை நாம் கவனத்தில்  கொள்ள வேண்டும்.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலாகோட் விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் நடந்த விமானப்  படைப் போரில் நமது பலவீனம் தெளிவாகவே வெளிப்பட்டது.
  • பாகிஸ்தானின் அதி நவீன  எஃப் - 16 ரக விமானங்களை இந்தியாவின் பழைமையான மிக் - 21 பைசன்ஸ் ரக விமானங்களை வைத்துக்கொண்டு நாம் எதிர்கொள்ள நேர்ந்தது.
  • முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல் கூறுவதுபோல, மிக் - 21 கால மோட்டார் வாகனங்கள் காயலான் கடைக்குப் போன பிறகும்கூட, அந்தப் பழைய தொழில்நுட்ப விமானங்களை வைத்துக்கொண்டு நமது வீரர்கள் போரிடுகிறார்கள்.
  • விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப் - 16 விமானத்தை மிக் - 21 விமானத்திலிருந்து வீழ்த்தினார். பழைய தொழில்நுட்பத்துடன் அபிநந்தன் போன்ற வீரர்கள் தீரமுடன் போரிடுகிறார்கள் என்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
  • இதே நிலைமை தொடர்ந்தால், வருங்காலத்தில் போர் நடைபெறும் சூழல் ஏற்படும்போது நாம் மிக அதிகமான விலை கொடுக்க வேண்டிவரும்.
  • இந்திய விமானப் படை மிகப் பழைமையான விமானங்களுடன் செயல்படுகிறது என்பது மட்டுமல்ல, நவீனமயமாக்கும் முயற்சியில் மெத்தனம் காட்டுகிறது.
  • வெளிநாடுகளிலிருந்து புதிய இறக்குமதிகள் இல்லை. நவீன தொழில்நுட்ப விமானத் தளவாட உற்பத்தியை நாம் முழுமூச்சில் முடுக்கிவிடவில்லை. பிரான்ஸிலிருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஃபேல் விமானங்கள் இதுவரை வந்து சேரவில்லை.
ரஷ்யாவின்....
  • ரஷியாவில் 1980-இல் தயாரிக்கப்பட்ட 21, மிக் - 29 ரக ஜெட் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது.
  • ஏனைய நாட்டு விமானப் படைகள், ஐந்தாவது, ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது, நவீனமயமாக்கலுக்கு போதிய ஒதுக்கீடு இல்லாததால் இந்திய விமானப் படை காலாவதியான தொழில்நுட்பத்துடன் கூடிய மிக் - 29 போன்ற போர் விமானங்களை வாங்க முற்படுவது புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல. 
  • முன்னாள் ஏர் சீஃப் மார்ஷல் டி.எஸ். தனாவ் சரியான நேரத்தில், சரியான எச்சரிக்கையை முன்வைத்திருக்கிறார். பாதுகாப்பு அமைச்சரும் நிதியமைச்சரும் ராணுவ நவீனமயமாக்கலை போர்க்கால அணுகுமுறையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
  • வீரமும், வீராவேச வசனங்களும் எதிரிகளை எதிர்கொள்வதற்கு உதவாது. இன்றைய நிலையில், தொழில்நுட்பத்தின் அடிப்படையில் யுத்தங்கள் நடத்தப்படுகின்றன என்பதை அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டியதில்லை, நினைவூட்ட விரும்புகிறோம்!

நன்றி: தினமணி (03-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories