TNPSC Thervupettagam

தவறான சமிக்ஞை

August 8 , 2023 393 days 282 0
  • பொருளாதார வல்லரசாக மாறும்போது அதற்கான இலக்கணங்களும் பின்பற்றப்பட வேண்டும். ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையிலும், முதலீடுகள் குறித்தும் தெளிவான வரைமுறைகள் இருப்பது அவசியம். அடிக்கடி கொள்கை முடிவுகளை மாற்றுவது, வரிகள் விதிப்பது, விலக்குகளை தவிர்ப்பது போன்றவை சா்வதேச வா்த்தகத்துக்கு எதிரானவை.
  • மத்திய அரசு திடீரென்று கணினி, மடிக்கணினி, கைக்கணினி உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முற்பட்டது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசின் உரிமம் பெற்று மட்டுமே அவை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்கிற வா்த்தக அமைச்சகத்தின் ஆகஸ்ட் 3, 2023 அறிவிப்பில், அந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது குறித்து எழுந்த விமா்சனங்களும், சா்வதேச நிறுவனங்களின் அழுத்தமும் காரணமாக அடுத்த நாளே அந்த முடிவு அக்டோபா் மாதக் கடைசி வரை அமைச்சகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
  • வா்த்தக அமைச்சகம் முறையான கலந்தாலோசனை இல்லாமலும், தொலைநோக்குப்0020 பார்வை இல்லாமலும் அவசரக் கோலத்தில் கணினி, மடிக்கணினி, கைக்கணினி உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்திருக்கக் கூடாது. கணினிகள் எந்தவித வரைமுறையும் இல்லாமல் இறக்குமதி செய்யப்படுவது தவிர்க்கப்படுவதன் அவசியம் குறித்து இப்போது வா்த்தக அமைச்சகம் பல்வேறு விளக்கங்களை முன்வைத்தாலும்கூட, அவை எதுவுமே தா்க்க ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் சாத்தியமற்றவை. அரசின் திடீா் முடிவால் முதலீட்டாளா்களும், இந்தியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் ஐயப்பாட்டுக்கும், அச்சத்துக்கும் உள்ளாகி இருக்கின்றனா் என்பதுதான் எதார்த்த உண்மை.
  • கணினி தொழில்நுட்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் வன்பொருள் (ஹார்டுவேர்) பெரும்பாலும் சீனாவில் உற்பத்தியாகிறது. அவை நம்பகத்தன்மை இல்லாத, பாதுகாப்புக் குறைபாடுகளுடன் இருந்தால் முக்கியமான தன்மறைப்புத் தரவுகள், தனிநபா் விவரங்கள், தேசம் குறித்த தகவல்கள் ஆகியவை களவாடப்படலாம் என்பது ஒருவாதம். 2020 கல்வான் தாக்குதலைத் தொடா்ந்து எப்போது வேண்டுமானாலும் சீனாவின் ராணுவ அச்சுறுத்தலை இந்தியா எதிர்பார்த்து செயல்படுகிறது என்பது என்னவோ உண்மை. ஆனால், ஒரேயடியாக சீனாவைப் புறக்கணிக்கவோ, தவிர்த்துவிடவோ, தடுக்கவோ நம்மால் முடியாது.
  • சீன இறக்குமதிகளுக்கு உடனடியாக எந்த மாற்றும் கிடையாது; அது சுலபமானதும் அல்ல. இந்தியாவின் எட்டு பில்லியன் டாலா் கணினிகள், கணினி உதிரிபாகங்கள் இறக்குமதியில் பாதிக்கு மேல் சீனாவில் இருந்துதான் பெறப்படுகின்றன என்கிற நிலையில், கட்டுப்பாடுகள் மூலம் அதைத் தவிர்ப்பது சாத்தியமும் அல்ல.
  • கணினிகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம், ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட சா்வதேச கணினி நிறுவனங்களை இந்தியாவில் தயாரிக்க வற்புறுத்த முடியும் என்பது நோக்கமாக இருந்தால், அதுவும் சாத்தியமல்ல. குறுகிய காலத்தில் அதிகபட்ச திறன்வாய்ந்த கணினிகளை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புச் சூழல் இந்தியாவில் இல்லை. அதை உருவாக்குவது எளிதும் அல்ல. அரசின் நோக்கம் போல கணினி உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்வதும், இறக்குமதிகளை தவிர்ப்பதும் தொலைநோக்குத் திட்டமாக இருக்க முடியுமே தவிர, கட்டுப்பாடுகள் விதித்து செயல்படுத்த முடியாது.
  • ஏற்கெனவே பிப்ரவரி 2021 முதல் இந்தியாவில் கணினி தயாரிப்புக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்குகிறது. 2023 மே மாதம் ரூ. 17,000 கோடி ஒதுக்கீடு செய்து கணினி உற்பத்தியை அதிகரிக்க ஊக்கமளித்தது. ஆனால், அது பெருமளவில் பலனளிக்கவில்லை.
  • ஆப்பிள் உள்ளிட்ட சா்வதேச கணினி தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவுடன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் தயாரித்து இந்தியாவில் தங்களது கணினிகளை விற்பனை செய்கின்றன. ஆசியான் நாடுகளுடனான கணினி வன்பொருள் இறக்குமதிக்கான தடையில்லா வா்த்தக ஒப்பந்தம், மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு மிகப் பெரிய தடை. ஆனால், அதை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
  • வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணினி வன்பொருள், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், தனிநபா் தரவுகள் களவுபோவதற்கு காரணமாகவும் இருக்கும் என்கிற வாதம் அடிப்படை இல்லாதது. இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. அதனடிப்படையில் முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது.
  • இறக்குமதி கட்டுப்பாட்டால் ஏற்பட இருக்கும் கணினிகளுக்கான தேவையை இந்தியத் தயாரிப்பாளா்கள் உடனடியாக ஈடுகட்டுவது இயலாது என்பதால், சந்தையில் குழப்பம் ஏற்பட்டு கணினிகளுக்கான தட்டுப்பாடு அதிகரிக்கக் கூடும். இந்தியத் தயாரிப்புகள் இறக்குமதிகளை விட அதிக விலையில் விற்கப்படுமானால், கள்ளக்கடத்தலும், கருப்புச் சந்தையும் உருவாகும் வாய்ப்பும் உண்டு.
  • உலகின் உற்பத்தி மையமாக கடந்த சில ஆண்டுகளில் இந்தியா தன்னை உயா்த்திக் கொண்டிருக்கிறது. எண்ம கட்டமைப்பையும், கணினி தொழில்நுட்பத்தை அடித்தட்டு மக்கள் வரை கொண்டுசெல்லும் முயற்சியையும் அரசு முன்னெடுத்து வருகிறது. தகவல் தொழில் நுட்ப வன்பொருள், மென்பொருள் உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரிக்க ஊக்கமளித்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் 1990-க்கு முன்பிருந்த ‘லைசென்ஸ் ராஜ்’ மனநிலைக்கு அரசு திரும்புவது கடந்த 33 ஆண்டு முன்னேற்றத்தையும் சிதைத்துவிடும்!

நன்றி: தினமணி (08  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories