- சமூக சீர்கேடுகளுக்குத் திரைப்படங்கள் மட்டுமேதான் காரணமா என்றால், நிச்சயமாக இல்லை. ஆனால், திரைப்படங்களும் முக்கியமான காரணம் என்பதை மறுத்துவிடவும் முடியாது. திரைப்படங்களைப் பார்ப்பதால் மட்டும்தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா என்கிற கேள்வியில் அர்த்தமில்லை. திரைப்படங்களைப் பார்ப்பதாலும் கெட்டுப் போகிறார்கள் என்கிற உண்மையை, வணிக ரீதியிலான வாதத்துக்காக முன்வைப்பவர்கள் உணர வேண்டும்.
- பொறுப்பான பதவியில் இருப்பவர்களும், மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்களாக இருப்பவர்களும், தங்களது செய்கைகளாலும், நடத்தைகளாலும் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்பட நடிக, நடிகையர் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது மிகவும் அவசியம்.
- இதற்கு முன்னுதாரணமாக முன்னாள் முதல்வரும், திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாகக் கோலோச்சியவருமான எம்.ஜி. ராமச்சந்திரன் இருந்திருக்கிறார். திரைப்படங்களில் மது அருந்துவது, சிகரெட் புகைப்பது உள்ளிட்ட பழக்கங்களைத் தனது கதாபாத்திரங்கள் மூலம்கூடக் காட்சிப்படுத்துவதில்லை என்பதில் அவர் கடைசி வரை உறுதியாக இருந்தார் என்பதை உலகமறியும்.
- எம்.ஜி.ஆரைப் போல நாமும் மக்கள் செல்வாக்குள்ள அரசியல் தலைவராக வர வேண்டும் என்று விழைபவர்கள், அவர் கடைப்பிடித்த பல நல்ல கொள்கைகளையும் பின்பற்றுவதில் முனைப்புக் காட்ட வேண்டும். வன்முறையையும், தனிப்பட்ட முறையிலும், சமூக ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்களையும் செல்வாக்குள்ள நடிகர்கள் திரையில் காட்சிப்படுத்துவது என்பது, தவறான பாதைக்கு மக்களை இட்டுச் செல்லும் என்பதை அவர் உணர்ந்து செயல்பட்டார்.
- எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தமிழக திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்கால் வலம்வரும் நட்சத்திரம் ரஜினிகாந்த். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் "ஜெயிலர்' திரைப்படம், வரலாறு காணாத வசூல் சாதனை செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். சிலரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, வில்லன் கதாபாத்திரம் சம்மட்டியால் அவர்களது தலையை அடித்துச் சிதறவிடுவது போன்ற அருவருப்பான கோரக் காட்சியுடன் அந்தத் திரைப்படத்தின் தொடக்கக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
- இப்படியொரு காட்சியை எம்.ஜி.ஆரோ, சிவாஜி கணேசனோ தங்களது திரைப்படங்களில் நிச்சயமாக அனுமதித்திருக்க மாட்டார்கள். குழந்தைகளும், சிறுவர்களும், இளைஞர்களும் பெருவாரியாகப் பார்க்கும் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் இப்படியொரு காட்சி அமைத்திருப்பதைத் தணிக்கைக் குழுவினர் எப்படி அனுமதித்தார்கள் என்றுகூட யாரும் கேள்வி எழுப்புவதில்லை. பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் என்றால் தணிக்கைக் குழுவினரும் பெரிய மனதுடன் அனுமதிப்பார்கள் போலும்...
- நடிகர் விஜய் விரைவிலேயே அரசியல் பிரவேசம் செய்யக் காத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக, மிகப் பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற நடிகராக அவர் வலம் வருகிறார் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது. சில மாதங்களுக்கு முன்னர் 10, 12-ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆக்கபூர்வமாக ஆலோசனைகளை வழங்கியபோது, அவரைப் பாராட்டாதவர்கள் இல்லை.
- இப்போது விஜய் நடித்து விரைவில் திரையிடப்பட இருக்கும் "லியோ' திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளும், விளம்பரங்களும் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் அவர் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
- தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத், தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல, இந்தியாவில் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை உள்ளது. ஊடகங்களில் புகையிலை தொடர்பான பொருள்களின் விளம்பரங்களுத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, பொறுப்புணர்வில்லாமல் நடிகர் விஜய் தனது திரைப்படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சியை அமைத்திருப்பதை வன்மையாகக் கண்டித்திருக்கிறார் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் பிரசாத்.
- ஐந்தாவது தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வின்படி, 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரணங்களில் 7% புகையிலைப் பழக்கத்தின் காரணமாக அமைகின்றன. ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் பேர் உலகளாவிய அளவில் புகையிலை சார்ந்த நோய்களால் உயிரிழக்கிறார்கள். மத்திய சுகாதார அமைச்சராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, புகையிலை தொடர்பான பொருள்களில், அது குறித்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெற வைத்ததை மறக்க முடியாது.
- ஏற்கெனவே வன்முறையை முன்னிலைப்படுத்துபவையாக திரைப்படங்கள் மாறிவிட்டன. எந்தவிதத் தணிக்கைக்கும் உள்படாத ஓ.டி.டி. தளங்கள் வந்துவிட்ட பிறகு, பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலக்கும் அத்தனை அவலங்களும் தங்கு தடையின்றி காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆங்காங்கே நடைபெறும் மோதல்கள், கொலைகள், சட்டவிரோத செயல்பாடுகள் போன்றவை திரைப்படக் காட்சிகளைப் போலவே நடைபெறுவதை நாம் பார்க்க முடிகிறது.
- எந்தவொரு சமுதாயச் சீரழிவையும் தனி மனிதர்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பது உண்மைதான். அதற்காக நாம் வாளாவிருந்துவிட முடியாது. மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற திரைப்பட நடிகர்களுக்கு சில சமூகப் பொறுப்புகள் உண்டு. அதை அவர்கள் மறந்துவிடலாகாது!
நன்றி: தினமணி (12 - 10 – 2023)