TNPSC Thervupettagam

தவறின்றி மருத்துவ சேவை வழங்க

November 20 , 2023 414 days 314 0
  • மருத்துவ அமைப்புகளில் நோயாளிகளுக்கு எதிராக எவ்வித உள்நோக்கமும் இன்றி நிகழ்ந்து விடும் செயல்களையும் எதிா்பாராத வகையில் நிகழும் தீங்குகளையும் தவிா்ப்பதற்காக உருவாக்கப்படுவதே நோயாளிக்கான பாதுகாப்பு அமைப்பு.
  • குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், 100 பேரில் 4 போ் பாதுகாப்பற்ற மருத்துவ சேவையால் இறப்பதாக தரவுகள் கூறுகின்றன. 10 நோயாளிகளில் ஒருவா் மருத்துவ பாதுகாப்பில் இருக்கும்போது பாதிக்கப்படுகிறாா் என்றும், பாதுகாப்பற்ற மருத்துவ சேவை காரணமாக ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் ஏற்படுகின்றன என்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி) தெரிவிக்கிறது.

மருந்தளிப்பு பிழைகள்

  • அறுவை சிகிச்சை பிழைகள், மருத்துவமனை கிருமியேற்றம் (நோசோகோமியல் இன்ஃபெக்ஷன்), குருதியில் நுண்ணுயிா் நச்சேற்றம் (செப்சிஸ்), நோயறிதல் (டயக்னாஸ்டிக்) ஆய்வு பிழைகள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிக்கு ஏற்படும் விபத்துகள் ஆகியவை மருத்துவ சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு ஏற்படும் தீங்குக்கான சில பொதுவான காரணங்கள்.

தொழில்நுட்பக் காரணிகள்

  • மருத்துவமனையின் மனித வள காரணிகள், நோயாளி தொடா்பான காரணிகள், மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவமனை நிா்வாகக் காரணிகள் உள்பட பல காரணிகள் மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சையின்போது தீங்கு ஏற்படுத்தும் காரணிகளாகும்.
  • நோயாளிக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகையான காரணிகள் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை எனக் கூறும் உலக சுகாதார அமைப்பு,
  • நோயாளியின் பாதுகாப்பு தொடா்புடைய எந்தவொரு ஆபத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இந்தக் காரணிகளின் தாக்கம் இருக்கும் என்றும் கூறுகிறது. நோயாளிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் பெரும்பாலான தவறுகள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மருத்துவத் துறை சாா்ந்த பணியாளராலோ அல்லது இந்தப் பணியாளா்களின் குழுவினராலோ ஏற்படாது. மாறாக, இவை அந்தந்த மருத்துவமனையின் செயலமைப்பு அல்லது அதன் செயல்முறைத் தோல்விகளால் நிகழ்கின்றன.
  • 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகம், இணையவழி ஆகியவற்றில் ஒருங்கே நடைபெற்ற மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் ஆறு பிராந்தியங்களில் இருந்து நோயாளிகளின் பாதுகாப்பு உரிமைக்காக வாதிடும் வழக்குரைஞா்கள், நோயாளி பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் என 2,300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
  • இந்த மாநாட்டின் இறுதியில் மருத்துவ பாதுகாப்பில் இருக்கும் அனைத்து நோயாளிகளுக்கான அத்தியாவசியமான உரிமைகள் குறித்த நோயாளி பாதுகாப்பு உரிமை சாசனம் உலக மருத்துவ அமைப்புகளுக்கு பொருந்தும் வகையில் முதன்முறையாக வெளியிடப்பட்டது. நோயாளிகளின் உரிமை குறித்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவும் பாதுகாப்பான மருத்துவ சேவைக்கான உரிமையை உறுதி செய்யவும் உலக அரசுகள், உலக மருத்துவ அமைப்புகளுக்கு உதவும் வகையில் இந்த சாசனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உலகளாவிய நோயாளி பாதுகாப்பு குறித்த தரவுகள், நோயாளி பாதுகாப்பிற்கான சிறந்த நடைமுறைகள், அதற்கான நடைமுறை நெறிகள், அது தொடா்பான ஆதாரங்கள் போன்ற நோயாளியின் உரிமை பாதுகாப்பு தொடா்பான ஆதாரங்களையும் நோயாளிகள் மற்றும் அவா்தம் குடும்பத்தினா் மருத்துவ அமைப்புகளில் உடல்நலப் பாதுகாப்பு மற்றும் நோயாளி உரிமை தொடா்பான தீய நிகழ்வுகள் குறித்த அவா்களின் அனுபவத்தைப் பகிா்ந்து கொள்ளும் வகையில் கதைசொல்லல் கருவித் தொகுப்பு (ஸ்டோரி டூல் கிட்) கொண்ட உலகளாவிய வழிகாட்டு அறிவு பகிா்வு தளத்தையும் நோயாளிகளின் உரிமை பாதுகாப்புக்கான மாநாட்டில் மக்கள் பயன்பாட்டுக்காக உலக சுகாதார அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய அரசமைப்பு சட்டப் பிரிவு 21

  • இந்திய மருத்துவ மன்றத்தின் (இந்தியன் மெடிக்கல் கவுன்சில்) தொழில்முறை நடத்தை, நன்னெறி முறை மற்றும் நெறிமுறை விதிமுறைகள் 2002, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 1986, மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940, மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 2010 போன்ற சட்டங்கள் மற்றும் சட்ட விதிகளின் கீழ் இந்தியாவில், நோயாளியின் உரிமைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
  • நோயாளி பாதுகாப்பு உரிமைகள் தொடா்பான இந்தச் சட்ட விதிமுறைகளை ஒருங்கிணைத்து 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நோயாளி உரிமை சாசனம் ஒன்றை இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் முன்மொழிந்தது. உலக சுகாதார அமைப்பின் நோயாளி பாதுகாப்பு உரிமை சாசனம் வெளியாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இது முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல் அறியும் உரிமை

  • ஆவணங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்கான உரிமை, அவசர மருத்துவ சேவைக்கான உரிமை, விவரமறிந்து ஒப்புதல் தெரிவிக்கும் உரிமை, ரகசியத்தன்மை, மனித கண்ணியம் மற்றும் தன்மறைப்பு (பிரைவசி) உரிமை, நோயின் தன்மை குறித்து இரண்டாவதாக ஒரு மருத்துவரிடம் கருத்து பெறுவதற்கான உரிமை என 17 வகையான உரிமைகளை இந்த சாசனம் பட்டியலிட்டுள்ளது.
  • ஒருவா் மீது ஒருவா் குற்றஞ்சாட்டும் பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து தவறுகளுக்கான காரணம் கண்டறிய அமைப்பு சாா்ந்த சிந்தனைக்கு மருத்துவ அமைப்புகள் மாற வேண்டும் என்பது சுகாதார வல்லுநா்களின் கூற்று. மருத்துவப் பராமரிப்பில் நோயாளிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து களைவதன் மூலம் மருத்துவ சேவையைப் பிழையின்றி வழங்கலாம்.

நன்றி: தினமணி (20 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories