TNPSC Thervupettagam

தவறு திருத்தப்பட்டிருக்கிறது..!

September 3 , 2019 1908 days 1050 0
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இருந்ததில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டபோதும் பிரிவினை எண்ணம் எழவில்லை.
     1937-ல் நடைபெற்ற தேர்தலில் சிந்து, பஞ்சாப் போன்ற மாகாணங்களில் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி வைத்து சிக்கந்தர் ஹையத்கான் தலைமையில் 106 இடங்களில் வெற்றி பெற்றது முஸ்லிம் லீக். ஆனால், இந்தியா முழுமையிலும் இந்திய தேசிய காங்கிரஸ் 707 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் உண்மையான இஸ்லாம் மார்க்க வழி நிற்காத முகமது அலி ஜின்னாவின் மதவெறிப் போக்கால்தான் இந்தியாவில் பிரிவினைவாதம் தோன்ற ஆரம்பித்தது.
  • 1947-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவை இரண்டாகப் பிரிக்கும் பணியில் ஆங்கிலேயர்கள் ஈடுபடத் தொடங்கினர். 1947-இல் இந்திய- பாகிஸ்தான் எல்லைகளை வரையறை செய்ய, ஜான் ராட்கிளிப் நியமிக்கப்பட்டார். "இந்தப் பணியை ஒரிரு மாதங்களில் செய்ய இயலாது; இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம்' என்றார் அவர். இதை "நாட்டைப் பிரிக்கும் கருத்தை ஒத்திவைப்பதற்கான முயற்சி' என்று ஜின்னா கூறி, நேரடி நடவடிக்கை என்ற பெயரில் வகுப்புக் கலவரத்துக்கு வித்திட்டார். வங்கம் கலவர பூமியாகியது. பல்லாயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர்.
     இதற்குள் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் 40 சதவீத பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு மேலும் முன்னேறியது. ஜெனரல் கரியப்பா தலைமையில் இந்திய ராணுவம் எதிரிகளை விரட்டி மேலும் முன்னேறும் சமயத்தில் ஜவாஹர்லால் நேரு தடுத்து விட்டார்.
     ஐ.நா. சபைக்கு பிரச்னையைக் கொண்டு செல்லவும் முற்பட்டார். தற்போது இந்தியா, பாகிஸ்தான் இருக்கும் இடங்களில் அப்படியே தற்போதைய நிலை தொடரட்டும் என்று ஐ.நா. கூறிவிட்டது. இன்னும் இரண்டொரு தினங்கள் அவகாசம் தந்திருப்பின் காஷ்மீர் முழுமையையும் மீட்டிருப்போம் என்றார் ஜெனரல் கரியப்பா.
     பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிக்கு "ஆசாத் காஷ்மீர்' என்று பெயர் வைத்துக் கொண்டனர்.
பயங்கரவாதக் குழுக்கள்
  • அந்தப் பகுதிதான் இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதக் குழுக்கள் இயங்கும் இடம். இந்தியாவில் இருந்த 550-க்கும் மேற்பட்ட சின்னஞ்சிறு சமஸ்தானங்களை தனது மதி நுட்பத்தாலும் ராணுவ நடவடிக்கையாலும் இந்திய அரசோடு இணைத்த சர்தார் வல்லபபாய் படேல், காஷ்மீர் பிரச்னையையும் தீர்க்க விரும்பியபோது, "நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று நேரு தடுத்து விட்டார்.
  • பின்னர், 1947-இல் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதில் ராஜேந்திர பிரசாத், நேரு, படேல், அம்பேத்கர், சியாம பிரசாத் முகர்ஜி, அபுல்கலாம் ஆசாத், ஜெகஜீவன்ராம், ஜான் மத்தாய், அமிர்த் கௌர், திவாகர், மோகன்லால் சக்சேனா, கோபாலசாமி ஐயங்கார், காட்கில், நியோஜி, ஜெய்ராம் தாஸ் தௌலத்ராம், சந்தானம் சத்ய நாராயண சின்ஹா, கேஸ்கர் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்திய அரசியல் சாசன சட்ட வரைவுக் குழுவுக்கு அம்பேத்கர் தலைமை ஏற்றார்.
  • அப்போது காஷ்மீரத்தில் இருந்த ஷேக் அப்துல்லா, காஷ்மீர் மக்களுக்கு என்று தனியான அரசியல் சாசனம் வேண்டும் என்று நேருவிடம் வேண்டினார். அதை அம்பேத்கரிடம் கூறுமாறு நேரு அறிவுறுத்தினார்.
  • அப்துல்லா நீண்டதொரு கோரிக்கை மனுவுடன் அம்பேத்கரைச் சந்தித்து அரசியல் சாசன சட்டத்தில் சேர்க்கக் கோரினார். அம்பேத்கர் மனுவை முழுமையாகப் படித்து விட்டு, "உங்கள் பிரதேச எல்லைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும். இந்தியா சாலைகளை அமைக்க வேண்டும், இந்தியா உங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க வேண்டும். காஷ்மீர் ஏனைய இந்திய மாநிலங்களைப் போல நடத்தப்பட வேண்டும். காஷ்மீரைப் பொருத்தவரை இந்திய அரசுக்கு மிகக் குறைந்த அதிகாரமே இருக்க வேண்டும். ஆனால், இந்தியர்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இருக்கக் கூடாது என்று விரும்புகிறீர்கள். உங்களின் இந்தக் கோரிக்கைகளுக்கு நான் இணங்கினால் இந்திய நாட்டுக்கு எதிராக துரோகம் இழைத்தவனாகக் கருதப்படுவேன். நான் சட்ட அமைச்சராக இருக்கும் வரை ஒருபோதும் இது நடக்காது' என்று கூறிவிட்டார்.
நேரு
  • ஷேக் அப்துல்லா மீண்டும் நேருவிடம் சென்று நடந்ததைக் கூறினார். நேரு ஒரு சகோதர வாஞ்சையோடு சிந்தித்து அப்போது காஷ்மீர் அரசில் திவானாக பணிபுரிந்து தற்போது அமைச்சராக உள்ள கோபாலசாமி ஐயங்காரைக் கொண்டு ஷேக் அப்துல்லா விரும்பிய எல்லாவற்றையும் ஒரு வரைவு படிவமாக்கி அதற்கு 370-ஆவது பிரிவு என்று பெயரிட்டு அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் துணையோடு இந்திய அரசியல் சாசனத்தில் சேர்த்துவிட்டார்.
  • இதனால், காஷ்மீருக்கு என்று தனிச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தனி பிரதமர், தனிக் கொடி; இந்தியர்களுக்கு காஷ்மீரத்தில் சொத்துரிமை இல்லை. காஷ்மீரிகளுக்கு இரட்டை குடியுரிமை; காஷ்மீர் பெண்கள் இந்தியர்களை மணந்தால் குடியுரிமை ரத்து; பாகிஸ்தானியரை மணந்தால் ரத்து இல்லை; காஷ்மீர் சட்டப்பேரவை காலம் 6 ஆண்டுகள்;
  • இந்திய உச்சநீதிமன்ற ஆணைகள் செல்லுபடியாகாது; காஷ்மீர் சட்டப்பேரவை தானே சட்டங்களை இயற்றிக்கொள்ளும்; சிறுபான்மையோருக்கு சலுகைகள் கிடையாது.
     அமைச்சரவையில் இருந்த தொழில்துறை அமைச்சர் சியாம பிரசாத் முகர்ஜி, இந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய நேருவிடம் முறையிட்டார். அவர் ஏற்காமல் போகவே 8.4.1950 அன்று பதவியை முகர்ஜி துறந்து 1951 அக்டோபர் 21-இல் தில்லியில் பாரதிய ஜன சங்கம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
தேசியக் குடியரசு
  • அடுத்து வந்த பொதுத் தேர்தலில் இவரது கட்சி மூன்று இடங்களில் வென்றது. நாடாளுமன்றத்தில் தேசியக் குடியரசு என்ற அமைப்பை நிறுவினார். இதில் மக்களவையில் 32 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களும் இருந்தனர். ஆனால், இந்த அமைப்பை எதிர்க்கட்சியாக அங்கீகாரம் செய்ய அவைத் தலைவர் மறுத்துவிட்டார்.
     1952-ஆம் ஆண்டு ஜூன் 26-இல் மக்களவையில் முகர்ஜி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு உரை நிகழ்த்தினார். சட்டப் பிரிவு 370 பற்றி குறிப்பிட்டு ஒரு நாட்டுக்கு இரண்டு அரசியல் சட்டம், இரண்டு பிரதமர்கள், இரண்டு கொடிகள், இரண்டு தேசியச் சின்னம் இருக்க முடியாது என்று முழங்கினார். மேலும், இந்து மகாசபையோடு சேர்ந்து அறப்போர் நடத்தினார்.
  • சியாம பிரசாத் ஏனையோரைப் போன்ற சாதாரண அரசியல்வாதியல்ல. ஞானிகள், மகான்கள், கல்வியாளர்கள், புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள், தலைவர்கள், நீதிமான்கள் தோன்றிய வங்கத்தில் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்தோஷ் முகர்ஜியின் மகன். லண்டன் சென்று சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இவர் தனது 33-ஆவது வயதில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பதவி ஏற்றவர். இவரது பணிக்காலத்தில் முதன் முறையாக வங்க மொழியில் பட்டமளிப்பு உரையை ரவீந்திரநாத் தாகூரைக் கொண்டு நிகழ்த்தினார். கல்கத்தா சட்டப்பேரவைக்கு சுயேச்சையாக இரு முறை தேர்வு செய்யப்பட்டவர்.
  • கல்கத்தா மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய சியாம பிரசாத் முகர்ஜி, "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கு கொண்டவர். இப்படி பல பெருமைகள் கொண்ட இவர் காஷ்மீரில் அறப்போராட்டம் நிகழ்த்தப் புறப்பட்டார். இவரை அப்துல்லா அரசு லக்கன்பூரில் காஷ்மீரில் நுழைய அனுமதிச் சீட்டு இல்லை என்று கூறி 17.5.1953-இல் கைது செய்து, ஸ்ரீநகர் சிறையில் அடைத்தது.
  • சில தினங்களில் இவரை நகரின் வெளியில் இருந்த குடில் ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர் சந்தேகத்துக்கிடமான முறையில் 23.6.1953-இல் இறந்தார். ஆனால், இவர் மாரடைப்பால் இறந்தார் என்று காஷ்மீர் அரசு கூறியது. பிரேத பரிசோதனையும் செய்யப்படவில்லை.
பண்டித தீனதயாள் உபாத்யாயா
  • பல தேசியத் தலைவர்கள் குறிப்பாக, அவரது அன்னை ஜோகமயாதேவி தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது; எனவே, விசாரணை நடத்த வேண்டும் என்று நேருவுக்கு கடிதம் எழுதினார். அதை நேரு நிராகரித்து, அவர் மரணத்தில் சந்தேகம், மர்மம் இல்லை என்று கூறிவிட்டார். இதைப் போன்றே இவருக்குப் பின் வந்த ஜனசங்கத் தலைவர் பண்டித தீனதயாள் உபாத்யாயாவும் உ.பி.யில் ரயிலில் இரவில் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1950-இல், காஷ்மீர் குறித்தான பாரதிய ஜன சங்கத்தின் போராட்டம் 2019, ஆகஸ்ட் 5-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
     370-ஆவது சட்டப் பிரிவை கொண்டுவரும்போது இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்றுதான் சொல்லப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக அது தொடர்ந்ததே ஏன்? 1947-ல் நாடு விடுதலை அடைந்தபோது இந்தியாவோடு இணைந்த சமஸ்தான அதிபர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் தகுதிக்கு ஏற்ப மன்னர் மானியம் வழங்கும் என்று உறுதி கூறி வழங்கி வந்தது.
370-ஆவது சட்டப்பிரிவு அகற்றம்
  • ஆனால், 1971-இல் இந்திரா காந்தி மன்னர் மானிய திட்டத்தை அதிரடியாக ஒழித்தபோது, உறுதிமொழி ஏன் காப்பாற்றப்படவில்லை? முன்னர் மானியத்தை ஒழித்தது எப்படி சரியோ, அதேபோல இப்போது 370-ஆவது சட்டப்பிரிவை அகற்றியதும் சரியான முடிவு.
     காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த மதம் மாறாமல் இருந்த 3.50 லட்சம் பண்டிட்டுகளில் பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று, அவர்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டதை இன்றைய 370-ஆவது சட்டப்பிரிவை அகற்றியதை எதிர்ப்பவர்கள் ஒருமுறையேனும் வாய் திறந்து கண்டித்தது உண்டா? மேற்கு பாகிஸ்தானில் இருந்து வந்த 2.50 லட்சம் இந்து மக்கள் இன்று வரை குடி உரிமைக்காக போராடுகிறார்களே, அவர்களுக்காக குரல் எழுப்பியது உண்டா? மனசாட்சியோடு பேசுங்கள். 370 சட்டப் பிரிவை ரத்துசெய்ததை மனம் திறந்து ஆதரியுங்கள்.

நன்றி: தினமணி(03-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories