- பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த வார அமெரிக்க அரசுமுறைப் பயணத்தில் மிகப் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லையென்றாலும், இந்திய - அமெரிக்க உறவின் புதிய பரிமாணத்தை நோக்கிய நகர்வு தெரிகிறது.
- இந்தியாவின் சர்வதேச தாக்கம் வலுப்பெற்றிருப்பது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா மூன்று நாடுகளுடன் இணைந்த நாற்கரக் கூட்டமைப்பு (க்வாட்) மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.
அமெரிக்கப் பயணம்
- பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் நியூயார்க், வாஷிங்டன் விஜயத்தில் இருதரப்பு, கூட்டமைப்பு சந்திப்புகள் மட்டுமல்லாமல், ஐ.நா. பொதுச்சபை பலதரப்பு சந்திப்பும் நிகழ்ந்தது.
- அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி நேருக்கு நேர் சந்தித்து முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
- இந்திய வம்சாவளியினரான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுடனும், ஐந்து முக்கியமான பன்னாட்டு நிறுவனத் தலைவர்களுடனும் பிரதமர் நடத்தியிருக்கும் பேச்சுவார்த்தைகளும் முக்கியமான நிகழ்வுகள்.
- இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சர்வதேச பிரச்னைகளிலும், பிராந்திய பிரச்னைகளிலும், இருதரப்புப் பிரச்னைகளிலும் கடந்த 20 ஆண்டுகளாகக் காணப்பட்ட கருத்துவேறுபாடுகளைக் கடந்து புதிய பாதையில் இருநாட்டு உறவையும் எடுத்துச் செல்வதற்கான முனைப்பு தெரிகிறது.
- இருதரப்புப் பாதுகாப்புக் கூட்டணி, பசிபிக் பிராந்தியத்தில் சமநிலை, தடுப்பூசி தயாரிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட இருதரப்பு, பிராந்திய, சர்வதேச பிரச்னைகள் விவாதிக்கப் பட்டன.
- நாற்கரக் கூட்டமைப்பின் தலைவர்கள் மட்டுமல்லாமல், அந்தந்த நாடுகளின் உளவுத்துறை தலைவர்களும் பேச்சுவார்த்தை நடக்கும்போது வாஷிங்டனில் இருந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- ராணுவத்திற்குப் பயன்படும் ஆளில்லா விமானங்கள், 5 ஜி அலைக்கற்றை, சிறப்பு சூரிய ஒளித்தகடுகள், குறைக்கடத்திகள் (செமி கண்டக்டர்) போன்றவை இந்தியாவுக்குக் கிடைப்பதற்கு நடந்து முடிந்த கூட்டமைப்பு மாநாடு பெரிய அளவில் உதவக்கூடும்.
- தொழில் நுட்பத்திலும், ராணுவத் தளவாடங்களிலும் சர்வதேச தரத்தை இந்தியா பெறுவதற்கு மேலை நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உண்டு.
- அதே நேரத்தில், அமெரிக்கா சூழ்நிலைக்கேற்ப இந்தியாவை சாதகமாகப் பயன்படுத்திவிட்டு கைவிட்டுவிடாமல் இருப்பது குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பிரதமருடைய அணுகுமுறையில் அது குறித்த எச்சரிக்கை உணர்வு காணப் பட்டதை மறுப்பதற்கில்லை.
- 2014-இல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஐ.நா. பொதுச்சபையில் நான்காவது முறையாக உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பொதுச்சபையில் உரையாற்றும் வாய்ப்பைத் தவறவிடாத பிரதமர், இந்த முறையும் சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பத் தவறவில்லை.
- "இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும், இந்தியாவின் மாற்றங்கள் உலகை மாற்றும்' என்று தொடங்கி கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் இந்தியா உற்பத்தி செய்த தடுப்பூசிகள் ஏற்படுத்திய தாக்கத்தை கோடிட்டுக் காட்டினார்.
- வறுமை ஒழிப்பு, 2030-க்குள் 450 ஜிகா வாட் மாற்று எரிசக்தி, பசுமை தொழில் நுட்பம், மருந்துத் தயாரிப்பு என்று இந்தியாவின் இலக்குகளை சர்வதேச நாடுகளுக்கு உணர்த்திய பிரதமரின் சாதுர்யம் மெச்சத்தகுந்தது.
- சீனா குறித்தோ, பாகிஸ்தான் குறித்தோ நேரடியாக ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல் பயங்கரவாதம் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளை மட்டுமே அவர் வலியுறுத்தியது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
- ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் அரசியல் ஆயுதமாக பயங்கரவாதம் பயன்படுத்தப்படுவதை உணர்த்துவதாக பிரதமர் தெரிவித்தது, பாகிஸ்தான் குறித்த மறைமுகத் தாக்குதல் என்று கருதலாம்.
- ஐ.நா. சபை சீர்திருத்தப்பட வேண்டும், பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும், அதன் மூலம் மட்டுமே அந்த சர்வதேச அமைப்பின் நம்பகத்தன்மை உறுதிப்படும் என்கிற பிரதமரின் கூற்றும், வளர்ச்சி அடையும் நாடுகளால் கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டது.
- இந்தியாவின் ஜனநாயகத்தை நியாயப்படுத்தி, அதன் பன்முகத்தன்மையை பிரதமர் மோடி ஐ.நா. சபையில் விளக்க முற்பட்டதன் பின்னணியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுடனுடனான சந்திப்பும், அவரது அறிவுறுத்தலும் காணப்படுவதை புரிந்துகொள்ள முடிகிறது.
- இந்தியாவில் தன்னார்வ அமைப்புகள், விவசாயிகள், அரசுக்கு எதிரான விமர்சகர்கள் ஆகியோருக்கு எதிராகவும், கும்பல் கொலைகள் போன்றவை குறித்தும் எழுப்பப்படும் விமர்சனங்களின் பின்னணியில், ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும் என்கிற துணை அதிபர் கமலா ஹாரிஸின் கருத்துகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், தனது ஐ.நா. சபை உரையைப் பயன்படுத்திக் கொண்டார் பிரதமர் என்று தோன்றுகிறது.
- முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடிக்குக் காணப்பட்ட பரஸ்பர நட்புறவு, இப்போதைய அமெரிக்க ஆட்சியாளர்களான பைடன் - ஹாரிஸ் இருவருடனும் காணப்படவில்லை.
- டிரம்ப் ஆட்சியில் திரும்பப் பெறப்பட்ட வர்த்தக சலுகைகள், குடியேற்ற ஒதுக்கீடு உள்ளிட்டவை பைடன் நிர்வாகத்தால் மீட்டுத் தரப்படவில்லை என்றாலும், சீனாவை எதிர்கொள்ள இந்தியா தேவைப்படுகிறது என்பதால், அமெரிக்காவால் இந்தியாவை ஒதுக்கித்தள்ள முடியவில்லை. அது பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.
நன்றி: தினமணி (29 - 09 - 2021)