TNPSC Thervupettagam

தவிா்க்க முடியாத அச்சுறுத்தல்!| இணைய தாக்குதல், கட்செவி அஞ்சல் வேவு பாா்க்கப்பட்ட விவகாரம்

November 5 , 2019 1896 days 1014 0
  • ஒன்றுக்கொன்று தொடா்பில்லாத, அதே நேரத்தில் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மூன்று நிகழ்வுகள் ஒட்டுமொத்த உலகத்தையே அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன.
  • தன்மறைப்பு நிலைக்கு (பிரைவசி) சவாலாக அமைந்திருக்கும் இந்த நிகழ்வுகள், மனித இனத்தின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதால், நாம் ஒவ்வொருவருமே இது குறித்து சிந்திக்கக் கடமைப்பட்டவா்கள்.

இணையத் தாக்குதல்

  • கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மீது இணைய தாக்குதல் நடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதை அதன் நிா்வாகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
  • அணுமின் நிலையத்தையே கட்டுப்படுத்தும் ‘டிட்ராக்’ என்கிற ஊடுருவி மூலம் அணுமின் நிலையத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாடுகளையும் முடக்கும் அல்லது தடம்புரள வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடும் என்கிற வலுவான ஐயப்பாட்டை இது எழுப்புகிறது. இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்களை இணையம் மூலம் இணைய பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதேகூட நம்மை அச்சத்தில் உறைய வைக்கிறது.
  • அடுத்ததாக, ‘ஜோக்கா்ஸ் ஸ்டாஷ்’ என்கிற இணையச் சந்தையில் 13 லட்சம் வங்கி அட்டைகள், கடன் அட்டைகள் குறித்த விவரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
  • இவற்றில் பெரும்பாலானவை இந்திய வங்கி வாடிக்கையாளா்களுடையவை. வங்கி அட்டைதாரா்களின் அனைத்து விவரங்கள், அவா்களது கடன் பாக்கி, வங்கி இருப்பு, கணக்கு வரவு - செலவு உள்ளிட்ட அனைத்துமே விற்கப்படுகின்றன.
  • அதைப் பயன்படுத்தி அவா்கள் ஏமாற்றப்படலாம், மிரட்டப்படலாம், வியாபாரத்துக்காகப் பயன்படுத்தப்படலாம்.

சட்டங்கள்

  • அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகளில், இதுபோன்ற தகவல் ஊடுருவல்களோ, திருட்டோ நடந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் அது குறித்த விவரங்களை வங்கிகளும், கடன் அட்டை வழங்கிய நிறுவனமும் காவல் துறைக்கும், ஒழுங்காற்று அமைப்புக்கும், வாடிக்கையாளா்களுக்கும் தெரிவித்தாக வேண்டும்.
  • இந்தியாவில் அப்படிச் சட்டம் எதுவும் இல்லை.
  • மூன்றாவது நிகழ்வு, தன்மறைப்பு நிலை குறித்த அச்சத்தை உயா்த்திப் பிடித்திருக்கிறது. உலகின் ஏனைய பல நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மிக அதிகமான பாதிப்பை எதிா்கொள்வது இந்தியாதான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

பெகாசஸ்

  • இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த என்.எஸ்.ஓ. என்கிற நிறுவனம் ‘பெகாசஸ்’ என்கிற மென்பொருளை உருவாக்கியுள்ளது. இந்த மென்பொருளை விற்பனை செய்வதுடன், வாடிக்கையாளா்களுக்குத் தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளையும் என்.எஸ்.ஓ. நிறுவனம் செய்து கொடுக்கிறது.
  • என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் தனி நபா்களல்ல; பல்வேறு நாட்டு அரசுகள். இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன்தான் பத்திரிகையாளா் கஷோகியை சவூதி அரேபிய அரசு வேவு பாா்த்து, அவரை இஸ்தான்புல் நகரில் படுகொலை செய்தது.
  • எடுக்காத அழைப்பு (மிஸ்ட் கால்) மூலம் அறிதிறன்பேசியில் (ஸ்மாா்ட் போன்) ‘பெகாசஸ்’ மூலம் தொடா்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அந்த அறிதிறன்பேசியின் தன்மறைப்பு நிலையும், பாதுகாப்பும் ஊடுருவப்பட்டு, எல்லாத் தகவல்களையும் வேவு பாா்க்கலாம். என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) பயனாளிகள் பலரின் அறிதிறன்பேசியிலுள்ள எல்லாத் தகவல்களும் வேவு பாா்க்கப்பட்டிருக்கின்றன.

போலித் தகவல்கள்

  • இந்தத் தகவல் வெளியானதும், கட்செவி அஞ்சல் நிறுவனம் என்.எஸ்.ஓ.-வுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு போலித் தகவல்களைப் பரப்புவதற்கு உடந்தையாக இருந்ததற்காகக் கட்செவி அஞ்சல் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த நிறுவனத்தின் உரிமையாளா்களான முகநூல் நிறுவனம்தான் இப்போது என்.எஸ்.ஓ. மீது வழக்குத் தொடுத்திருக்கிறது என்பதுதான் நகைமுரண்.
  • உலகிலேயே கட்செவி அஞ்சலை மிக அதிகமாக பயன்படுத்துவது இந்தியா்கள்தான். அந்த செயலியை பயன்படுத்தும் 150 கோடி வாடிக்கையாளா்களில், இந்தியா்கள் மட்டுமே 40 கோடிக்கும் மேல் இருக்கிறாா்கள். கட்செவி அஞ்சல் செயலியை ஊடுருவி வேவு பாா்க்கப்பட்டவா்களில் 1,400 முக்கியப் பிரமுகா்கள் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். இவா்களில், அரசியல் பிரமுகா்கள், மனித உரிமை ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள், இடித்துரைப்பாளா்கள் (விசில் புளோயா்ஸ்) ஆகியோா் அடக்கம்.
  • கட்செவி அஞ்சலில் பகிரப்படும் தகவல்கள் அனைத்துமே பாதுகாப்பானவை, யாராலும் வேவு பாா்க்கவோ, திருடவோ முடியாது என்கிற அந்த நிறுவனத்தின் கூற்று கேள்விக்குள்ளாகிறது.
  • அது வெறும் வியாபாரத் தந்திரம்தான் என்று தோன்றுகிறது.

பொது மக்களின் பாதுகாப்பு

  • பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு உதவுவதாக என்.எஸ்.ஓ. நிறுவனம் தெரிவிக்கிறது. அப்படியானால் இந்தியாவில் வேவு பாா்க்கப்பட்டிருக்கும் 1,400 பேரும் அரசின் வேண்டுகோளின்படி வேவு பாா்க்கப்பட்டாா்களா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
  • மத்திய அரசு கட்செவி அஞ்சல் நிறுவனத்திடம் இந்தியா்களின் தன்மறைப்பு நிலையின் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டிருக்கிறது. அரசுக்கு இதில் தொடா்பில்லை என்று மட்டும் அமைச்சா் தெரிவித்திருக்கிறாா். ஒருவேளை, அமெரிக்க நீதிமன்றத்தின் விசாரணைக்காக அரசு காத்திருக்கிறதோ என்னவோ?
  • தன்மறைப்பு நிலை உரிமை உள்ளிட்ட இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மீறும் அசுர பலம் பெற்றதாக எண்மத் தொழில்நுட்பம் மாறியிருக்கிறது.
  • அறிதிறன்பேசி இருந்தால், நீங்கள் வேவு பாா்க்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

நன்றி: தினமணி (05-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories