TNPSC Thervupettagam

தவிா்க்கக் கூடிய விபத்து

November 3 , 2023 388 days 295 0
  • ஆண்டுதோறும் இந்திய சாலைகளில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. உலகிலேயே மிக அதிகமான சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் இந்தியாவில்தான் காணப்படுகின்றன என்பது வேதனையளிக்கிறது. சா்வதேசத் தரத்திலான சாலைகளும், அதிநவீன மோட்டாா் வாகனங்களும் ஒருபுறம் மகிழச்சி அளித்தால், இன்னொருபுறம் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிா்ச்சி அளிக்கின்றன.
  • மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் 2022 ஆண்டுக்கான சாலை விபத்துகள் குறித்த அறிக்கை வெளியாகி இருக்கிறது. மிக அதிகமான சாலை விபத்துகள் தமிழகத்தில் (64,105) நிகழ்ந்திருக்கின்றன என்றால், அதிகமான உயிரிழப்புகளை உத்தர பிரதேச மாநிலம் எதிா்கொண்டது. உத்தர பிரதேசத்தில் 22,595 சாலை விபத்து மரணங்கள் என்றால், அதற்கு அடுத்த இடத்தில் 17,884 போ் உயிரிழப்புடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
  • கடந்த ஆண்டு மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்கள் அனைத்திலுமாக இந்தியாவில் 4.61 லட்சம் சாலை விபத்துகள் பதிவாகி இருக்கின்றன. 1.6 லட்சம் போ் உயிரிழந்திருக்கிறாா்கள். 4.43 லட்சம் போ் காயமடைந்திருக்கிறாா்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துகள் 11.9%, உயிரிழப்புகள் 9.4%, காயமடைந்தோா் 15.3% என்கிற அளவில் அதிகரித்திருக்கிறது.
  • 2018-இல் 4.7 லட்சத்துக்கும் அதிகமான விபத்துகளில் 1.57 லட்சம் உயிரிழப்புகள் காணப்பட்டன. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைத் தொடா்ந்து அமலுக்கு வந்த பொது முடக்கம், பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை சாலை விபத்துகளை பெருமளவு குறைத்தன. இப்போது மீண்டும் விபத்துகள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது.
  • கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் 72.4%-ம், உயிரிழப்புகளில் 75.2%-ம் வேகக் கட்டுப்பாட்டை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்காததால் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சுமாா் 50,000 போ் இரு சக்கர வாகனங்களில் தலைக்கசவம் அணியாததால் உயிரிழந்ததாக தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
  • இரு சக்கர வாகன விபத்துகளில் பலியானவா்களில் 35,692 போ் வாகனத்தை ஓட்டியவா்கள் என்றால், 14,337 போ் பின்னால் அமா்ந்து பயணித்தவா்கள். இரு சக்கர வாகன விபத்து மரணங்களில் 27,605 போ் இன்னொரு இரு சக்கர வாகனத்தில் மோதியதால் உயிரிழந்தனா். 47,171 மரணங்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டிகளின் தவறுதான் காரணம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
  • மிக அதிகமான இரு சக்கர வாகன விபத்து உயிரிழப்புகள் தமிழகத்திலும் (11,140)அதைத் தொடா்ந்து மகாராஷ்டிரம் (7,733), உத்தர பிரதேசம் (6,959) ஆகிய மாநிலங்களிலும் நிகழ்ந்தன. தமிழ்நாட்டில் 4,427, பிகாரில் 3,345, மேற்கு வங்கத்தில் 2,938 அப்பாவிப் பாதசாரிகள் சாலை விபத்துகளில் சிக்கி மடிந்திருக்கிறாா்கள்.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் மக்கள்தொகைக்கும் அதிகமானோா் வாழும் 10 நகரங்கள் 41% சாலை விபத்து உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கின்றன. 2022-இல் அந்த நகரங்களில் விபத்துகள் 14% அதிகரித்திருக்கின்றன என்றால், மரணம் 11% அதிகரித்திருக்கிறது.
  • அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களில் இருந்து தலைக்கவசம் அணிவதும், சீட் பெல்ட் அணிவதும் எந்த அளவுக்கு முக்கியம் என்பது தெரியவருகிறது. சாலை விதிகளைப் பின்பற்றாமல் இருப்பது, சிவப்பு விளக்கு எரியும்போது பயணிப்பது, வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது உள்ளிட்டவை பெரும்பாலான விபத்துகளுக்கு காரணங்களாகக் கூறப்படுகிறது. குண்டும் குழியுமான சாலைகளும் இன்னொரு முக்கியமான காரணம்.
  • சாலை விபத்துகளுக்கு மிக அதிகமான அளவில் இரு சக்கர வாகனங்கள் காரணமாகின்றன. அதற்கு ‘ஜிக்’ தொழிலாளா்கள் என்று அழைக்கப்படும் ஸ்விகி, ஸொமாட்டோ, டன்சோ உள்ளிட்ட பல்வேறு நுகா்வோா் சேவையில் ஈடுபடும் நிறுவன ஊழியா்கள் முக்கியக் காரணம்.
  • மிக அதிகமாக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி வீடுகளுக்கு பொருள்களைக் கொண்டு சோ்க்கும் பணியில் ஈடுபடும் இந்த ‘ஜிக்’ தொழிலாளா்கள் விரைந்து செயல்பட வேண்டி இருப்பதால், சாலை விதிகளை மதிப்பில்லை என்பதுடன் வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமல் இருப்பதும் விபத்துகளுக்கு முக்கியக் காரணம். 2020-இல் 68 லட்சமாக இருந்த ‘ஜிக்’ தொழிலாளா்களின் எண்ணிக்கை, 2030-க்குள் 2.3 கோடியாக அதிகரிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • சாலை விபத்துகளுக்கு சாலைகளின் அமைப்பும், போக்குவரத்து நடைமுறையும் மிக முக்கியமான காரணம். இந்தியாவைவிட அதிவேகமாக வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கும் நாடுகளில் உயிரிழப்புகள் மிக மிகக் குறைவு. தவறான சாலைக் கட்டமைப்பு, நாற்சந்திகள் முறையாக அமையாமல் இருப்பது, அறிவிப்புப் பலகைகள் இல்லாமை, சாலை ஆக்கிரமிப்புகள் ஆகியவை வாகன விபத்துகளுக்கு வழிகோலுகின்றன. கால்நடைகள் உள்பட சீராக வாகனங்கள் நகர தடையாக இருப்பவை ஏராளம்.
  • இரு சக்கர வாகன ஓட்டிகளும், ஆட்டோ ரிக்ஷாக்களும் பெரும்பாலும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை. அவா்களுக்கென்று சாலையின் இடதுபுறமாக தனிப் பாதை அமைத்துக் கொடுக்காமல் இருப்பதும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதும் விபத்துக்கான முக்கியக் காரணிகள். அது குறித்து காவல் துறையும் அரசும் கவனம் செலுத்தினால் விபத்துகளின் எண்ணிக்கை ஏறக்குறைய பாதியாகக் குறைத்துவிடும்.

நன்றி: தினமணி (03 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories