- தஸ்தயெவ்ஸ்கியை மொழிபெயர்த்தல் என்பது ஒரு தவம் என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை அவரது ‘மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்’ புதினத்தை மொழி பெயர்க்கக் கிடைத்த வாய்ப்பின் பொழுதுகளில் உணர்ந்துகொண்டேன். கதைசொல்லலின் ஊடாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உளவியல் நுண்பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார். அவற்றின் பரிசோதனை விளைவுகளைத் தத்துவங்கள் ஆக்குகிறார். எந்தவொரு சிறிய கதைமாந்தரையும், கதைப்புலத்தில் ஒரு மின்னலைப் போலத் தோன்றி மறையும் மனிதரையும்கூட, அவர் போகிற போக்கில் விட்டுவிடுவதில்லை. அந்த மனிதரின் மனஅமைப்பு, அவரின் தனித்தன்மையான இயல்புகள், நிகழ்வில் பங்கேற்பாளராக இருக்கும் அவர் அத்தகைய வழிமுறையில் எதிர்வினையாற்ற என்ன காரணம் என்பதையெல்லாம் அழகாக அடுக்கித் தந்துவிடுதல் தஸ்தயெவ்ஸ்கியின் தனிச் சிறப்பான கதைசொல்லும் பாணி என்பது அவரது வாசகர்கள் அறிந்ததுதான்.
- இந்தப் புதினத்தின் ஆங்கிலப் பிரதியில் ஏராளமான மரபுத் தொடர்கள் இடம்பெற்றிருந்தன, அவற்றைத் தமிழ்ப்படுத்துவது மாபெரும் சவாலாக இருந்தது. அவற்றுக்கான விளக்கப்பொருள்கள் அகராதியில்கூட இடம் பெற்றிருக்கவில்லை. இணைய உதவியால் அவைஒவ்வொன்றின் பொருளைத் தேடிப் புரிந்து கண்டுகொள்ள, அந்தச் சொற்றொடர்கள் கடும் உழைப்பை வாங்கிக்கொண்டன.
- தஸ்தயெவ்ஸ்கி எந்தவொரு சிறு நிகழ்வையும், அதுஎளிமையான, சாதாரண விஷயம் என்று அலட்சியமாகப்போகிறபோக்கில் சொல்பவர் அல்ல. சிறு விவரங்களையும்கூட அதன் நுட்பம் பிசகாமல், ஒரு ஓவியன் சிறுசிறு கோடுகளாக வரைந்து, அதன் உருவத்தை முழுமைப்படுத்துவதுபோல, நிகழ்வுகளின் சின்னச் சின்ன அசைவுகளையும் விவரித்து அந்தக் காட்சியை நிறைவுசெய்வதில் அமைந்திருக்கிறது தஸ்தயெவ்ஸ்கியின் தனித்தன்மையான கலைநுட்பம்.
- சிறைக் கைதிகள் நடத்தும் நாடகத்துக்காக ஓவியங்கள் நிறைந்த திரை உருவாக்கப்படுதல், சிறைக்கு வெளியில் இருக்கும் ஒரு பெண், பொன்மெருகுத்தாள்கள் ஒட்டி அழகான சிகரெட் பெட்டிகள் செய்தல் - இத்தகைய காட்சிகளை அதன் நுணுக்க விவரங்களோடு அவர் விவரித்துக்காட்டுகிறார். உரையாடல்கள், பொருத்தமான இடங்களில், தேவையான அளவில் மட்டுமே இந்தப் புதினத்தில் இடம்பெற்றுள்ளன.
- ஆனால், அளவெடுத்ததுபோலச் செதுக்கப்பட்டிருக்கும் அந்த உரையாடல்கள் வழியாகப் பேசும் கதைமாந்தரின் தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. நகைச்சுவை, எள்ளல், வஞ்சகம், துயரம், துரோகம் ஆகிய அனைத்து வகை உணர்வுகளையும் அந்தந்தக் கதைமாந்தர்கள் நிகழ்த்தும் உரையாடல்களின் சிறுசொற்கள் புலப்படுத்திவிடுகின்றன.
- அரசாங்கக் கடமைப் பொறுப்பில் இருப்பவர்களது பணிச்சீருடை ஒருவரை எந்தளவு அகங்காரத்தின் சிகரத்துக்கு இட்டுச் சென்று, அவரைக் குணப்பிறழ்வு அடையச் செய்துவிடும் என்பதற்கு மேஜர் ஒரு எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகிறார். எல்லையற்ற அதிகாரம் கருணையின் ஊற்றுக்கண்களை அடைத்துவிடுவதையும், அவரது இதயம் பாழ்தோற்றமடைந்த இருள்கேணியாகி விடுவதோடு, அதில் அன்பின் ஒரு துளிகூடச் சுரக்கஇயலாதபடி, அது கெட்டித்து இறுகிவிடுவதை மேஜர் தொடர்பான காட்சிகள் உணர்த்துகின்றன. நீதித் துறை, சட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தக் கலைப்படைப்பின் வழியாக தஸ்தயெவ்ஸ்கி முன்வைக்கும் தத்துவங்கள் 150 வருடங்கள் கடந்து இன்றும் பொருத்தமுடையவையாக இருப்பது வியக்கவைக்கிறது.
- ‘மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்’ அதன் அனைத்துவித அம்சங்களாலும், அது எல்லாக் காலங்களுக்குமான நவீனத்துவம் கொண்ட முதன்மையான பேரிலக்கியம் என்று நாம் சொல்லிவிட முடியும். காரணம், அது அகிலம் முழுமையுமான அனைத்து உயிர்கள் மீதும் கொண்டிருக்கும் பேரன்பு. வாத்துகள், நாய்கள், குதிரை, ஆடு, கழுகு இத்தகைய அஃறிணைப் படைப்புயிர்களோடு மனிதர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் உள்ளுணர்வுத் தொடர்புகளை, பாசாங்கற்று, அதனதன் நிகழ்வுகளோடு கோத்துத் தரும் காருண்யத்தால் தஸ்தயெவ்ஸ்கியை, ‘சோவியத் ரஷ்யாவின் வள்ளலார்’ என உணர்ந்துகொள்ள முடியும்.
- சிறை வாழ்க்கை தொடர்பான இந்தப் புதினத்தில், பல வகைப்பட்ட குற்றவாளிகளை வாசகர் முன் நிறுத்துகிறார் - அவர்களைக் குறித்த விருப்பு வெறுப்புகளற்று, விமர்சனங்களற்று, அவரவர் இயல்புடன்.
- சிறை ஒரு துண்டுபட்ட தனித்த உலகம் எனக் காட்டப்படும் அதில் நல்லவர்களும் மோசமானவர்களும் கலந்து வாழ்கிறார்கள். பலர் அங்கும்கூட அவர்களுக்குப் பொருத்தமான மனிதர்களைக் கண்டுகொண்டு மகிழ்ச்சியாகக் காலம் கடத்துகிறார்கள். சந்தர்ப்பங்களின் அவ்வாய்ப்புகளால் அந்த உலகத்தில் நுழைய நேர்ந்த நுட்பமான உணர்வுடைய சிலர், அவர்களது வீட்டைப் பற்றிய ஏக்கங்களால் துயரடைகிறார்கள்.
- நல்ல இயல்புடைய பல சிறைவாசிகளது உடல் ஆற்றலும் அறிவுத்திறனும் இந்த நாட்டுக்குப் பயன்படாமல் சிறைச் சுவர்களுக்குள் வீணாக அழிந்துபோவதை தஸ்தயெவ்ஸ்கி அழுத்தமான கோரிக்கையாக, அதே வேளையில் அதைக் கலைநுட்பத்துடன், அகிலம் முழுவதிலும் இருக்கும் அனைத்து அறிவுத் துறையினருக்கும் உணர்த்துகிறார்.
- சிறைக்குள் முடக்கப்பட்டுக் கிடப்பவர்களாயினும் அங்கு பணம் மிக இன்றியமையாத பங்கு வகிக்கிறது. இதன் வழியாக ‘பணம்’ குறித்து, அது தொடர்புடைய நிகழ்வுகள் வழியாக, அதை ஒரு கோட்பாடாக ஆக்கிக் காட்டுகிறார். பணத்தின் வழியாக சிறைக்குள், அவர்கள் எந்தெந்த வழிமுறைகளில் சுதந்திரத்தைத் துய்க்கிறார்கள் என்பது சற்றுக் கூடுதலாக விவரித்துக் காட்டப்படுகிறது.
- மாலை வேளையில் சிறையின் தங்கும் முகாம் தாழிடப்பட்டதும், அந்த இடம் மெழுகுவத்தி ஒளியில் ஒரு பணிமனையாக மாறுகிறது. அங்கு அந்தரங்கமாக எல்லாவகைத் தொழில்நுட்பங்களும் முனைப்பாக செயல்படத் தொடங்கி, அதன் வழியாகப் பணம் ஈட்டுகிறார்கள் என்பதைக் காட்சிகளாக்குவதன் வழியாக ‘பணம்’ என்பது எவ்விடத்திலும் தவிர்க்க இயலாத ஒன்று என்ற கருத்தியல் நிறுவப்படுகிறது.
- வோட்கா கள்ள வணிகம் சிறைக்குள் தந்திரமாக நடத்தப்படும் நுட்பங்களை விவரிக்கும் இடங்கள் மிகுந்த ஆச்சரியம்அளிப்பவை. பலவகைக் குற்றவாளிகள், வெவ்வேறு விதமான குற்றச்செயல்கள் குறித்து இந்தப் புதினம் ஊடாக தஸ்தயெவ்ஸ்கி விஸ்தாரமாகப் பேசுகிறார். என்றபோதிலும், எந்தவித ஒழுக்க நியதிகளையும் அவர் வலிந்து திணிக்கவில்லை என்பது இதன் கலைச்சிறப்பு. ஆனால், அவற்றின் பாதைகளில் நமக்குப் பல தத்துவ தரிசனங்களை அளிக்கிறார். அதுதான் இந்தப் படைப்பின் இன்றியமையாத லட்சியமாக இருக்கிறது.
- நாவலின் இடையூடாகச் சொல்லப்படும் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் லொவிசா, அகோகா. இவர்கள் வழியாகச் சொல்லப்படும் காதல் கதைகள் - 150 வருடங்களுக்கு முந்தைய பெண்கள் - பெண் மனதின் விளங்காப் புதிர் மேல் சிறு ஒளிக்கீற்றைப் பாய்ச்சுகிறது. ஆனாலும் அந்த அரூப இருள் முற்றிலுமாக வெளிச்சப்படுத்திக் காட்டப்படவில்லை. ஆதலால், விநோதமான மனநுட்பம் கொண்ட இந்தக் காதல் கதைகள் என்றென்றும் நிலைத்த புதுமை கொண்டவை.
- துயருற்றுச் சோர்ந்த சிறைவாசிகளைச் சிறைக்கு வெளியிலிருந்து வரும் எல்லா வகைச் செய்திகளும், அவை வதந்திகள் என்றாலும்கூட, அவர்களைப் பரபரப்பு அடையச் செய்கின்றன. வோட்காவும், அப்பம் விற்க வரும் பெண்களும், வேலைத் தலங்களில் எதிர்ப்படும் நாட்டுப்புறத்து நங்கைகளும் உண்டாக்கும் உவகை அவர்களைத் தற்காலிகமாக உற்சாகப்படுத்தி, துயர இருளிலிருந்து அவர்களைச் சற்று மீட்டுவருகிறது.
- அவர்கள் மேல் வலிந்து திணிக்கப்படும் கடும்வேலைகளால் சிறைத் துறைக்கோ, அரசாங்கத்துக்கோ அல்லது சமூகத்துக்கோ எந்தவித ஆக்கபூர்வமான பயன்கள் இல்லாவிடினும் அவர்களுக்கு அவ்வப்போது கடின உழைப்பு விதிக்கப்படுவது ஏன்? இதற்கான காரணம் அலசப்படுகிறது. இந்தப் புதினத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், அவற்றின் வரிகளிலும், அதில் அமைந்திருக்கும் சொற்களிலும் அரூபமாக வீற்றிருக்கும் தஸ்தயெவ்ஸ்கி, இதை வாசிக்கும் ஒவ்வொருவரின் உணர்வுப் பரப்பிலும் ஓர் உன்னதமான ரசவாதத்தை உறுதியாக நிகழ்த்திவிடுவார்.
- தஸ்தயெவ்ஸ்கி எந்தவொரு சிறு நிகழ்வையும், அது எளிமையான, சாதாரண விஷயம் என்று அலட்சியமாகப் போகிறபோக்கில் சொல்பவர் அல்ல. சிறு விவரங்களையும்கூட அதன் நுட்பம் பிசகாமல், ஒரு ஓவியன் சிறுசிறு கோடுகளாக வரைந்து, அதன் உருவத்தை முழுமைப்படுத்துவதுபோல, நிகழ்வுகளின் சின்னச் சின்ன அசைவுகளையும் விவரித்து அந்தக் காட்சியை நிறைவுசெய்வதில் அமைந்திருக்கிறது தஸ்தயெவ்ஸ்கியின் தனித்தன்மையான கலைநுட்பம்!
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2023)