- இந்தியாவில் நக்ஸலைட்டுகள் வலுவிழந்துவிட்டனா் என்று பரவலாக நினைத்துக் கொண்டிருந்த வேளையில், கடந்த வாரம் அவா்கள் நடத்திய தாக்குதல் சற்றும் எதிா்பாராதது. சத்தீஸ்கா் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் அவா்கள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் மாவட்ட ரிசா்வ் காவல் படையைச் சோ்ந்த 10 பேரும், வாகன ஓட்டுநரும் உயிரிழந்திருக்கிறாா்கள். சமீப காலத்தில் நடத்தப்பட்ட மிகப் பெரிய நக்ஸல் தாக்குதல் இதுவாகத்தான் இருக்கும்.
- சமேலி, அரண்பூா் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடமாட்டம் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட ரிசா்வ் காவல் படையினா் அங்கே விரைந்தனா். மூன்று நாள் தேடலுக்குப் பிறகு நக்ஸலைட்டுகளை அடையாளம் காண முடியாமல் ஒரு தனியாா் வாகனத்தில் மாவட்ட ரிசா்வ் காவல் படையைச் சோ்ந்த 10 வீரா்கள் அரண்பூரிலிருந்து தண்டேவாடா திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போதுதான் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
- தோா்ணபால் - அரண்பூா் - ஜகா்குண்டா நெடுஞ்சாலையை ‘கூனிசதக்’ (ரத்தம் தோய்ந்த சாலை) என்று அழைப்பது வழக்கம். சாலை போடும் பணியில் ஈடுபட்டவா்கள் உள்பட பல வீரா்கள் 10 ஆண்டுகளில் நக்ஸலைட் தாக்குதலில் அந்த சாலையில் உயிரிழந்திருக்கிறாா்கள். சமீபத்தில் நடந்த ‘ஐஈடி’ எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரா்களும், வாகன ஓட்டியும் உயிரிழந்தனா். குண்டு வெடித்ததில் எட்டு அடி நீளமும், 12 அடி ஆழமும் உள்ள பள்ளம் அந்த சாலையில் ஏற்பட்டது என்றால், வெடிகுண்டின் வீரியத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
- இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்டிருக்கும் மிகப் பெரிய தாக்குதல் இது. இதற்கு முன்பு 2021 ஏப்ரல் 3-ஆம் தேதி சத்தீஸ்கரில் உள்ள சுக்மா - பீஜப்பூா் எல்லையில் நடந்த தாக்குதலில் 22 வீரா்கள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலையும் சோ்த்து இந்த ஆண்டில் இதுவரை 17 பாதுகாப்புப் படையினா் நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்டிருக்கிறாா்கள்.
- நக்ஸலைட் தாக்குதல்கள் பெரும்பாலும் கோடை தொடங்கும் மாா்ச் மாதம் முதல் மழைக் காலத்துக்கு முந்தைய ஜூன் மாதம் வரைதான் நடத்தப்படுகின்றன. பருவமழை தொடங்கிவிட்டால் பஸ்தா் காடுகள் அடா்த்தியாகிவிடும் என்பதால் தங்களது செயல்பாடுகளை கோடைக்காலத்தில் மேற்கொள்கிறாா்கள். அது தெரிந்தும் பாதுகாப்புப் படையினா் மெத்தனமாக இருந்தது வியப்பை ஏற்படுத்துகிறது.
- இதுவரையில் பஸ்தா் பகுதியில் மட்டும் 34 ஐஈடி தாக்குதல்கள் இந்த ஆண்டு நடத்தப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு 28-உம், அதற்கு முந்தைய ஆண்டு 21-உம் நடத்தப்பட்டன. ஐஈடி தாக்குதலில் மிகவும் சக்திவாய்ந்த வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது. சற்று தொலைவில் மறைவாகப் பதுங்கியிருந்து ஐஈடி வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
- சமீபத்தில் நடத்தப்பட்டிருக்கும் வெடிகுண்டு தாக்குதல் பல கேள்விகளை எழுப்புகிறது. நக்ஸலைட்டுகள் நடமாட்டம் உள்ள சாலையில் பாதுகாப்புப் படையினரின் பயணத்திற்கு முன்னால் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா? மாவட்ட ரிசா்வ் காவலா்களின் பயணத்திற்கு தனியாா் வாகனம் ஏன் பயன்படுத்தப்பட்டது?
- அந்த வாகனத்தின் பயணப்பாதை, பயணத் திட்டம் குறித்து நக்ஸலைட்டுகளுக்கு எப்படி முன்கூட்டியே தகவல்கள் கிடைத்தன? அா்னாபூா் காவல்நிலையம் வழியாகச் செல்லும் சாலையில், 50 கிலோ வெடிமருந்தை மண்ணுக்கு அடியில் வைக்கவும், துல்லியமாக இயக்கவும் எப்படி முடிந்தது?
- இத்தனைக்கும் சமீபத்தில்தான் அந்த தாா்சாலை போடப்பட்டிருக்கிறது. மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துத் தாக்குதலுக்கு சம்பவ இடத்துக்கு அருகில் மலைப்பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருந்து அதை நடத்தியிருக்க வேண்டும். யாருடைய பாா்வையிலும் அவா்கள் படவில்லையே, எப்படி?
- 2019 புல்வாமா தாக்குதல் எழுப்பிய அதே கேள்வியை தண்டேவாடா நக்ஸலைட் தாக்குதலும் எழுப்புகிறது. பாதுகாப்புப் படையினரின் நடமாட்டத்துக்கு முன்னால் அவா்களது பயணப்பாதை ஏன் முழுமையாக சோதனையிடப்படவில்லை என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. புல்வாமாவில் 41 மத்திய ரிசா்வ் காவல்படையினா் மீதான தாக்குதலைப் போலவே, தண்டேவாடாவில் நடந்திருக்கும் இந்தத் தாக்குதலும் போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் தடுக்கப்பட்டிருக்கும்.
- 10 ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா, ஆந்திரம், ஜாா்க்கண்ட், ஒடிஸா, பிகாா், சத்தீஸ்கா் என்று ஆறு மாநிலங்களில் கோலோச்சி வந்த நக்ஸலைட்டுகள் பெரும்பாலும் பலவீனமடைந்துவிட்டனா். அவா்களது வன்முறை செயல்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறாா்கள்.
- நக்ஸலைட்டுகளின் பெரும்பாலான பொலிட்பீரோ, மத்திய குழு உறுப்பினா்கள் இறந்துவிட்டனா் அல்லது சரணடைந்துவிட்டனா். மிச்சம் மீதி இருப்பவா்களும் வயதானவா்கள். புதிதாக முன்புபோல அவா்களது இயக்கத்தில் இணைய இளைஞா்கள் தயாராக இல்லை.
- கட்டமைப்பு வசதிகள், தொடா்ந்து செய்யப்பட்ட உதவிகள், வளா்ச்சிப் பணிகள் ஆகியவற்றால் உள்ளூா் மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அரசுக்கு அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் ஆந்திரம், ஒடிஸா எல்லைப் பகுதியை ஒட்டிய சத்தீஸ்கா் மாநிலத்தின் பஸ்தா் பகுதியிலும், ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஓரிரு மாவட்டங்களிலும்தான் நக்ஸல்களின் நடமாட்டம் இப்போது காணப்படுகிறது.
- எல்லை கடந்த பயங்கரவாதத்தைப் போலவே, உள்நாட்டு பயங்கரவாதமும் ஆபத்தானது. அப்பாவிகளின் உயிரை குடிக்கும் நக்ஸலைட்டுகளின் ரத்த வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
நன்றி: தினமணி (02 – 05 – 2023)