- தான்சானியாவில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல முக்கியத் தலங்களும், நகரங்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.
கிளிமஞ்சாரோ
- இந்தப் பெயர் நம்மில் பலருக்கும் அறிமுகமான பெயர். இதைப் பற்றிய ரஜினிகாந்த் திரைப்பாடலும் உண்டு. (அதை தென் அமெரிக்காவில் உள்ள மச்சு பிச்சுவில் படமாக்கிய பெருமையும் நமதே).
- தான்சானியா நாட்டின் முக்கியமான புவியியல் அடையாளங்களுள் ஒன்று கிளிமஞ்சாரோ மலை. ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரம் இதுதான் (5895 மீட்டர் உயரம். எவரெஸ்ட் சிகரம் 8,849 மீட்டர்கள்). கிளிமஞ்சாரோவின் உயரம் காரணமாக, அதன் சிகரத்தில் படர்ந்திருக்கும். கிளிமஞ்சாரோ என்பதற்கான பெயர்க்காரணம் தெரியவில்லை. பெரிய மலை அல்லது வெள்ளை மலை என இருக்கலாம் என ஊகங்கள் சொல்கின்றன.
- கிளிமஞ்சாரோ ஒரு செயலிழந்த எரிமலை. கடைசியாக 3.6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்திருக்கலாம் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதன் சிகரத்தை 1889ஆம் ஆண்டு, ஹேன்ஸ் மேயர் என்னும் ஜெர்மானியர் முதன்முதலில் அடைந்தார். கிளிமஞ்சாரோவின் சிகரம் இன்று. ‘விடுதலை முனை’ (Uhuru) என அழைக்கப்படுகிறது. இதையொட்டிய பகுதிகள், கிளிமஞ்சாரோ வனவிலங்குப் பூங்காவாக பராமரிக்கப்படுகின்றன.
- கடந்த 100 ஆண்டுகளில், கிளிமஞ்சாரோவின் பனிச் சிகரப் பரப்பளவு 80% குறைந்திருக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. கிளிமஞ்சாரோவின் இரு தரப்பிலும் ஆருஷா, மோஷி என இரண்டு அழகிய நகரங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் ச்சாகா என்னும் பழங்குடியினத்தவர் அதிகம் வசிக்கிறார்கள். இவர்கள் வணிகம் மற்றும் கல்வியில் சிறந்தவர்கள் எனப் பொதுவாக நம்பப்படுகிறது.
- இது ஸெரெங்கெட்டி தேசியப் பூங்காவை ஒட்டி அமைந்துள்ள பகுதி என்பதால், தான்சானியாவின் இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் சுற்றுலாத் தலங்களுக்கே தான்சானியா வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்கள், கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தில் ஏறுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு கிராமம் போன்ற இப்பகுதியில், மிக அழகிய பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. கிளிமஞ்சாரோ மாரத்தன் மிக முக்கியமான விளையாட்டு நிகழ்வு.
ஸான்ஸிபார்
- தான்சானியா நாட்டை ஒட்டிய இந்து மாக்கடலின் இருக்கும் தீவுக் குழுக்கள் ‘ஸான்ஸிபார்’ என அழைக்கப்படுகின்றன. ‘ஸான்ஸிபார்’ என்றால் பாரசீக மொழியில் ‘கறுப்பர்களின் நாடு’ என அர்த்தம் என்கிறார்கள். இதன் இரண்டு பெரும் தீவுகள் புங்குஜா மற்றும் பெம்பா.
- ஸான்ஸிபார் தான்சானியா நாட்டின் ஒருபகுதி என்றாலும், இந்தியாவில் காஷ்மீர் / வடகிழக்கு மாநிலங்கள் போல, அதிக அதிகாரங்கள் கொண்ட பகுதி. இதற்கென தனி அதிபர் உண்டு.
- ஸான்ஸிபார் பழங்காலம் தொட்டே பெரும் வணிகத் தலமாக இருந்ததுவந்தது. 15ஆம் நூற்றாண்டில், இங்கே வாஸ்கோட காமா வந்ததன் பின்னால், போர்த்துக்கீசியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 17ஆம் நூற்றாண்டின் இறுதியில், இது ஓமானி சுல்தான்கள் வசம் வந்தது. இங்கே இருந்துகொண்டு, ஓமானி வணிகர்கள், டார் எஸ் ஸலாம் முதல் கென்யாவின் மொம்பாஸா வரையிலான கடல் வணிகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள்.
- இதன் வெண்மணல் கடற்கரைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இங்கே பல ஆடம்பரமான உல்லாச விடுதிகள் உள்ளன. ஸெரெங்கெட்டி போலவே, இங்கும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள்.
- இன்று, ஸான்ஸிபார் தீவுகளைத் தலைமையகமாகக் கொண்டு, பல மென்பொருள் வழி சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. அண்மையில் சென்னை ஐஐடி, தனது முதல் வெளிநாட்டுக் கிளையை ஸான்ஸிபாரில் தொடங்கியுள்ளது கல்வித் துறையின் மிக முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. வருங்காலத்தில், டார் எஸ் ஸலாம் போலவே ஒரு முக்கியமான பொருளாதாரத் தலமாக மாறும் என நம்பப்படுகிறது.
விக்டோரியா ஏரி
- தௌலோ, லுகாண்டா, நியான்ஸா என உள்ளூர் மொழிகளில் அழைக்கப்படும் விக்டோரியா ஏரி, 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும், 1858ஆம் ஆண்டு ஜான் ஹன்னிங் ஸ்பெக் என்னும் ஆங்கிலேயர் இதைக் கண்டுபிடித்த பின்னர், விக்டோரியா ஏரி என அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 60 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இந்த ஏரி (தமிழ்நாட்டில் பாதி), உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரி (அமெரிக்காவின் லேக் சுப்பீரியர் முதலாவது). இது தான்சானியா, உகாண்டா மற்றும் கென்யா நாடுகளுக்குச் சொந்தமானது. உலகின் மிக நீளமான நதிகளில் ஒன்றான நைல் நதி இங்கிருந்து உற்பத்தியாகி 6,650 கிலோமீட்டர் தொலைவு பயணித்து, மத்திய தரைக் கடலில் கலக்கிறது.
- உகாண்டாவின் ஜிஞ்ஜா என்னும் ஊரில் தற்போது ஒரு பெரும் மதகு கட்டப்பட்டு, அதன் வழியே நைல் நதிக்குச் செல்லும் நீர் திட்டமிட்டு அனுப்பப்படுகிறது. இந்த மதகின் வழியே பாயும் நீரில் இருந்து மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. அந்த மதகை நேரில் பார்க்கையில் ஒரு பிரமாண்டமான நதியின் தோற்றுவாய் இவ்வளவுதானா எனத் தோன்றும். அதுசரி, தலைக்காவிரி ஒரு சிறு ஊற்றாகத்தானே இருக்கிறது.
- விக்டோரியா ஏரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி என்பது 1.6 லட்சம் கிலோமீட்டர். இதில் பல பகுதிகளில் இருந்து சிறு சிறு ஆறுகளும், ஒடைகளும் கலக்கின்றன. ஆனால், விக்டோரியா ஏரியின் 70% நீர் வரத்து, அதன் மீதே விழும் மழைதான் எனச் சொல்கிறார்கள், வியப்பாக இருக்கிறது.
- விக்டோரியா ஏரி வழியே ஒரு காலத்தில் பெருமளவு பயணிகள் பயணிக்க நீர்வழிப் போக்குவரத்தும் இருந்தது. தான்சானியாவின் ம்வான்ஸா நகரில் இருந்தது, உகாண்டாவின் எண்டெப்பே (கம்பாலா) செல்ல கலங்கள் இருந்தன. ஆனால், காலப் போக்கில், அதில் நிகழ்ந்த விபத்துகளுக்குப் பிறகு, நீர் வழிப் போக்குவரத்து குறைந்து நின்றுவிட்டன. இன்று சாலை வழிப் போக்குவரத்தும், வான் வழிப் போக்குவரத்துமே பெருமளவு பயன்படுகின்றன.
- இன்று தான்சானியாவின் ம்வான்ஸாவிலிருந்து, பரியாடி, புக்கோபா என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல பெரும் ஃபெர்ரி எனச் சொல்லப்படும் பெரும் படகுகள் உள்ளன. ம்வான்ஸாவிலிருந்து சில தூரம் காரில் சென்று, விக்டோரியாவின் கரையிலுள்ள ஒரு துறையை அடைந்து, அங்குள்ள ஃபெர்ரியில் காரை ஏற்றிவிட்டு, 30 நிமிடம் பயணம் செய்தால் எதிர்க் கரையை அடையலாம். இரண்டு முறை பயணித்திருக்கிறேன். சுகமான பயணம் அது.
- இந்த ஏரியில் ஏராளமான முதலைகள் உண்டு. நீர் யானைகளும் உண்டு. எனவே, இறங்கிக் குளிப்பதெல்லாம் கனவிலும் நினைக்க முடியாது. இந்த ஏரியின் ஒரு கரையில் முசோமா என்றொரு சிற்றூர் உண்டு. எனது நிறுவனத்தின் கிட்டங்கி ஒரு காலத்தில் அதன் கரையிலேயே இருந்தது. அலுவலகப் பிரயாணம் செய்யும்போதெல்லாம், அதன் கரையில் ஒரு அரை மணி நேரமாவது நின்றிருப்பேன். மனம் அமைதியாகிவிடும்.
தாங்கினிக்கா ஏரி
- பொதுவெளியில் அதிகம் பேசப்படாத ஏரி. உலகின் இரண்டாவது ஆழமான, இரண்டாவது அதிகமான நன்னீர் கொண்டிருக்கும் ஏரி. உலக நன்னீரில், 16% இந்த ஏரியில் உள்ளது எனச் சொல்லப்படுகிறது. சராசரியாக 470 மீட்டர் ஆழமுள்ள இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 1.47 கிலோமீட்டர். 33,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு. 1963ஆம் ஆண்டு ஸான்ஸிபாருடன் இணைந்து, தான்சானியாவாக மாறுவதற்கு முன்பு அதன் பெயர் ‘தாங்கினிக்கா’ என்பதை முந்தய கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறேன்.
- வணிகம் தொடர்பாக நான் புருண்டி நாட்டின் தலைநகர் புஜும்புராவுக்குச் செல்ல வேண்டியிருக்கும். விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் சாலை தாங்கினிக்கா ஏரியின் கரை வழியே செல்லும். அங்கே தென்படும் ‘புஜும்புரா துறைமுகம் உங்களை வரவேற்கிறது’ என்னும் பலகை ஒவ்வொரு முறையும் துணுக்குறச் செய்யும். இது ஏரியல்ல தம்பி. கடல்னு எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். நகருக்கு வெளியே இந்த ஏரியின் கடற்கரை உண்டு. டார் எஸ் ஸலாம் கடற்கரை போலவே வெண்மணல். ஆனால் நன்னீர். 640 மில்லிமீட்டர் மழை பொழியும் அரைப் பாலைவனக் கொங்குப் பிரதேசத்தில் இருந்துவந்த ஒருவனுக்கு உலகின் 16% நன்னீர் கொண்ட ஒரு ஏரி என்ன மலைப்பைக் கொடுக்கும் என யோசித்துப் பாருங்கள்!
மலாவி ஏரி
- இதைத் தான்சானியாவில், நியாசா ஏரி என அழைக்கிறார்கள். இதன் பரப்பளவு 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள். இதன் அதிகபட்ச ஆழம் 500-700 மீட்டர்கள் வரை. இதன் கரை தான்சானியா, மொசாம்பிக் மற்றும் மலாவி நாடுகளைத் தொட்டுச் செல்கிறது. இந்த ஏரியை நான் பார்த்ததில்லை. போகணும். இந்த ஏரியின் நீர், பல்வேறு வேதிக் காரணங்களால், பல தளங்கலாக உள்ளது என்கிறார்கள். அந்தத் தளங்கள் தனித்தனியாக உள்ளது. எனவே இதை மெரொமிக்டிக் ஏரி (Meromictic Lake) என அழைக்கிறார்கள்.
பிளவுப் பள்ளத்தாக்கு
- ஆசியாவின் லெபனான் பகுதியில் இருந்து, ஆப்பிரிக்காவின் மொஸாம்பிக் வரை இந்தப் பிளவுப் பள்ளத்தாக்கு உள்ளது. கண்டத்திட்டுகள் மோதியும், முயங்கியும் உருவானது இந்த நிலப் பிரிவு. இந்த நிலப் பிரிவினால் உருவான ஏரிகள், பிளவுப் பள்ளத்தாக்கு ஏரிகள் என அழைக்கப்படுகின்றன. விக்டோரியா, தாங்கினிக்கா மற்றும் மலாவி ஏரிகள் அவற்றுள் முக்கியமானவை.
நன்றி: தி இந்து (03 – 09 – 2023)