TNPSC Thervupettagam

தாமதம் தகாது!

August 29 , 2019 1971 days 1078 0
  • குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய  நாயுடுவும் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபாலும் வெவ்வேறு நிகழ்வுகளில் கூறியிருக்கும் இருவேறு கருத்துகள் தீவிர சிந்தனைக்குரியவை. இரண்டுமே நீண்ட நாள் கோரிக்கைகள்தான் என்றாலும், அவை குறித்த தீவிரமான விவாதமோ, முன்னெடுப்போ இல்லாமல் இருக்கும் நிலையில், இப்போது அவை எழுப்பப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. 
    இந்தியாவின் நான்கு பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் கிளைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் கருத்து.
உச்ச நீதிமன்றம்
  • மேல்முறையீட்டை விசாரிப்பதற்காகவும், அரசியல் சாசனப் பிரச்னைகளை விசாரிப்பதற்காகவும் இரண்டு பிரிவுகளாக உச்சநீதிமன்றம் செயல்பட வேண்டும்  என்பது தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபாலின் கருத்து. உச்சநீதிமன்றம் இரண்டு பிரிவுகளாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அறிக்கைகளில் சட்ட ஆணையம் ஏற்கெனவே பரிந்துரைத்திருக்கிறது. 
  • அரசியல் சாசன உருவாக்கத்தில் முதன்மைப் பங்கு வகித்த அன்றைய சட்ட அமைச்சர் பாபா சாகேப் அம்பேத்கர், சட்டம் குறித்த கருத்து வேறுபாடுகளைக் களைவதையும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மோதல்களையும், முரண்களையும் அகற்றுவதையும்தான் உச்சநீதிமன்றத்தின் முதன்மைக் கடமையாக வலியுறுத்தியிருக்கிறார். சராசரி மேல்முறையீடு நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் செயல்படுவதை அவர் ஆமோதிக்கவில்லை என்பதை, அசாதாரணமான நிகழ்வுகளில் மட்டுமே உச்சநீதிமன்றம் தன்னுடைய மேல்முறையீட்டு அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பதிலிருந்து உணர முடிகிறது.
அடிப்படைக் கடமை 
  • அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதல்கள் ஆகியவற்றை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு அரசியல் சாசனத்தில் வழங்கியிருப்பதன் நோக்கமே, அதன் அடிப்படைக் கடமைகளை வலியுறுத்தவும், வரையறுக்கவும்தான். 
  • உயர்நீதிமன்றங்களின் பரிந்துரையோ, உச்சநீதிமன்றத்தின் அனுமதியோ பெற்ற பிறகுதான் மேல்முறையீடுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து, மேல்முறையீடு என்பது உச்சநீதிமன்றத்தின் முதன்மைக் கடமையோ, சராசரி அலுவலோ அல்ல என்பது தெளிவாகிறது. 
  • கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு அனுமதி மனுக்களின் அளவு அதிகரித்து வருகிறது. அதிகரித்திருக்கும் சிறப்பு அனுமதி மனுக்களின் எண்ணிக்கை உச்சநீதிமன்றத்தின் பணிச் சுமையை கடுமையாக அதிகரித்திருக்கிறது. பிப்ரவரி 2016 நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 59,468 வழக்குகள் தீர்ப்புக்காக தே(ஏ)ங்கிக் கிடக்கின்றன. 
நீதிபதிகளின் எண்ணிக்கை
  • முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் ஒரு முறை கூறியதுபோல, நீதிபதிகளின் பணி நேரத்தில் 98% மேல்முறையீட்டு வழக்குகளை நிராகரிப்பதில் கழிகிறது. தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயும், அரசியல் சாசன அமர்வுகளை அமைப்பதற்கு போதிய நீதிபதிகள் இல்லாமல் இருப்பதால், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதற்கும் அதுதான் காரணம்.
  • சட்டப் பிரிவு, அரசியல் சாசனப் பிரிவு என்று உச்சநீதிமன்றத்தை இரண்டாகப் பிரிப்பதன்  மூலம் அதன் செயல்பாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மிக முக்கியமான தேசிய அளவிலான பொதுநலன் சார்ந்த சட்டச் சிக்கல்களைக் கொண்ட வழக்குகள், மாநிலங்களுக்கிடையேயும், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயும் ஏற்படும் கருத்து மோதல்கள், சட்டப் பிரிவு 143-இன் கீழ் குடியரசுத் தலைவர் கோரும் ஆலோசனைகள் ஆகியவை மட்டுமே தில்லியில் அமைந்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மூலம்  விசாரிக்கப்பட வேண்டும்.
  • தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை என்று இந்தியாவின் நான்கு முக்கியமான நகரங்களில் மேல்முறையீட்டுப் பிரிவு செயல்பட வேண்டும். இந்த நீதிமன்றங்கள் அரசியல் சாசன அடிப்படையிலான தீர்வு தேவைப்படாத சாதாரண மேல்முறையீட்டு வழக்குகளைக் கையாள வேண்டும். இதன் மூலம் வழக்குத் தொடுப்பதற்கு தில்லி வரையிலான தேவையில்லாத பயணம் தவிர்க்கப்படும்.

தொலைதூர மாநிலங்கள்

  • தில்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களுக்கு வெளியேயுள்ள தொலைதூர மாநிலங்களிலிருந்து பலரும் நியாயமான காரணங்களுக்குக்கூட, நீதியை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தை அணுகாமல் இருக்கும் அவலம் இதன் மூலம் தடுக்கப்படும்.
    தில்லி, உத்தரகண்ட், பஞ்சாப் தவிர ஏனைய உயர்நீதிமன்றங்களிலிருந்து மிக மிகக் குறைவான மேல்முறையீடுகள் உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதற்குக் காரணம், கால விரயமும், பண விரயமும் பொதுமக்களைத் தடுப்பதுதான்.
  • உச்சநீதிமன்ற மேல்முறையீடுகளில், சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் மேல்முறையீட்டு வழக்குகள் வெறும் 1.1%. தில்லியைச் சுற்றியிருக்கும் நான்கு மாநிலங்களிலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படும் மேல்முறையீடுகள் 34.1%. ஆனால், இந்திய மக்கள்தொகையில் அந்த மாநிலங்களின் பங்கு 7.2% மட்டுமே.
  • உச்சநீதிமன்றம் இரண்டு பிரிவுகளாகச் செயல்படுவதும், உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமர்வுகள் இந்தியாவின் நான்கு பகுதிகளில் அமைக்கப்படுவதும், விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், வேறு அழுத்தங்கள் எதுவும் இல்லாமல் அரசியல் சாசன வழக்குகள் நீதிபதிகளால் பரிசீலிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகவும்கூட. உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நீதித்துறை சீர்திருத்தம் இவை இரண்டும்!

நன்றி: தினமணி(29-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories