TNPSC Thervupettagam

தாமஸ் ஆல்வா எடிசன்

October 16 , 2024 150 days 126 0

தாமஸ் ஆல்வா எடிசன்

  • இன்று நாம் பயன்படுத்தும் பல பொருள்களுக்குப் பின்னால் எடிசன் ஒளிந்திருக்கிறார். அவர் கண்டுபிடிப்பின் உதவி இன்றி வாழ்வது கடினம். இத்தனைக்கும் அவர் அறிவியலும் கணிதமும் படித்தவர் அல்ல. அறிவியல் மீது இருந்த ஆர்வத்தால் திரும்பத் திரும்ப சோதனைகள் செய்தே கண்டுபிடிப்புக்ளை நிகழ்த்திய விஞ்ஞானி.
  • எதையும் கேள்வி கேட்டு, செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்குச் சிறு வயதிலேயே வந்துவிட்டது. அதனால்தான் கோழி அடைகாப்பதால்தான் குஞ்சு பொறிக்கிறதா என்பதை அறிந்துகொள்ள தானும் முட்டை மீது அமர்ந்து அடைகாத்துப் பார்த்தார்.
  • எடிசனின் கல்வியில் தாயைப் போலவை தந்தையின் பங்களிப்பும் முக்கியமானது. ஒவ்வொரு புத்தகத்தை முடிக்கும்போதும் சன்மானம் தந்தார். இதனால் பல நூல்களை அவரால் படிக்க முடிந்தது. நூலகத்தில் சேர்த்துவிட்டதால் நியூட்டன், ஃபாரடேவின் கோட்பாடுகளைப் படித்தார். குறிப்புகள் எடுத்தார். இது அவருடைய அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவியது.
  • தந்தி மூலம் ரயில் போக்குவரத்தைக் கண்காணிக்க ரயில்வே துறை முயன்றுகொண்டிருந்த காலம். தந்தி செய்திகள் புள்ளியாகவோ கோடுகளாகவோ பதிவாகும். அதைப் படித்து புரிந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வேலை செய்தார். இதை எளிதாக்க தந்திக் கருவியில் மாற்றங்கள் செய்தார். குறியீடுகளைச் சொற்களாக மாற்றி அனுப்பினார். ஒரே நேரத்தில் இரண்டு செய்திகளை ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார். தானியங்கி தந்தி ஏற்பாட்டைச் செய்து முடித்தார். இதேபோல் கண்ணில் கண்ட பிரச்னைகளுக்கெல்லாம் படிப்படியாகத் தீர்வு காணத் தொடங்கினார்.
  • தன் கண்டுபிடிப்புகளைச் சீர்படுத்த அறிவியல் அறிவை அதிகப்படுத்திக் கொண்டார். ஒரு கருவியைக் கண்டறிய திட்டமிட்டால், திட்டமிடாத பல புதிய கருவிகள் கிடைத்தன. அதில் ஒன்றுதான் ஒலி வரைவி (கிராமஃபோன்). ஒலியை ஒரு தகட்டில் பதிவு செய்யதால் சுருக்கெழுத்துபோல் தனித்த உருவில் அமையும் என்கிற கோட்பாட்டைப் படித்தார். அதைத் தன் சோதனை மூலம் உண்மை என்று கண்டுணர்ந்தார்.
  • மனிதனின் காதைக் குளிர வைத்தவர், கண்களுக்கும் விருந்தளிக்க நினைத்தார். அதன் விளைவு திரைப்படப் படபிடிப்புக் கருவி. ஓசையையும் படங்களையும் இணைத்துப் பேசும் படம் தயாரிக்க முடியும் எனச் செய்துகாட்டினார்.
  • வாயு, எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்திக்கொண்டிருந்த நியூயார்க் நகரை மின் விளக்குகளால் அலங்கரிக்க நினைத்தார். அப்போது மின்விளக்கைக் கண்டுபிடிக்க நினைத்த பலருக்கும் தோல்வி கிடைத்திருந்தது. எடிசன் சிந்தித்த எதையும் உருவாக்காமல் விடமாட்டார். தனி ஆளாக நின்று ஆயிரக்கணக்கான முறை தோற்று கடைசியாகத்தான் டங்ஸ்டன் இழையைப் பொருத்தினார்.
  • எடிசன் முயற்சியின் வெற்றியை வெளியே பலர் கொண்டாடிக்கொண்டிருக்க, அவரோ அடுத்த கண்டுபிடிப்பில் ஈடுபட்டார். நேற்றைய கண்டுபிடிப்பைப் பற்றிப் பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பாதவர். ஒரு சதவீதம் அறிவு, 99 சதவீதம் உழைப்பு என்பதே எடிசனின் தாரக மந்திரம். அவருடைய இந்தக் கூற்று மின்விளக்கைப் போல் பிரகாசமானது, பிரபலமானது.
  • மின் விளக்கைக் கண்டுபிடித்தாலும் அதை மக்களிடம் சேர்ப்பதில் சிக்கல்கள் இருந்தன. மின்சாரத்தைப் பல இடங்களுக்கு விநியோகிக்க முடியாது. அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவிற்குப் பயன்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. எல்லாம் முடிந்தாலும் வாயு, எண்ணெய் விளக்கைப் போல் மலிவானதல்ல என்று அறிவியல் உலகம் கருத்துத் தெரிவித்தது. மின் விளக்கை வணிகமயமாக்க மின் விளக்கொளி அமைப்பை ஏற்படுத்தினர். டிசி மின்சாரத்தை வைத்து மின்விளக்கை உலகெல்லாம் பரப்பினர்.
  • விளக்கு எரிய மின்சாரம் அவசியம் என்பதால் மின்சார சேமிப்புக்கலனை உருவாக்க முயற்சி செய்தார். அதனால் மின் மோட்டார் கிடைத்தது. யாரும் நெருங்க முடியாத அளவிற்கு 1300க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தார். மின்விளக்கை உருவாக்கும் முயற்சியில் டங்ஸ்டனுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான இழைகளைப் பொருத்திப் பார்த்து தோல்வியடைதிருக்கிறார் எடிசன். சேம மின்கலத்தைக் கண்டுபிடிக்கும்போது சரியான நேர்மறை மின்தகட்டைக் கண்டுபிடிக்க சில ஆயிரம் பொருள்களை ஆராய்ந்து தோல்வி அடைந்திருக்கிறார். கடைசியாகத்தான் கார்பன் தகடு சோதனை வெற்றி பெற்றது. ’உண்மையில் அவை எல்லாம் ஆயிரக்கணக்கான தோல்விகள் அல்ல. அத்தனை ஆயிரம் பொருள்கள் உதவாது என்று கண்டுபிடித்து வெற்றியடைந்திருக்கிறேன்’ என்பார் எடிசன். எடிசனை மனம் தளரவிடாமல் வழிநடத்தியது நேர்மறை சிந்தனை மட்டுமே.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories