- சமூக உறவுகள் பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வேண்டுமா, பொருளாதார நடவடிக்கைகள் சமூகக் கட்டமைப்பைத் தீர்மானிக்க வேண்டுமா என்கிற கேள்வியை முந்தைய இரண்டு பகுதிகளில் பரிசீலித்தோம். பழங்குடி/ பண்டையச் சமூகங்களில் ஈகைப் பரிவர்த்தனை எப்படி இயங்கியது என்பது குறித்த மார்செல் மாஸின் நூலையும் உற்பத்தியைச் சமூகப் பயன்பாடு தீர்மானிக்காமல், லாப நோக்கும் சந்தை விதிகளும் தீர்மானிக்கும் மாபெரும் சமூக மாற்றத்தின் பிரச்சினைகள் குறித்த கார்ல் பொலானியின் நூலையும் பார்த்தோம். அந்த வரிசையில், இன்று இயங்கிவரும் மிக முக்கியமான பொருளாதார ஆய்வாளர் தாமஸ் பிக்கெட்டி (Thomas Piketty) எனலாம்.
- உலகளாவிய மானுடச் சமூகப் பயணத்தை, அதன் பல்வேறு பரிமாணங்களை, குறிப்பாகக் கடந்த முன்னூறு ஆண்டுகளில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களை அதன் நுட்பங்களுடன் ஒரு சிறு நூலின் மூலம் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவசியம் படிக்க வேண்டிய நூல், பிக்கெட்டியின் Brief History of Equality (2021) எனலாம்.
- தாமஸ் பிக்கெட்டி கொச்சையான முதலீட்டிய எதிர்ப்பாளர் அல்ல. கடந்த ஐநூறு ஆண்டுகளில் நிகழ்ந்த உலகளாவிய மாற்றம் எத்தனையோ பரவலான, கொடூரமான வன்முறைகளை உள்ளடக்கி இருந்தாலும், சமூக விழுமியங்களில் மானுடம் முன்னேற்றத்தைச் சந்தித்திருப்பதாகவே நினைக்கிறார். முன்னெப்போதையும்விட சமத்துவம் குறித்துப் பரவலான ஏற்பு சமூகத்தில் உருவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். நடைமுறையில் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளாக மீண்டும் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கத் தொடங்கியிருந்தாலும், அதற்கான மாற்றுகளைத் தேடும், நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக நம்புகிறார். அதற்கான பரிந்துரைகளைக் கூறுகிறார்.
- அவர் கூறும் பரிந்துரைகள் நமக்கு ஓரளவு பரிச்சயமானவைதான்: ஜனநாயக சோஷலிஸம், அனைத்து மட்டங்களிலும் கூட்டாட்சி, அதிகாரப் பகிர்வு, பொருளாதாரப் பகிர்வு, சூழலியல் பாதுகாப்பு ஆகியவையே மானுடம் பின்பற்ற வேண்டியலட்சியங்கள் என்கிறார். எந்த அடிப்படையில் இவை சாத்தியம் என்று சொல்கிறார் என்பதைத்தான் நாம் பரிசீலிக்க வேண்டும்.
பிக்கெட்டியின் ஆய்வுப் பயணம்:
- கடந்த இருபது ஆண்டுகளில் பிக்கெட்டி மூன்று பெரிய, ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்குக் குறையாத, ஏராளமான தரவுகள் அடங்கிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். Top Incomes Over the Twentieth Century (2001), Capital in the Twenty-First Century (2013), Capital and Ideology (2019) ஆகியவையே அந்த மூன்று நூல்கள். மூன்றுமே நிறுவனரீதியான, பிரம்மாண்டமான உலகளாவிய ஒப்பீட்டியல் ஆய்வுகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவையே. இந்தத் தரவுகள் பல்வேறு தனி ஆய்வுகளையும் அறிக்கைகளையும் உருவாக்கியுள்ளன. அது மட்டுமின்றி, உலக ஏற்றத்தாழ்வு தரவுத்தளம் (World Inequality Database) ஒன்றையும் உருவாக்கியுள்ளன.
- இந்தத் தரவுகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவது எதனை என்றால், பெரும்பாலான நாடுகளில் சமூக மேலடுக்கில் உள்ள ஒரு சதவீதத்தினர் முதல் பத்து சதவீதத்தினரிடம், மொத்த வருவாயின் பெரும்பகுதி செல்வதையும், மொத்த சொத்துக்களில் பெரும்பகுதி சிக்கியிருப்பதையும்தான். அதாவது, ஒரு பிரமிடு வடிவக் கட்டமைப்பே இன்றும் உலகளாவிய சமூக யதார்த்தமாக உள்ளது. பிரமிடின் பரவலான கீழடுக்குகளில் உள்ள பெரும்பான்மையான உழைப்பாளிகள், அன்றாடக் கூலித் தொழிலாளிகள் பொருளாதார மேலடுக்குக்குச் செல்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். விரிவான ஆய்வுகளில் இந்த மானுடவியல் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டும் பிக்கெட்டி, பிறகு எந்த விதத்தில் எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ளச் சொல்கிறார்?
தொழிற்பிரிவுச் சமூகங்களும், உடைமைச் சமூகங்களும்:
- நவீன காலத்துக்கு முன் உலகின் பெரும்பாலான சமூகங்கள் முப்பிரிவாக, நாற்பிரிவாக இயங்கின. ஐரோப்பாவில் முப்பிரிவானது பூசகர்கள் (clergy), பிரபுக்கள் (nobility), பொதுச் சமூகத்தினர் (traders, artisans, peasants and laborers). இந்தியாவில் இது நாற்பிரிவாக பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என வழங்கப்பட்டது; ஐந்தாவதாகப் பஞ்சமர் என்ற பிரிவும் உண்டு. பதினாறாம் நூற்றாண்டில் உலக வர்த்தகம் பெருகி முதலீட்டியம் வளர்ச்சியடைந்தபோது, தொழிற்புரட்சி ஏற்பட்டபோது இந்தச் சமூக அமைப்புகள் கலைந்து உடமைச் சமூகம் தோன்றியதாக பிக்கெட்டி கூறுகிறார். உடைமைச் சமூகத்தில் அனைவரும் சேமிக்கவும், சொத்துக்களை உடைமை கொள்ளவும், முதலீடு செய்யவும் உரிமை பெற்றனர் என்பதால் பழைய தொழிற்பிரிவுகள் வழக்கொழிந்தன எனலாம்.
- ஆனால், பழைய ஏற்றத்தாழ்வுகள் புதிய வடிவில் தொடர்ந்தன. பெரும் நிலபுலங்கள் வைத்திருந்த நிலப்பிரபு, பெரிய முதலாளியாக மாறுவது சாத்தியமாக இருந்தது. இந்தியாவில் பிராமணர்கள் வக்கீல்களாக, கணக்கர்களாகப் புதிய தொழில்களில் ஈடுபட்டுப் பெரும் பொருளீட்ட முடிந்தது. அவ்வகை வாய்ப்பு பிற தொழிலாளிகளுக்குக் கிடைக்காததால் ஏற்றத்தாழ்வு புதிய வடிவில் தொடரவே செய்தது.
பெரும் சமூகப் பகிர்வின் காலம் 1914–1980:
- பிக்கெட்டி இதில் எதை நம்பிக்கையூட்டும் பகுதியாகப் பார்க்கிறார் என்றால் ஏராளமான போராட்டங்கள், கிளர்ச்சிகளின் வாயிலாக மக்களாட்சி நடைமுறைகளை வலுப்படுத்த முடிந்தது என்பதைத்தான். வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குரிமை, ஒருவருக்கு ஒரு வாக்கு என்பவை அரசின் கட்டமைப்பில் பெரும் மாறுதல்களைத் தோற்றுவித்தன.
- இதனையொட்டி, முற்போக்கு வரிவிதிப்புக் கொள்கைகள் சாத்தியமாகின. அதிக வருவாய் ஈட்டுவோருக்கு அதிக வரி விதிப்பது சாத்தியமானது. இவ்வாறாக ஈட்டப்பட்டும் உபரியில் அரசுகள் பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டன. கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை அனைத்து மக்களுக்கும் பூர்த்திசெய்ய அரசுகள் முன்வந்தன. இன்று ஒரு அரசாங்கத்திடம் பொருளாதார நிர்வாகத்தில் பல மாறுதல்களைச் செய்யக்கூடிய ஆற்றல்கள் குவிந்துள்ளன. பணத்தை அச்சடிப்பதிலிருந்து, சந்தைகளைக் கட்டுப்படுத்துவது, வரிகளை விதிப்பது எனப் பல வழிகளில் உபரி உற்பத்தியின் பலன்களை மொத்த சமூகத்துக்கும் பகிர்ந்தளிக்கும் வழிமுறைகள் உள்ளன.
- இதுவரை மக்களாட்சி உருவாக்கியுள்ள மாற்றங்களைப் பரிசீலித்தால், முற்போக்குக் கருத்தியல் என்ற அங்குசத்தின் மூலம் முதலீட்டிய யானையை வழிநடத்தி, ஏற்றத்தாழ்வினைக் குறைத்து, சமத்துவம் என்ற மானுட லட்சியத்தை நோக்கிப் பயணிக்க இயலும் என்று பிக்கெட்டி கருதுகிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 07 – 2023)