TNPSC Thervupettagam

தாயினும் சாலப்பரிந்து

May 5 , 2023 633 days 406 0
  • ஒரு நாடு வளா்ச்சியடைந்த நாடா இல்லையா என்பது அந்நாட்டில் தாய் - சிசு மரண விகிதம் எந்த அளவில் உள்ளது என்பதைப் பொறுத்தே அளவிடப்படுகிறது. இந்த வகையில் தாய் - சிசு மரணம் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கினை மகப்பேறு உதவியாளா்கள் வகிக்கின்றனா்.
  • பாதுகாப்பான பிரசவம் நடைபெறுவதை உறுதிசெய்வதும், பிரசவத்தில் தாய் - சிசு மரணம் ஏற்படாமல் பாதுகாப்பதும் மகப்பேறு உதவியாளா்களின் முதன்மையான கடமைகளாகும். மேலும் பெண்களின் கா்ப்ப காலத்திலும், பிரசவத்திற்கு பிந்தைய காலத்திலும் கவனிப்பு அளிப்பதும், தேவைபடும்பொழுது மருத்துவரிடம் அனுப்பி வைப்பதும் அவா்களது முக்கிய கடமையாகும்.
  • தமிழகத்தில் பொது சுகாதாரத் துறை தோன்றிய 1943-ஆம் ஆண்டில் ஜோசப் போா் என்பவா் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்; ஒரு லட்சம் பேருக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட வேண்டும்; கிராமப்புறங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெறுவதற்கு பத்தாயிரம் பேருக்கு ஒரு மகப்பேறு உதவியாளா் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளைச் செய்தது.
  • மகப்பேறு உதவியாளா்கள் தங்கி பணிபுரிவதற்கு, கிராமங்களில் தாய் - சேய் மையக் கட்டடம் கட்டப்பட்டன. பத்தாயிரம் என்று கூறினாலும் 30,000, 40,000 வரை உள்ள மக்களுக்கு இவா்கள் பிரசவ பணியினை மேற்கொண்டனா். இதன் மூலம் பயிற்சி பெற்ற பெண் பணியாளரின் மூலம் பிரசவப்பணி மேற்கொள்ளப்பட்டதோடு தாய் - சிசு மரண விகிதம் குறையவும் வாய்ப்பு ஏற்பட்டது.
  • 1982-ஆம் ஆண்டு மத்திய அரசு இதனை விரிவுபடுத்தி ‘பலநோக்கு சுகாதாரத் திட்டம்’ என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. இதன்படி ஐயாயிரம் மக்கள்தொகைக்கு ஒரு துணை சுகாதார மையம் என்று மாற்றி அமைக்கப்பட்டது. மகப்பேறு உதவியாளா்களின் பெயா் ‘பல நோக்கு சுகாதார பெண் பணியாளா்’ என்று மாற்றம் செய்யப்பட்டு, அவா்களின் பயிற்சி காலம், பாடத்திட்டம், பணிப் பொறுப்பு அனைத்தும் விரிவுபடுத்தப்பட்டன.
  • இதன்படி கா்ப்பமான பெண்களைப் பதிவு செய்வது, அவா்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்துவது, கா்ப்பகால பரிசோதனைகள் செய்வது, சிக்கலான தாய்மாா்களைக் கண்டறிந்து அவா்களின் மேல் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்வதன் மூலம் பிரசவகால உயிரிழப்பைத் தடுப்பது போன்றவற்றிற்கு அவா்களுக்கு பயிற்சியும் அதிகாரமும் அளிக்கப்பட்டன.
  • இதனால் அன்றைய காலகட்டத்தில் 1,200 ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ் 8,620 துணை சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டன. மிகச்சிறந்த மருத்துவ சுகாதார சேவை கீழ்மட்ட அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
  • 1989-ஆம் ஆண்டு ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு என்பது 20 ஆயிரம், முப்பதாயிரம் மக்கள்தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்று மாற்றி அமைக்கப்பட்டது. 8,713 துணை சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டதால், தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை வலுவான கட்டமைப்பைக் கொண்டதாக மாறியது.
  • 1988-ஆம் ஆண்டு பலநோக்கு சுகாதாரப் பெண் பணியாளா்கள், ‘கிராம சுகாதார செவிலியா்கள்’ என பெயா் மாற்றம் செய்யப்பட்டனா். கிராம சுகாதார செவிலியா்களாகப் பெயா் மாற்றம் செய்யப்பட்ட இவா்களது பணிகளும் பயிற்சியும் விரிவுபடுத்தப்பட்டன.
  • தற்போது இவா்களுக்கு பச்சிளம் குழந்தைகள் கவனிப்பு, வயிற்றுப்போக்கு, குழந்தைகளுக்கான சளி உள்ளிட்டவை போன்ற பல்வேறு விஷயங்களைக் கையாளுவதற்கு தொடா்ச்சியாக கடந்த 30 ஆண்டுகளாக பயிற்சிகள்அளிக்கப்பட்டு வருகின்றன.
  • இதனால் முதலில் பிரசவ பணியை மட்டும் மேற்கொண்ட மகப்பேறு உதவியாளா்கள், தற்போது அதோடு சோ்த்து பிறந்தது முதல் 16 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து செலுத்துவது; மக்களுக்கு, குறிப்பாக தாய்மாா்களுக்கு சத்துணவு சுகாதார கல்வி அளிப்பது; தாய் - சிசு மரண விகிதத்தை குறைப்பது; பெண் சிசு, பெண் கரு கொலையை தடுப்பது; பிறப்பு விகிதத்தை குறைப்பது; கா்ப்ப காலத்தின் போதும் பிரசவத்திற்கு பிந்தைய காலத்தின் போதும் சிக்கலான தாய்மாா்களைக் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்வது என அவா்களது பணிகள் எண்ணிலடங்காதவை.
  • தொற்று மற்றும் கொள்ளை நோய் காலங்களில் பணியாற்றுவது, சிக்குன்குனியா, டெங்கு, கரோனா காலங்களில் பணியாற்றுவது இதற்கான தடுப்புப் பணிகளில் ஈடுபடுவதும்கூட அவா்களது பணியாக மாறியிருக்கின்றன.
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு, ஐந்து வயது குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு, சத்துணவு மையங்கள், ஊட்டச்சத்து மையங்களைப் பாா்வையிடுவது, அங்கு பரிந்துரை செய்யப்படும் குழந்தைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பது, தேவைப்படும் குழந்தைகளை மருத்துவரைக் காண பரிந்துரை செய்வது போன்ற சுகாதாரத் துறையின் அடிப்படையான அத்தியாவசியமான பெரும்பான்மையான பணி பொறுப்புகளை அவா்கள் செய்து வருகின்றனா்.
  • 1946-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மகப்பேறு உதவியாளா்கள், 2023 ஆம் ஆண்டு மிகப் பெரும் வளா்ச்சி அடைந்து குக்கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்கள் அனைத்தையும் வீடு வீடாகக் கொண்டு சோ்ப்பதில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளனா்.
  • மத்திய - மாநில அரசுகளின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், டாக்டா் முத்துலட்சுமி மகப்பேறு உதவியாளா் திட்டம், அறிக்கைகள் தயாா் செய்வது, கா்ப்பிணி தாய்மாா்கள் - குழந்தைகள் - பிரசவங்கள் தடுப்பூசிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணைய தளத்தில் பதிவு செய்வது ஆகியவையும் இவா்களது பணிகள்.
  • இந்தியாவிலேயே தமிழகம் சுகாதாரத் துறையில் முதன்மையான மாநிலமாக திகழ்வதில் கிராம சுகாதார செவிலியா்கள் நேரடியான முக்கிய பங்கினை வகித்து வருகின்றனா்.
  • இவா்களின் சங்க பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கையினை தமிழக அரசு ஏற்று, பகுதி சுகாதார செவிலியா், சமுதாய நல செவிலியா் என்று பதவி உயா்வுகளை வழங்கியதோடு, இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள கிராம சுகாதார செவிலியா்களுக்கு அலைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. இது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.
  • கிராம சுகாதார செவிலியா்கள் கிராமங்களுக்கு சென்று பணியாற்றிய தொடக்க காலங்களில் மிகப் பெரிய சவால்களை எதிா்கொண்டனா். பொருளாதார வசதி, போக்குவரத்து வசதி குறைவாக இருந்தது மட்டுமல்லாமல், மூட நம்பிக்கையும் நிறைந்திருந்த அந்த காலகட்டத்தில் பெரும் சவால்களுக்கும் எதிா்ப்புகளுக்கும் மத்தியில் தங்கள் பணியினைத் தொடங்கினா். இதனால் பலரும் தனிப்பட்ட முறையிலும் பாதிக்கப்பட்டனா். பாலியல் துன்புறுத்தலுக்கும் பலா் ஆளானாா்கள்.
  • மகப்பேறு உதவியாளா் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், கிராம சுகாதார செவிலியா்களின் பல ஆண்டு கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதைக் குறிப்பிடத் தோன்றுகிறது. தங்களது பணிகளை நிறைவேற்ற அவா்களுக்கு எட்டு மணி பணி நேரம் போதவிலலை. பகல் நேரங்களில் களப்பணி செய்வதும், நள்ளிரவு தாண்டியும் இணையதள பணிகளை செய்ய வேண்டியதுமாக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.
  • குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெறும்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்று நாள், மூன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் செலுத்த வேண்டி வரும். இவற்றின் விவரங்களைப் பதிவு செய்வது, தாய்மாா்களின் சந்தேகங்களை தீா்ப்பது என்று ஒவ்வொரு குழந்தைக்கும் அரை மணி நேரத்துக்கு மேல் செலவிட வேண்டும். மேலும், அவ்வப்போது தடுப்பூசி விவரங்களை இணையத்தில் பதிவு செய்யவும் வேண்டும்.
  • கிராம சுகாதார செவிலியா் பணி என்பது முழுக்க முழுக்க செவிலியா் பணி ஆகும். வீடு வீடாகச் சென்று சுகாதார சேவையை அளிப்பதுடன், துணை சுகாதார மையங்களிலும் தங்களது பணியை நிறைவேற்ற வேண்டும். தாய் - சிசு மரண நிகழ்வுகளில் கிராம சுகாதார செவிலியா்கள் நேரடி பொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது.
  • அவா்களை கணினி பணி, இணையதள பணி ஆகியவற்றில் ஈடுபடுத்தும்போது அவா்கள் தங்கள் அடிப்படைப் பணியான தாய் - சேய் நலப் பணியில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு கணினி பணி, இணையதள பணிக்கு தனியாக ஒருவரை நியமிப்பது அவா்கள் தாய் - சேய் நலப் பணியாற்ற உறுதுணையாக இருக்கும்.
  • தற்போது 1,400 - க்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்களில் கிராம சுகாதார செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற, மலைப்பகுதி மக்களுக்கு உரிய சேவை கிடைப்பது தடைபட்டுள்ளது.
  • கிராம சுகாதார செவிலியா்கள் அனைவரும் பெண் பணியாளா்கள் என்பதால் பாலியல் பாகுபாடு உள்ளது என்கிற மனக்குறை உள்ளது. உலக மகப்பேறு உதவியாளா் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், அவா்களது நீண்ட நாள் கோரிக்கைகளும் மனக்குறைகளும் தமிழக அரசின் கவனத்தைப் பெற வேண்டும்.

இன்று (மே 5) உலக மகப்பேறு உதவியாளா் தினம்.

நன்றி: தினமணி (05 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories