TNPSC Thervupettagam

தாய்ப்பாலும் விற்பனைச் சரக்கா?

June 10 , 2024 217 days 281 0
  • உலக அளவில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாடு ஆண்டுதோறும் 27 லட்சம் குழந்தைகளின் இறப்போடு தொடர்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மொத்தக் குழந்தைகளின் இறப்பில் 45% ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நிகழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் வாழ்க்கையில் இரண்டு வயது வரையிலான காலம் மிக முக்கியக் காலகட்டம். அந்தப் பருவத்தில் குழந்தைக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, நோயிலிருந்தும் நாள்பட்ட நோய்க்கூறுகளின் அபாயத்திலிருந்தும் அவர்களைக் காக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதுடன் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் இது அமைகிறது. இத்தகைய அபாரமான பணியைச் செய்வதில் தாய்ப்பாலுக்கு மிகச் சிறந்த பங்கு இருக்கிறது.
  • இவ்வாறு தொடர்ச்சியாகத் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 8,20,000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என ஐ.நா. குழந்தைகள் நிதியமும் (UNICEF), உலகச் சுகாதார நிறுவனமும் (WHO) பரிந்துரைக்கின்றன. இவ்வாறு குழந்தைகளின் உயிரையும் ஆரோக்கியத்தையும் உறுதியாக வளப்படுத்தி வளர்த்தெடுக்கும் தாய்ப்பாலும் இன்றைக்கு விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டிருப்பது எப்படிப்பட்ட பேரவலம்?

பாராட்டத்தக்க மாற்றம்:

  • முன்பெல்லாம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதன் மூலம் பெண்களின் அழகு குறைந்துவிடும் என்கிற தவறான கருத்தும் நம்பிக்கையும் இன்றைக்கு முற்றிலும் மாறிவிட்டன. பொதுவெளியில் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு என்றே இட வசதிகளையும் அரசு செய்துகொடுத்திருக்கிறது. படித்த இளம் பெண்களிடையே குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்ட வேண்டும் என்கிற விழிப்புணர்வும் பரவலாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
  • முந்தைய கால கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஒரே நேரத்திலோ அல்லது ஒரு சில மாத இடைவெளியிலோ இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பிறந்ததுண்டு. ஒரு குழந்தை அழுதால் - பெற்ற தாய் மட்டுமல்லாமல், எந்தத் தாய் வேண்டுமானாலும் ஓடிச்சென்று அள்ளி அணைத்துப் பாலூட்டிய சம்பவங்களும் இயல்பாக நடந்திருக்கின்றன. இன்றைக்கும் அதேபோல இளம் தாய்மார்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பிற குழந்தைகளுக்கும் பாலூட்ட வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையை வளர்த்துக்கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டியதோர் நல்ல பண்பு.

தாய்ப்பால் வங்கிகள் உருவாக்கம்:

  • பிற குழந்தைகளுக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க முன்வர வேண்டும் என்கிற விழிப்புணர்வு 1909ஆம் ஆண்டிலேயே பரவலாக ஏற்படுத்தப்பட்டது. ரத்த வங்கியைப் போல தாய்ப்பால் வங்கியும் உருவாக்கப்பட வேண்டும் என்கிற பேச்சுகள் எழுந்தாலும், அச்சிந்தனை நடைமுறைக்கு வர நீண்ட காலம் பிடித்தது. 1989இல் அன்றைய பம்பாயில் தாய்ப்பால் வங்கி உருவானது. பின்னர், படிப்படியாக இந்தியா முழுவதும் 70க்கும் மேற்பட்ட தாய்ப்பால் வங்கிகள் உருவாயின. இன்றைக்குத் தமிழ்நாட்டில் மட்டுமே 45க்கும் மேற்பட்ட தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. 35 அரசு மருத்துவக் கல்லூரிகள், தாய் சேய் நல மருத்துவமனை, அரசு குழந்தைகள் மருத்துவமனை ஆகிய இடங்களில் தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில், தாய்ப்பால் வங்கி 2014இல் ஆரம்பிக்கப்பட்டது. 2015இல் இது ஒரு மாதிரி (Model) தாய்ப்பால் வங்கியாகவும் மாறியது.
  • முன்புபோல் கூட்டுக் குடும்பங்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், மருத்துவமனைகளில் இருக்கும் கைவிடப்பட்ட சிசு தொடங்கி, குறை மாதத்தில் பிறந்த குழந்தை, நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாயிடமிருந்து பிரித்து வைக்கப்பட்ட குழந்தை, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் பாலூட்ட முடியாத நிலையிலுள்ள தாயின் குழந்தை, ஆரோக்கியமாக இருந்தும் போதிய அளவு பால் சுரப்பில்லாத தாயின் குழந்தை எனப் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட, முகமறியாத, யார் யாரோ பெற்ற குழந்தைகளுக்கும் இன்றைக்குப் பெண்கள் மறைமுகமாகப் பாலூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
  • குறைமாதக் குழந்தைகள் பிறப்பு / இறப்பு விகிதத்தில் உலகிலேயே இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பது மிகவும் கவலைக்குரிய ஒன்று. குறைமாதக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அத்தியாவசியத் தேவை என்பதால், அக்குழந்தைகளுக்காகவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானமாக மட்டுமே பெறப்படுகிறது. யாருக்கும் இதற்காகப் பணம் தரப்படுவதில்லை. தானம் அளிப்பவரும் பெற்றுக்கொள்பவரும் அதற்கான படிவத்தில் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளையும் எவ்வாறு பாலைச் சேமித்து அளிப்பது என்பதற்கான ஆலோசனையையும் மருத்துவரும் செவிலியர்களும் அளிக்கிறார்கள். இறைக்கிற ஊற்று சுரக்கும் என்பதற்கேற்பத் தானம் அளிப்பவர்களுக்குப் பால் சுரப்புத் தடையின்றிக் கிடைக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இது பரவலாகச் சத்தமில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படை மனிதநேயமுள்ள மனங்கள் மட்டுமே இருந்தால் போதும். இன்றைக்கு நிறையப் பெண்களிடம் அத்தகைய பரந்த மனப்பான்மை இருக்கிறது என்பதற்குச் சான்று தங்களிடம் கூடுதலாகச் சுரக்கும் தாய்ப்பாலைத் தாய்ப்பால் வங்கிக்குத் தானமாக அளிக்கிறார்கள் என்பதே.

தானம் அளிப்பவர்களும் தர முடியாதவர்களும்:

  • ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மூன்று மாத காலத்தில் 50 லிட்டர் வரை தாய்ப்பால் தானம் அளித்துள்ளார். தங்கத் திரவியம், அமிர்தம் என்ற இரு தன்னார்வ அமைப்புகள் தாய்ப்பாலை ஆரோக்கியமான கிராமப்புறத் தாய்மார்களிடம் இருந்து சேகரித்து அளிக்கின்றன. பாலைத் தானம் அளிப்பதன் மூலம் பிற குழந்தைகளின் உயிரையும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இளம் தாய்மார்கள். இதன் மூலம் முதல் ஆறு மாதங்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.
  • எச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளானவர்கள், புற்றுநோயாளிகள், தானம் அல்லாமல் வியாபார நோக்கில் தருபவர்களிடமிருந்தும் பால் தானம் பெறப்படுவதில்லை. யார் தானம் அளித்தாலும் (Screening) சோதனைகளுக்குப் பிறகே அந்தப் பால் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • இவ்வளவு நல்ல விஷயங்களுக்கு மத்தியில்தான் சில புல்லுருவிகள் தாய்ப்பாலில் கலப்படம் செய்து அதிக விலை வைத்து விற்பனைப் பண்டமாக மாற்றிக் காசு பார்க்கும் அவலம் அம்பலமாகியிருக்கிறது. ஏற்கெனவே, கர்நாடக மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள தாய்ப்பால் விற்பனை, தமிழ்நாட்டிலும் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத் தலைமுறையின் உடல்நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories