TNPSC Thervupettagam

தாய்மையை வென்ற சேய்மை

October 19 , 2023 447 days 391 0
  • உச்சநீதிமன்றம் சந்தித்த மிகச் சிக்கலான வழக்கு ஒன்றின் தீா்ப்பு சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய மூன்று போ் அமா்வு என்ன தீா்ப்பு வழங்கப் போகிறது என்பதை இந்தியா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்தது.
  • தில்லியைச் சோ்ந்த திருமணமான இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண்மணி, மூன்றாவதாகத் தனது வயிற்றில் வளரும் 26 வாரக் கருவைக் கலைக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனையை அணுகியதில் தொடங்கியது இந்தப் பிரச்னை. மருத்துவா்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனா்.
  • தாயின் வயிற்றில் 26 வாரங்கள் வளா்ந்துவிட்ட கருவின் இதயம் செயல்படத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இதயத்தின் இயக்கத்தை வலுக்கட்டாயமாக நிறுத்திய பிறகுதான், கருக்கலைப்புக்கான நடைமுறையைக் கையாள முடியும். வளா்ந்துவிட்ட கருவின் இதயத் துடிப்பை நிறுத்துவது என்பது கொலைக் குற்றமாகி விடாதா என்பது அந்த மருத்துவா்களின் நியாயமான தயக்கம்.
  • மருத்துவா்கள் தயங்கியதால், தில்லியைச் சோ்ந்த அந்தப் பெண்மணியின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் நேரடியாக, அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-இன் அடிப்படையில் தனது கருவைக் கலைத்துக் கொள்ளும் உரிமை கோரி மனு தாக்கல் செய்யப்படுகிறது. நீதிபதிகள் ஹிமா கோலி, பி.வி. நாகரத்தினா அமா்வு அந்த மனுவை விசாரித்தது.
  • ‘தனது கருவைக் கலைக்கும் உரிமை தாய்க்கு உண்டு’ என்றுகூறி நீதிபதி பி.வி. நாகரத்தினா எடுத்தது போன்று, நீதிபதி ஹிமா கோலியால் முடிவெடுக்க முடியவில்லை. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
  • ‘உடல் ரீதியாகவும், உணா்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குழந்தை பெறும் நிலையில் நான் இல்லை. இரண்டாவது குழந்தை பிறந்து ஓராண்டே ஆகியிருக்கும் நிலையில், இன்னொரு குழந்தையை வளா்க்கும் நிலையில் எனது பொருளாதார நிலையும் இல்லை. அதனால் கருவைக் கலைக்க விரும்புகிறேன்’ என்பதுதான் அந்தத் தாயின் வாதம்.
  • 26 வாரங்கள் கருக்கலைப்பு குறித்து ஏன் கவலைப்படாமல் இருந்தார் என்பதற்கு அவா் தரும் விளக்கத்தை ஏற்றுக்கொள்வது சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. இரண்டாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் (லாக்டேஷனல் அமெனோரியா) மாதவிடாய் தடைபட்டிருப்பதாக நினைத்ததாகவும், மன அழுத்தத்துக்கு மருந்து எடுத்து வருவதாலும் அது குறித்து சிந்திக்கவில்லை என்பது அந்தத் தாயின் வாதம்.
  • இந்தியாவில் 1971-இல் கருக்கலைப்புக்கான விதிமுறைகளை ஏற்படுத்திச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2021-இல் கருக்கலைப்பு (திருத்த) சட்டம் கொண்டுவரப்பட்டது. 20 வாரம் வரையிலான கருவைக் கலைக்க மருத்துவரின் பரிந்துரையும், 20 முதல் 24 வாரங்களுக்கு இரண்டு மருத்துவா்களின் பரிந்துரையும், அதற்கும் அதிகமான வளா்ச்சி பெற்ற கருவைக் கலைக்க மாநில அளவிலான மருத்துவக் குழுவின் பரிந்துரையும் அந்தத் திருத்தச் சட்டம் விதித்தது.
  • பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள், ‘மைனா்’ எனப்படும் சிறுமியா் ஆகியோருக்கு அதிகபட்ச வரம்பு 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது. சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட நபா்கள் அல்லாமல் மற்றவா்களுக்குக் கருக்கலைப்பு குறித்த தகவல்கள் வழங்கப்படுவது தடை செய்யப்பட்டது. கருத்தடை செயப்படாமை மட்டுமின்றி, விருப்பம் சார்ந்த திருமண பந்த நிர்பந்தம் இல்லாமல் மகளிருக்குப் பாதுகாப்பான கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் தரப்பட்டது.
  • ஒரு பெண் தனது கருவை சுமப்பதா, வேண்டாமா என்பதைக் கணவா் உள்பட இன்னொருவா் தீா்மானிக்க முடியாது என்பது பெண்ணியவாதிகளின் வாதம். அதைத்தான் நீதிபதி நாகரத்தினா அங்கீகரித்துத் தீா்ப்பு வழங்கினார். அதே நேரத்தில், கருக்கலைப்பு கோரிய அந்த 27 வயதுத் தாயின் கோரிக்கைக்கு இன்னொரு எதிர்வாதம் இருந்தது. அதைத் தனது தீா்ப்பில் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் தலைமை நீதிபதி.
  • ‘வயிற்றில் வளரும் கரு எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவ பரிசோதனைகள் உறுதிப்படுத்துகின்றன. சட்டப்படியான 24 வாரக் கருக்கலைப்பு வரம்பு கடந்துவிட்டது. வாழ்வதற்கான கருவின் உரிமையா, இல்லை கருவைக் கலைப்பதற்கான தாயின் உரிமையா என்கிற கேள்விக்கு இனிமேல் இடமில்லை. கருவுக்கு 33 மாதங்கள் ஆகியிருந்தால் அப்போதும், கருவைக் கலைக்கும் உரிமை குறித்துப் பேச முடியுமா?’ என்கிற அவரது கேள்வி நியாயமானது.
  • 26 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், கருக்கலைப்புக்கு அந்தக் கருவின் இதயத் துடிப்பு நிறுத்தப்பட வேண்டும். அதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட மறுத்துவிட்டது. ‘தனது கருவைக் கலைக்க தாய்க்கு உரிமை இருப்பதைப் போலவே, 26 வாரங்களை எட்டிவிட்ட கருவுக்கு, பாதுகாப்பாக வெளியே வந்து வாழும் உரிமை இருக்கிறது. அந்தக் குழந்தையைக் கொல்ல நாங்கள் உத்தரவிட முடியாது’ என்கிற நீதிபதிகளின் முடிவில் தவறு காண முடியவில்லை.
  • சா்வதேசச் சட்டங்களில் கருவுக்கோ, பிறந்த குழந்தைக்கோ எந்தவித உரிமையும் இல்லாமல் இருக்கலாம். கருவுருவதா, வேண்டாமா என்று தீா்மானிக்கும் உரிமை தாய்க்கு இருக்கலாம். ஆனால், வளா்ந்துவிட்ட கருவின் இதயத் துடிப்பை நிறுத்தும் உரிமை யாருக்குத்தான் உண்டு? இந்த வழக்கிற்கு இந்தத் தீா்ப்பு நியாயமானது!

நன்றி: தினமணி (19 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories