TNPSC Thervupettagam

தாய்மொழி போற்றுதும்...

February 20 , 2021 1375 days 1324 0
  • உலகில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் அம்மொழியைப் பேசுவோருக்குத் தாய்மொழியாகின்றது. ஆனால் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக விளங்குவது தன்னேரிலாத தமிழ்மொழி. இந்தச் சிறப்பினாலே தமிழைத் "தந்தைமொழி' என்று கூறுவாரும் உளர்.  
  • எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரையும் தன்னுயிராகக் கருதும் வித்தகரைப் போலவே எல்லா மொழிகளையும் இணையாய்ப் போற்றி ஏற்கும் மொழி.  எது உலகின் முதன்மைமொழி என்று போட்டியிட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் தாய் தனது பிள்ளைகளைத் தழுவிக்கொள்ளுகிற பாங்கினைப் போல மூத்தமொழியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தமிழ்மொழி. 
  • மலையின் இடையில் தோன்றி, ஞானிகள் தொழுமாறு இந்தப் பரந்த உலகத்தின் புற இருளை விலக்குகிற கதிரவனைப் போல- அகஇருளை நீக்குகிற பெருமையுடையது தமிழ்மொழி என்கிறது தண்டியலங்காரம். தமிழ்மொழியின் இயல்பினையும் அழகினையும் ஞானக் கருவூலங்களையும் கருத்தில்கொண்டு அதனைப் பக்திமொழி என்று போற்றியவர் தனிநாயகம் அடிகள். காப்பியங்களைத் தமிழ்த்தாய் மேனியெங்கும் ஒளிவீசும்படி அணிகலன்களாய்ச் சூட்டித் திருக்குறளை நீதியொளிர் செங்கோலாய் அவள் கரத்தில் தந்து அழகுகண்டவர் சுத்தானந்த பாரதியார். 
  • பூமித்தாயின் திருமுகமெனப் பரதகண்டத்தைச் சுட்டி, அவளுடைய பிறைபோன்ற நெற்றியில் தரித்திருக்கிற திலகம் என்று தமிழ்மொழியை மணத்தோடும் குணத்தோடும் போற்றிப் பாடுகிறார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை. அந்த வாழ்த்தைத்தான் தமிழ்தாய்க்கு தினந்தோறும் பாடி வணக்கம் செலுத்துகிறோம்.
  • ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக யுனெஸ்கோ 2000-ஆவது ஆண்டிலிருந்து தொடங்கித் தொடர்ந்து கொண்டாடி வருகிறது. இதற்கு ஒரு காரணமும் உண்டு. 1952-ஆம் ஆண்டில் வங்க மொழியை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டி உயிரிழந்த நான்கு மாணவர்களின் உயிர்த்தியாகத்தைப் போற்றி ஐ.நா. இவ்வாறு தாய்மொழி தினத்தைக் கொண்டாடி வருகிறது. 
  • 2008-ஆம் ஆண்டில் ஜனவரி 21-ஆம் நாள் அமெரிக்காவின் அலெக்ஸா மாகாணத்தைச் சேர்ந்த மரியே ஸ்மித் ஜோனெஸ் என்னும் 89 வயது முதியவர் ஒருவர் இறந்து போனார். அவரோடு "ஏயக்' என்னும் ஒரு பழங்குடி இனமொழியும் அழிந்துபோயிற்று. அந்த மொழியைப் பேசிய கடைசி மனிதர் அவர் மட்டும்தான். பேசத்தெரிந்த மனிதர்கள் இறப்பதனால் மட்டுமல்ல, பேசத் தெரியாத மனிதர்கள் இருப்பதனாலும் தாய்மொழி அழிந்து போகிறது. இந்த வரிசையில் எண்ணற்ற மொழிகள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. தமிழுக்கும் அந்தக் கதி நேர்ந்து விடுமோ என்னும் அச்சம் பற்றாமலில்லை. 
  • இன்னொரு மொழியின் துணையில்லாமல் தமிழகத்தில் பிழைக்க வழியில்லை என்னும் நிர்க்கதி நேர்ந்திருக்கிறது. காலந்தோறும் பன்மொழிக் கலப்புகளினூடே வளர்ந்து தன்னிலை வழாது தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ்மொழியை எந்த மொழியின் ஆதிக்கமும் அழித்து விடாது என்பது உண்மை. ஆயினும் எந்த மொழியையும் அழிக்கத் துணிகிற மனிதர்கள் தமிழகத்தில் இருப்பதனால் தம் சொந்த மொழியையே அழித்து விடுவார்களோ என்ற அச்சம் எழுகிறது. 
  • "இலக்கியச் செல்வங்களை நிறையக் கொண்டிருக்கிற தமிழர்களாகிய நீங்கள் ஏன் இன்று வறியர்போலக் கிடக்கிறீர்கள்?' என்று ஈராசு அடிகளார்  கேட்டார். காரணம் இத்தனை இலக்கியச் செழுமை கொண்ட தமிழ் பிறந்த தமிழகத்தில்தான் பேச்சு ஒன்றாகவும், எழுத்து ஒன்றாகவும், வாழ்க்கை முற்றிலும் வேறாகவும் விளங்குகிறது. 
  • எந்தத் துறையை விடவும் கல்வித்துறையில் தமிழ்மொழி படும்பாடு இன்னும் தீரவில்லை. தமிழகத்தின் பல கல்விக்கூடங்களில் தமிழ் மறுக்கப்படுகிறது. அடிமைப்பட்டிருந்த பாரததேசத்தின் விடுதலைக்கு பாரதியார் உறுதியாக நம்பியது தேசியக்கல்வி முறையைத்தான்.
  • பாரதியாரின் காலத்தில் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த "மாடன் ரெவ்யூ' என்னும் மாதப் பத்திரிகையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர், "எனது மாணாக்கர்களிலே பெரும்பாலோர் இங்கிலீஷ் இலக்கணப் பிழைகளும் வழக்குப் பிழைகளும் நிறையச் செய்தபோதிலும் மொத்தத்திலே தமிழைக் காட்டிலும் இங்கிலீஷை நன்றாக எழுதுகிறார்கள். சரித்திர விஷயங்களை வியவஹரிக்கும்போது எனக்கும் இங்கிலீஷ்தான் தமிழைக் காட்டிலும் நன்றாகச் சொல்ல வருகிறது' என்று எழுதியிருந்தார்.
  • இதனைக் கண்டு வருத்தமுற்ற பாரதியார், "சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாதவர்கள் சாஸ்திர பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை! புதுமை!  தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தான் வகுப்புகளைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மீது சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப்புண்டாக்குகிறது' என்று சொன்னவர் தமிழ் மொழியின் மாண்பை விரிவாக விவரித்து, தீர்க்கதரிசனமாகப் பதிலளித்திருக்கிறார்.
  • உயர்மொழி என்றும், தனிமொழி என்றும், செம்மொழி என்றும் வெறும் காகிதங்களில் சான்று வாங்குவது மழலைகள் பெறும் மதிப்பெண்களுக்கு ஒப்பாகும். உண்மையாகவே செம்மொழியானால் தமிழர்தம் வாழ்வல்லவோ செம்மையானதாக வேண்டும்! 
  • ஐக்கிய நாடுகள் சபையில் "யாதும் ஊரே' ஒலிக்கிறது. நயகராவில் "வணக்கம்' வரவேற்கிறது. அமெரிக்க மாணவன் தொல்காப்பியம் படிக்கப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை. இத்தாலி மாணவி புறநானூறு படிக்கவும் கூடும். அப்போது நாம் அரிச்சுவடிகூடத் தெரியாத தமிழர்களாக இருக்கப் போகிறோமா? உலகத் தாய்மொழியின் குழந்தைகளே இந்த தினத்திலேனும் சிந்தியுங்கள்.
  • நாளை (பிப்ரவரி 21) உலகத் தாய்மொழி நாள்

நன்றி: தினமணி (20 – 02 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories