TNPSC Thervupettagam

தாவரங்களுக்குப் பச்சை நிறம் பிடிக்காதா

November 29 , 2023 386 days 383 0
  • பூமியில் 3.90 லட்சம் தாவர வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் பச்சை வண்ணத்திலேயே இருக்கின்றன. தாவரங்கள் சூரிய ஒளியை உறிஞ்சிக்கொண்டு, நீரையும் கார்பன் டை ஆக்சைடையும் பயன்படுத்தி உணவைத் தயாரிக்கின்றன. இதற்குப் பச்சையம் எனும் நிறமி உதவுகிறது. பச்சையம் சூரிய ஆற்றலை அதிகம் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. மேலும், சூரிய ஆற்றலை வேதியாற்றலாக மாற்றுகிறது. அதனாலேயே இது வினைமையம் என்றும் அறியப்படுகிறது. இந்த நிறமிதான் தாவரங்கள் பச்சை நிறத்தைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கிறது.
  • சூரிய ஒளி ஏழு வண்ணங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஒளி ஒரு பொருளின் மீது விழும்போது, அந்தப் பொருள் மற்ற வண்ணங்களை உறிஞ்சிக்கொண்டு ஒரே ஓர் ஒளியை மட்டும் வெளியே தெறிக்கவிடுகிறது. அதுவே அந்தப் பொருளின் நிறமாக நமக்குக் காட்சித் தருகிறது. இதேதான் தாவரத்திலும் நடக்கிறது. தாவரங்களில் உள்ள பச்சையம் மற்ற வண்ண சூரிய ஒளியை உறிஞ்சிக்கொண்டு பச்சை வண்ணத்தை மட்டும் முழுமையாக உறிஞ்சாமல் பிரதிபலிக்கிறது. அதனால், தாவரங்கள் பச்சையாக நமக்குத் தெரிகின்றன.
  • தாவரங்கள் உணவைத் தயாரிப்பதற்குச் சூரிய ஒளிதான் மூலப்பொருளாக இருக்கிறது. அப்படி என்றால் பச்சையம் எல்லா ஒளியையும் அல்லவா உறிஞ்சிக்கொள்ள வேண்டும்? அப்படி உறிஞ்சிக்கொண்டால் எந்த நிறமும் வெளியே வராமல், தாவரங்கள் கறுப்பாக அல்லவா காட்சியளிக்க வேண்டும்? ஆனால், ஏன் பச்சையம் பச்சை வண்ணத்தை மட்டும் வெளியேற்றுகிறது? ஒரு பொருள் ஒளியின் ஒரு வண்ணத்தை மட்டும் வெளியிடுகிறது என்றால் அந்த அலைநீளமும், அதில் உள்ள ஆற்றலும் அந்தப் பொருளுக்குத் தேவை இல்லைதானே? சூரிய ஒளியை வைத்து உயிர் வாழும் தாவரங்கள் ஏன் பச்சையை மட்டும் ஒதுக்க வேண்டும்?
  • இத்தனைக்கும் சூரியக் கதிர்வீச்சின் பெரும்பகுதி ஆற்றல் நிறமாலையின் (Spectrum) பச்சைப் பகுதியில் இருந்துதான் வெளியாகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், தாவரங்களோ அதற்கு நேர் எதிராகப் பச்சையை மட்டும் ஒதுக்குகின்றன. இது ஏன் என்பதற்குப் பின்னால்தான் பரிணாம வளர்ச்சியின் அதிசயம் ஒளிந்திருக்கிறது. இலைகளில் ஒளிச்சேர்க்கை நடைபெறும்போது பச்சையம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள புரதங்கள் ஏற்பியைப்போல (Antenna) செயல்பட்டு, ஒளியை உள்வாங்குகின்றன. பிறகு அதில் உள்ள ஆற்றலை வினைமையத்திற்கு அனுப்பிவிடுகின்றன. வினைமையத்தில்தான் ஒளியாற்றலை வேதியாற்றலாக மாற்றும் செயல்பாடு நடைபெறுகிறது. அதாவது ஒளியாற்றல் உணவாக மாற்றப்படுகிறது.
  • ஆனால், மேற்சொன்ன ஏற்பிகள் அதிகம் உணர்திறன் வாய்ந்தவையாக இருக்கும். இதனால் ஒளி அதிகமாகும்போதோ குறையும்போதோ எளிதில் பாதிப்படையும். இதனால் அதீத ஆற்றலைப் பெறும்போது அது தாவரத்தின் திசுக்களைப் பாதித்துவிடும். நாம் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் நின்றால் அது நமது சருமத்தைப் பாதிக்கிறது அல்லவா, அதுபோல. பச்சை என்பது அதீத ஆற்றல் வெளிப்படும் இடம் அல்லவா? இதனை அதிக அளவில் உட்கொள்ளும்போது அது தாவரங்களின் திசுக்களைப் பாதித்துவிடும் ஆபத்து இருக்கிறது. அதனால் பச்சை வண்ண அலைவரிசையைத் தாவரங்கள் வேண்டுமென்றே தவிர்க்கின்றன.
  • அதேபோல சூரிய ஒளியில் இருந்து குறைந்த ஆற்றல் கிடைத்தாலும் தாவரங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. போதுமான அளவு உணவு இல்லை என்றால் எந்த உயிரினமாக இருந்தாலும் வலுவிழந்துவிடும். ஆனால், சூரிய ஒளி நிலையாகத் தாவரங்களில் விழாது. மேகங்கள் சூழும்போதும் பிற தாவரங்கள் மறைக்கும்போதும் தாவரங்களில் விழும் ஒளியின் அளவில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். இதுவும் தாவரங்களைப் பாதிக்கும் தன்மைகொண்டது. ஒளியாற்றல் நிலையாகப் பெறும்போதுதான் தொடர்ச்சியாக உணவைத் தயாரிக்க முடியும். குறைந்த அளவிலான ஒளியாற்றல் வினைமையத்திற்குச் சென்றால் போதுமான உணவு உற்பத்தியாகாமல் போகலாம்.
  • இதனைத் தவிர்ப்பதற்காகத் தாவரங்கள் அலைவரிசையைத் தேர்வு செய்து உறிஞ்சிக்கொள்கின்றன. குறிப்பாக நிலையான ஒளியாற்றலைப் பெறுவதற்காகச் சூரிய ஒளி குறையும்போது அதீத ஆற்றல்கொண்ட ஊதா, நீலம் அலைவரிசையையும், சூரிய ஒளி அதிகரிக்கும்போது குறைந்த ஆற்றல்கொண்ட மஞ்சள், சிவப்பு ஆகிய அலைவரிசையையும் எடுத்துக்கொள்கின்றன. இதன் காரணமாகவும் பச்சை வண்ண ஆற்றல் அதற்குத் தேவைப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் மின்சாரத்தில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் இருக்கும்போது அது மின்பொருள்களைப் பாதித்துவிடுகிறது. அதே மாதிரி பச்சை அலைவரிசையை உட்கொள்ளும்போது அதில் இடர்பாடுகள் இருந்தால் தாவரங்களைப் பாதித்துவிடும். இதனாலும் பச்சையை ஒதுக்கின்றன.
  • இவ்வாறு தாவரம் வேண்டாம் என்று ஒதுக்கிய நிறம்தான் பச்சை நிறமாக நமக்குக் காட்சியளிக்கிறது. தாவரங்கள் மட்டுமல்ல, ஒளிச்சேர்க்கையை நம்பியிருக்கும் பர்பிள் பாக்டீரியா, ஷல்பர் பாக்டீரியாக்கள்கூட இதேபோலத் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத அலைவரிசையையே ஒளியிலிருந்து தேர்வு செய்துகொள்கின்றன. பிறகு ஏன் ஒருசில தாவரங்கள் மட்டும் பச்சை வண்ணத்தில் இல்லை? அவை பச்சையத்திற்குப் பதிலாக அந்தசயனின்ஸ் (Anthocynanins) போன்ற வேறு நிறமிகளைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.
  • இந்த நிறமிகள் நீல வண்ண அலைவரிசையில் ஒளியை எடுத்துக்கொள்வதால், அவை சிவப்பு இலைகளைக் கொண்டிருக்கின்றன. பரிணாம வளர்ச்சி ஓர் உயிர் அமைப்பை (Biological System) உருவாக்கும்போது, அதனைச் செயல்திறன்மிக்கதாக உருவாக்குவதில்லை. மாறாக நிலையாக வைத்திருக்கும் வகையிலேயே உருவாக்குகிறது. ஆச்சரியமூட்டும் வகையில் தாவரங்களில் உணவு சேகரிப்பு எனும் செயல்பாட்டில் உள்ள சிக்கலை, சில இயற்பியல் மாற்றங்களைச் செய்ததன் மூலம் தீர்த்துள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories