TNPSC Thervupettagam

திசை திருப்பிய ஊர்கள்

September 20 , 2024 117 days 199 0

திசை திருப்பிய ஊர்கள்

ஹரப்பா:

  • சிந்துவெளி நாகரிகத்தின் ராவி ஆற்றங்கரையில் கண்டறியப்பட்ட முதல் நகரம் இது. அதனால், இந்த நாகரிகத்தையே ஹரப்பா நாகரிகம் என வரலாற்று ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அதேநேரம், பரவலான பகுதியைக் கொண்டிருப்பதாலும், இந்த நாகரிகத்தின் பெருநதியாகச் சிந்துநதி இருந்ததாலும், சிந்துவெளி நாகரிகம் எனப்பட்டது. வெண்கலக் காலத்தைச் சேர்ந்த இந்த ஊரில் பெரிய நெற்களஞ்சியம், மக்கள் கூடும் அரங்கம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றின் திசையையே திருப்பிய ஊர் இது.

மொகஞ்சதாரோ:

  • சிந்துவெளி நாகரிகத்தில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய ஊர். ‘இறந்தவர்களின் புதைமேடு’ என்பதே இந்தப் பெயருக்கு அர்த்தம். பெரிய கிணறுகள், தாய் தெய்வச் சிற்பங்கள் இந்த ஊரில் கண்டறியப்பட்டுள்ளன. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தில், நம் கிராமங்களில் இருப்பதுபோல் மேடான பகுதிக் குடியிருப்பு, தாழ்வான பகுதிக் குடியிருப்புகள் இருந்துள்ளன. நாட்டு விடுதலைக்குப்பின் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டன.

ராகிகரி:

  • ஹரியாணாவில் இருக்கும் இந்தத் தொல்லியல் தலத்தின் இடுகாட்டில் எலும்புக்கூடுகள், பானைகள், நகைகள் போன்றவை கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த 4,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டில் நடத்தப்பட்ட மரபணு ஆய்வில், அந்தப் பெண்ணின் மரபணுவில் பண்டைய ஈரானியர்கள், தென்கிழக்கு ஆசிய வேட்டையாடிகளின் மரபணுத் தொடர்ச்சியையே பார்க்க முடிந்தது. எனவே, ஆதி இந்தியர்களிடம் ஆரியர்கள் போன்ற வேறு இனத்தைச் சேர்ந்தவர்களின் மரபணுக்கள் இல்லை.

தோலாவிரா:

  • குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இருக்கும் இந்த ஊரின் மூன்றில் இரண்டு பகுதி கற்கோட்டையால் பாதுகாக்கப்பட்டுள்ளது. சிற்றணைகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றைக் கொண்ட நீர்சேகரிப்பு அமைப்புகள், தற்போது கீழே விழுந்துவிட்ட ஒரு திசைகாட்டி போன்ற முக்கியமான தொல்லியல் எச்சங்களைக் கொண்டது இந்த ஊர்.

லோத்தல்:

  • குஜராத்தில் இருக்கும் இந்தத் தொல்லியல் தலத்தில் மிகப் பெரிய, செயற்கையாக உருவாக்கப்பட்ட படகு, கப்பல் நிறுத்துமிடம் ஆகியவை இருந்திருக்கின்றன. சிந்துவெளித் தலங்களில் இப்படி ஒரு பகுதி கண்டறியப்பட்டது அதுவே முதல் முறை. அரபிக் கடலில் பயணித்த கப்பல்கள், கம்பாத் குடா வரை வந்து, தற்போது வறண்டுவிட்ட சபர்மதி ஆற்றின் துணையாறு வழியே லோத்தலை வந்தடைந்துள்ளன. சிந்துவெளியில் ஏற்றுமதி முக்கிய இடம்பிடித்திருந்ததற்கு இந்த ஊர் ஒரு சான்று.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories