- சுற்றுச்சூழல் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மையில் அரசு மேலதிகக் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
- வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருள்களில் தொடங்கி துப்புரவுக் கழிவு, மின்னணுக் கழிவு, விவசாயக் கழிவு உள்ளிட்டவை திடக்கழிவின் வகைகளில் அடங்கும். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 ஊராட்சிகள் ஆகியவற்றிலிருந்து தினமும் 14,585 மெட்ரிக் டன் அளவுக்குத் திடக்கழிவு வெளியேற்றப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கழிவு சென்னை மாநகராட்சியிலிருந்து மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மறுசுழற்சி செய்யப்பட்டவை போக மீதமுள்ள கழிவு நிலத்தில் கொட்டப்படுகிறது.
- தமிழ்நாட்டில் 210 இடங்களில் குப்பைக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பைக் கிடங்குகளுக்குத் திடக்கழிவு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, அவை வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மறுசுழற்சி செய்யப்படும் அல்லது அப்புறப்படுத்தப்படும். சிக்கல் தொடங்குவது இந்த இடத்தில்தான்.
- வீடு வீடாகச் சென்று குப்பையைச் சேகரிப்போர் போதிய எண்ணிக்கையில் இல்லாததால், பல பகுதிகளில் குப்பை வண்டிகள் தினமும் வருவதில்லை. குப்பையைத் தரம் பிரிக்கவும் போதுமான பணியாளர் இல்லாததால் நகராட்சிப் பகுதியிலேயே குப்பையைச் சேர்த்துவைக்கிறார்கள். அங்கிருந்து குப்பைக் கிடங்குக்குப் பழைய குப்பை சென்ற பிறகே வீடுகளிலிருந்து குப்பையைச் சேகரிக்கிறார்கள்.
- இப்படிக் குடியிருப்புப் பகுதியில் நாள்கணக்காகக் குப்பையைச் சேர்த்துவைப்பது கொசுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கிறது. நாள்பட்ட குப்பையைக் கையாள்கிற ஊழியர்களின் உடல்நலனும் கெடுகிறது. வெயில் காலத்திலாவது ஓரளவுக்கு நிலைமையைச் சமாளிக்கிறார்கள்.
- மழைக் காலத்தில் சாக்கடை அடைப்பு உள்ளிட்ட பிற பணிகளுக்கு நகராட்சிப் பணியாளர்கள் சென்றுவிடுவதால், குப்பை அகற்றுவதில் பெருமளவில் தேக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. குப்பையும் கழிவும் மழைநீருடன் கலந்து நிலத்திலும் அருகிலுள்ள நீர்நிலைகளிலும் கலக்கின்றன.
- ஞெகிழிப் பைகளுக்கு மாற்றாகத் துணிப்பையைப் பயன்படுத்தும் மீண்டும் ‘மஞ்சப் பை’ திட்டத்தை முதலமைச்சர் அறிவித்திருந்தாலும், மறுபக்கம் மலைமலையாக ஞெகிழிக் குப்பை குவிந்துகொண்டுதான் இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஞெகிழிக் கழிவையும் மின்னணுக் கழிவையும் கையாள்வது குறித்துப் பணியாளர்களுக்குப் போதுமான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்துவதில்லை. பல இடங்களில் திறந்தவெளியில் குப்பையைக் கொட்டி எரித்துவிடுகிறார்கள்.
- திடக்கழிவு மேலாண்மையைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் ஏற்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில், குப்பைக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. குப்பைக் கிடங்குகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள நிலத்தடி நீரின் தரத்தையும் காற்றின் தரத்தையும் சீரான இடைவெளியில் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்கிற நிலையில், எத்தனை இடங்களில் அது கடைப்பிடிக்கப்படுகிறது என்பது கேள்விக்குரியது. பெரும்பாலும் புறநகர்ப் பகுதியிலும் எளிய மக்கள் வசிக்கும் இடங்களிலுமே குப்பைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வாகத் தெரியவில்லை.
- இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கலாகாது. மக்கள் நலனையும் சுற்றுச்சூழலையும் ஒருசேரப் பாதிக்கும் திடக்கழிவைக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளைக் களைய தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (31 – 03 – 2023)