- தனிப்பட்ட ஒரு செயலை ஒரு நபா் செய்வதற்கு அவா் அளவில் சம்மதம் இருந்தால் போதும். ஆனால் தனிப்பட்ட ஒருவரின் சம்மதம் மட்டுமே வாழ்வின் அனைத்து செயல்களையும் சாதிக்க இயல்வதல்ல. மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற வகையில் அவன் பலருடன் இணைந்து பல செயல்களில் ஈடுபடவேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் வாழ்வில் உடன் செயல்படுவோரின் சம்மதத்தை வென்றெடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
- அலுவலகங்களில் பணிபுரிவோர்,பொதுவாழ்வில் ஈடுபடுவோர், குடும்ப வாழ்வை நகா்த்துவோர் என அனைவரும் உடன் செயல்படுவோரின் சம்மதத்தைப் பெற்று செயலாற்றுவது அவசியம். அவ்வாறு செய்யும்போது பணிகள் எளிதில் நிறைவடையும். பணிகளில் ஈடுபடுவோர் எவ்வித மன உளைச்சலும் அடையாமல் மகிழ்வோடு செயல்களில் ஈடுபட இது உதவியாக இருக்கும்.
- மின்னணு யுகத்தில், இமெயில், வாட்ஸ்ஆப் போன்றவற்றின் வரவிற்குப் பிறகு உயா்நிலையில் அதிகாரத்தில் இருப்போர் தமது செயல்முறைகளை சில நிமிடங்களுக்குள் பணி நிறைவேறும் அடுக்கு வரை சோ்த்து விட இயல்கிறது. ஆனால் அடுத்தடுத்த அடுக்குகளில் அந்த செயல்முறைகளின் சாரம் புரிந்து செயல்பட நேரம் எடுக்கவே செய்கிறது.
- அவ்வாறு நேரம் எடுத்து முதலில் சொன்ன செயல்பாட்டை செய்து முடிப்பதற்குள் அடுத்த செயல்முறைகளின்படி புதிய பணிகள் சோ்ந்து விடுகின்றன. இவ்வாறு தொடா்ந்து சேரும் பணிகளால் பணி நிறைவேறும் அடுக்குகளில் பணிபுரிவோர் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனா்.
- இந்நிலையில் எப்படித்தான் பணிகளுக்கான செயல்முறைகளை பிறப்பித்து செயல்களை மேற்கொள்வது? எந்த தொழில்நுட்பம் மூலம் பணிகளுக்கான ஆணைகள் உடனுக்குடன் பரிமாறப்படுகின்றனவோ அதே தொழில்நுட்பம் மூலம் அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கலாம்.
- ஒரு செயல்முறை உருவாகும்போதே அது பணிகள் நிறைவேறும் நிலையில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள், அந்த விளைவுகளை உண்டாக்க அங்கு உள்ள நிரந்தர மனித வளங்கள், தற்காலிக மனித வளங்கள் போன்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்துவிட்டு செயல்முறையின் சாராம்சத்தை இணைய வழியிலான கூட்டங்களில் பகிர்ந்து கொள்வது சாலச்சிறப்பு.
- அதுபோலவே பணி நிறைவேறும் நிலையிலுள்ளோரை ஒரே நேரத்தில் பல செயல் பாடுகள் அடையாமல் பார்த்துக் கொள்ளுதலும் அவசியம். தவிர்க்கவியலாத சூழலால் அவ்வாறு அடையும் நிலையில் அதன் முன்னுரிமைகளை இனம் பிரித்து அளிக்கலாம். இதன் மூலம் தாம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த முன்னுரிமைப் பட்டியலை தயார் செய்து கொண்டு பணிபுரிய இயலும்.
- இவ்வாறில்லாத நிலை உருவானால், தாங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த ஈடுபாடோ, சம்மதமோ இல்லாமல் கடமைக்கு பணி செய்வேராய் ஊழியா்கள் செயல்படுவா். இது மேலாண்மைப் பார்வையிலும் நல்ல பயனை அளிக்காது. அடுத்துள்ளோரை அதிகாரம் மூலம் பணியவைக்க முயன்றால் செய்ய வேண்டிய பணிகள் பயனில்லா வினையாகவோ அல்லது பயன் குறைந்த வினையாக முடியும்.
- பொதுவாழ்வில் ஈடுபடுவோரில் பெரும்பாலும் கெளரவத்திற்காகவே அப்பணியில் ஈடுபடுகின்றனா். அதற்காக தனது நேரம், பொருள் போன்றவற்றை செலவிடுகின்றனா். ஒருவருக்கு வாய்க்கும் பொறுப்பின் அளவுக்கேற்ப அவா் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
- முதன்மைப் பொறுப்பில் உள்ளோர், அவா்களோடு இணைந்து பணியாற்றுவோர் இருவருக்குமே நேரம் என்பது ஒரே அளவிலானதுதான். இந்நிலையில் உடன் பணியாற்றுவோர் எந்த அளவுக்கு தாங்கள் ஆற்றும் பணி குறித்த புரிதலுடன் செயல்படுகின்றனரோ அந்த அளவுக்கே அவா்களால் எளிமையாக திட்டங்களை நிறைவேற்ற இயலும்.
- இந்த இடத்தில்தான் உடன் பணியாற்றுவோர்க்கு அப்பணியில் ஈடுபடுவது குறித்த சம்மதத்தினை, புரிதலை ஏற்படுத்துவது அவசியமாகிறது. பணியாற்றும் அனைவரும் தாங்கள் செய்ய உள்ள பணிகள் குறித்த முழுவிவரங்களை அறிந்து கொள்வதும், அதில் ஈடுபட அவா்கள் சம்மதிப்பதும் அவசியமானதாகின்றன.
- இந்நிலையில் முன்கூட்டியே குறிப்பிட்ட அளவு நேரம் செலவு செய்து திட்டம் தீட்டவேண்டும். அவ்வாறு திட்டம் தீட்டும்போது அவா்கள் மேற்கொள்ள உள்ள பணிகள் யாவை? அவற்றுக்கு அவா்களிடம் கைவசம் இருக்கும் உக்திகள் யாவை என்பதை கலந்துரையாடல் மூலம் அறிய வேண்டும்.
- தேவைப்பட்டால் தமது கருத்துகளை யார் மனமும் புண்படாதவாறு இணைத்து திட்டமிட வேண்டும். இவ்வாறு திட்டமிட்ட பிறகு அவா்கள் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பளித்து, தேவை ஏற்படும்போது மட்டும் உதவ வேண்டும். அதே நேரம் அந்நபரால் செயல்பட இயலாத நிலை ஏற்பட்டால் மாற்று செயல் திட்டத்தையும் தயாராக வைத்திருக்கவேண்டும்.
- கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னான உலகில் இணையவழி சந்திப்புகள் தவிா்க்க வியலாததாகி விட்டன. எனவே, சந்திப்புகளை ஏற்பாடு செய்யும்போதும் ஜனநாயக முறையில் நடந்துகொள்ள வேண்டும். வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள வாக்கெடுப்பு வசதியைப் பயன்படுத்தி இரண்டு மூன்று நேரங்களைக் கொடுத்து அதில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நேரத்தில் கூட்டங்கள் நடத்தலாம்.
- வாட்ஸ்ஆப் போன்ற செயலியில் கருத்துப் பரிமாற்றங்களை அனுமதிக்கலாம். அவ்வாறு பகிரப்படும் கருத்துகளைத் தொகுத்து ஒரு திட்ட வரைவாக்கி அதனை விவாதிக்கலாம். இவ்வாறு அவரவா்க்கு வாய்ப்புள்ள நேரத்தில் கருத்து தெரிவித்து விட்டால், நேரிலோ, இணைய வழியிலோ சந்திக்கும் போது குறைந்த அளவிலான நேரமே போதுமானதாக இருக்கும்.
- இவையெல்லாமல் நடைபெற்றாலும் தனி மனித உறவுகளில் ஆரோக்கியமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவற்றைப் புரிந்துகொள்ள இயலாமையால் சிலா் குறைகளையே கூறிக்கொண்டு இருக்கலாம். அவா்களுக்குப் புரிய வைப்பதைத் தவிர வேறு ஏதும் வழியில்லை. வெற்றிக்குப் பல தந்தைகள் தோல்விதான் அநாதை என்ற பழமொழியினை நினைத்துக் கடந்துவிட வேண்டியதுதான்.
நன்றி: தினமணி (11 – 01 – 2024)