- திசையெங்கும் நாளும் புதுமைகள் மலரும் துறைகளில் வேளாண்துறைக்கும் குறிப்பிட்ட இடம் உண்டு. மேலும் காலத்துக்கு தகுந்தவாறு அதன் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் வேளாண்துறை இருந்து வருகிறது.
- அத்தகைய நிர்பந்தம் என்னவெனில் ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை உள்ளடக்கி மேற்கொள்ளும் பட்சத்தில் நிலையான நீடித்த வளர்ச்சி உண்டாகிறது. அவ்வாறுநிலையான நீடித்த வளர்ச்சிக்கு வேளாண் சுற்றுலா வித்திடும் என்பதைபல்வேறு ஆய்வுகளைக் கொண்டும்,கள நிலவரத்தைக் கொண்டும் தொடர்ந்து 14 வாரங்கள் ‘வணிக வழி வேளாண் சுற்றுலா’ எனும் தொடர் வழியே கண்டோம்.
- அத்துடன் வளர்ந்த நாடுகள் முதல்வளரும் நாடுகள் வரை வேளாண் சுற்றுலாஎவ்வாறு அதன் நிலைமையைக் கட்டமைத்துள்ளது என்பதையும் பார்த்தோம். அதிலும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வேளாண் சுற்றுலா விவசாயிகளிடத்தில் ஆகச்சிறந்த வளர்ச்சியை உண்டாக்கித் தந்துள்ள அதே வேளையில் இந்தியாவிலும் வேளாண் சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது ஆண்டுக்கு 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருவதையும் பார்த்தோம்.
- இதற்கிடையில் உலகளவில் வேளாண் சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க ஆய்வாளரும் பேராசிரியருமான கார்லா பார்பெயரி, 2020 முதல் 2095-ம்ஆண்டுக்குள் வேளாண் சுற்றுலாஏன் முதன்மையான ஒன்றாக இருக்கும் என்பதற்கு இரண்டு வகையிலான சுற்றுலாவாசிகளைக் கொண்டு விளக்குகிறார்.
- முதலாவது வகையினர் பெரும் குறிக்கோள் உடைய சுற்றுலாவாசிகள். அதாவது, அவர்கள் வேளாண்மை தொடர்பான செயல்பாடுகளை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதுடன் பங்கேற்பதிலும் முழுமனதாக இருப்பார்கள். ஆதலால் அதனை இனி வரும் நாட்களில் வேளாண் சுற்றுலா மூலமே பூர்த்தி செய்ய முடியும் என்கிறார். அடுத்து பொழுதுபோக்குக்காக சுற்றுலா செல்லும் சுற்றுலாவாசிகளை இரண்டாவது வகையினர் எனக்கூறுகிறார்.
- அவர்களின் முதன்மை நோக்கமே வேளாண் சுற்றுலாவில் பொழுதுபோக்கு நிறைந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவதுடன் வேளாண் சுற்றுலா பண்ணையின் வெளிப்புறத்தில் அதிக நேரம் செலவிட விரும்புவார்கள் என்கிறார்.
- முதலாவது வகையினர் வேளாண் சுற்றுலா மூலம் பாரம்பரிய முறைகளையும், இயற்கை தொடர்பான புரிதல்களையும் கற்றுத் தெரிந்துகொள்வார்கள் என்றும் 2-வது வகையினர் வேளாண் சுற்றுலா மூலம் கிடைக்கும் பொழுதுபோக்கை அதிகம் விரும்பும் ரசனை உடையவர்களாக இருப்பார்கள் என்றும் கூறுகிறார்.
- மொத்தத்தில் இவர்களின் வழியே வேளாண்சுற்றுலாவானது இனி வரும் காலத்தில் நீக்கமற ஆட்சி புரியும் என்பதனை சொல்லாமல் சொல்கிறார். மேலும் அத்தகைய ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் சர்வதேச வேளாண் சுற்றுலா கூட்டமைப்பு (Global Agritourism Network) ஆண்டுதோறும் வேளாண் சுற்றுலா தொடர்பான சர்வதேச அளவிலான கருத்தரங்கு மற்றும் ஆய்வுகளை முன்னின்று நடத்தி வருவதுடன், வேளாண் சுற்றுலா தொடர்பான தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. இத்தகைய செயல்பாடு வேளாண் சுற்றுலாவின் சர்வதேச அங்கீகாரத்தை நமக்கு உணர்த்துகிறது.
- இப்படி எதிர்காலம் நிறைந்த வேளாண் சுற்றுலாவை நாடெங்கும் எடுத்துச்செல்ல சரியானதொரு காலம் கனிந்துள்ள நிலையில், மாநில அரசுகள் முனைந்து மத்தியஅரசுடன் இணைந்து அதற்கான விடியலுக்குவழிவகுக்க வேண்டும். அந்த விடியல் வேளாண் சுற்றுலாவுக்காக தமிழ்நாட்டில் பிறக்கும் பட்சத்தில், ‘பொன் செய்யும் உழவு செய்து பொழுதெல்லாம் உழைக்கும்’ வர்க்கத்துக்கு துணை நின்ற அரசு எனும் பெயர் காலாகாலத்துக்கும் நிற்கும்.
- இறுதியாக இந்த தொடர் வழியே பயணித்த பலரும் குறிப்பாக விவசாயிகளும் தங்களின் வேளாண் பண்ணையில் வேளாண் சுற்றுலாவை ஆரம்பிக்க விருப்பப்படுவதாக மின்னஞ்சல் வழியேகூறியிருந்தனர். அதற்கான வழிமுறைகள் தொடங்கி செயல்பாடுகள் வரை அனைத்தையும் நாம் விவாதித்து இருந்ததை குறிப்பிட விரும்புகிறேன்.
- இனி வரும் காலம் வேளாண் சுற்றுலாவுக்கும் வாழ்வளிக்கும் என்பதால் வேளாண் பெருமக்களே திட்டமிடுங்கள், வாய்ப்பை முன்னெடுங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 07 – 2024)