TNPSC Thervupettagam

திட்டம் போடுவதாலேயே பிரச்சினைகள் தீர்க்கப்படுமா

December 21 , 2023 368 days 265 0
  • தமிழ்நாடு அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகக் கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீதுவிரைவாகத் தீர்வு காணவும் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி அரங்கத்தில் டிசம்பர் 18 அன்று நடைபெற்ற விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். மக்களிடம் பெற்ற மனுக்களுக்கு 30 நாள்களில் தீர்வு காண்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால், ஏற்கெனவே இப்படிப் பல்வேறு திட்டங்கள் இருக்கும்போது திட்டத்துக்குத் திட்டம் என நீட்டித்துக்கொண்டே போவது சரியா என்னும் கேள்வியும் எழுகிறது.

புதிய திட்டம் என்ன சொல்கிறது

  • முதல்வரின் தனிப் பிரிவில் அஞ்சல் மூலம் ஆயிரக்கணக்கான மனுக்கள், முதல்வரின் முகவரி - இணையவழிச் சேவையில் ஆயிரக்கணக்கான மனுக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திரக் குறை கேட்புக் கூட்டம், மாதம் ஒருமுறை மனுநீதி நாள் முகாம், மாதம் ஒருமுறை இரவில் ஆட்சியர்கள் கிராமத்தில் தங்கி மக்கள் தொடர்பு முகாம் மூலம் மனு பெறுதல் என ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போது, இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சியிலும், 6 முதல் 10 வார்டுகளுக்கு உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குறைகேட்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, ஒரு பொது இடத்தில் திரட்டிவைத்து மனு பெறுவது; தொடர்ந்து அனைத்து வார்டுகளுக்கும் அட்டவணை வெளியிடப்பட்டு, அதன்படி மனு பெற்றுத் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் பெறப்படும்போது, அலுவலக உதவியாளர் இருவர், கணினி இயக்குநர், அனைத்துத் துறை அலுவலர்கள் உடனிருக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளனர்.

குறை கேட்பதில் குறைவில்லை

  • ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 4 லட்சம் மனுக்களில், 2.7 லட்சம் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக முதல்வரின் ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைகளைக் கேட்பதில் குறை வில்லை; தீர்வுதான் கிடைக்கவில்லை என்பதைத்தான் தற்போது பல்வேறு பெயர்களில் மனுக்கள் பெற அரசு அறிவிக்கும் திட்டங்கள் வெளிக்காட்டுகின்றன. குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குரிய மனுவே 3 முதல் 4 பிரிவுகளாக வழங்கப்படும்போது, மனுவின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
  • இந்நிலையில், ஒரு மனு ஏன் பல இடங்களுக்குச் செல்கிறது, அதை ஆராய வேண்டியது யார் பொறுப்பு என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. நிதர்சனத்தில் உள்ள பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமலேயே புதுப்புதுப் பெயர்களில் திட்டங்களை அறிவிப்பதில் எந்தப் பயனும் இல்லை. இதுவரை நடைமுறையில் உள்ள திட்டங் களுக்குப் போதிய மனிதத் திறன் உள்ளதா என ஆராயாமல், யாரோ சிலர் முன்வைக்கும் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு திட்டங்களை அறிவித்து மனுக்களை வாங்குவதால் பலன் ஏதும் கிடைப்பதில்லை. மாறாகப் பிரச்சினைகள் அதிகரிக்கவே செய்கின்றன.

அதிகரிக்கும் பணிச்சுமை

  • இதுபோன்ற திட்டங் களை அமல்படுத்துவதற்காக ஊழியர்கள் புதிதாகப் பணியமர்த்தப்படுவதில்லை. ஏற்கெனவே பணியில் இருக்கும் ஊழியர், புதிய பணிகளுக்காக மடைமாற்றப்படும்போது அவரது அன்றாடப் பணி பாதிக்குமே என அரசுகவலைப்படுவதில்லை. உதாரணத்துக்கு, சிதம்பரம் வருவாய்த் துறையில் பணியாற்றும்ஊழியர், 46 கி.மீ. தொலைவில் உள்ளவிருத்தாசலம் நகராட்சிப் பகுதியில் நடைபெறும் முகாமுக்கு அனுப்பிவைக்கப்படுவதை யெல்லாம் பார்க்க முடிகிறது.
  • நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் அலுவலகப் பணிகளை மேம்படுத்த முடியும். ஆனால், சுமார் 15 லட்சம் மனிதத் திறன் வேண்டிய இடத்தில் 11.07 லட்சம் ஊழியர்களைக் கொண்டு பணிச்சுமை ஏற்படுத்தும்போது, அரசின் நோக்கம் பிசகுமே தவிர, நிறைவேறாது. நிர்வாகத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்தாலே மக்களை மகிழ்ச்சியடையச் செய்யலாம் என்ற யோசனைகளை முன்வைப்பவர்களை அரசு கவனமாக அணுக வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அடுக்கடுக்கான திட்டங்கள் மட்டும் போதாது. நடைமுறைசார் புரிதல் கொண்ட அணுகுமுறையும் அவசியம்!

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories