TNPSC Thervupettagam

திராவிடத்தின் சிம்மக் குரல் | நாகூர் ஹனீபா நூற்றாண்டு

December 25 , 2024 7 hrs 0 min 20 0

திராவிடத்தின் சிம்மக் குரல் | நாகூர் ஹனீபா நூற்றாண்டு

  • 1930களில் நாகூரில் உள்ள செட்டியார் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவனாக, இஸ்லாமிய பிரார்த்தனைப் பாடலைப் பாட ஆரம்பித்த இ.எம்.ஹனீபா விரைவில் அது தன் வாழ்நாள் தொழிலாக மட்டுமின்றி, ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் அழைப்புக் குரலாகவும், கோடானு கோடி தமிழர்களின் அபிமானக் குரலாகவும் மாறும் என்று நினைத்திருக்க மாட்டார். ஏனென்றால் அவருக்கு இசையில் முறையான பயிற்சி இல்லை.

சுயம்புக் கலைஞர்:

  • 1925 டிசம்பர் 25ஆம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் பிறந்த ஹனீபா, வளர்ந்ததெல்லாம் தந்தையின் ஊரான நாகூரில்தான். மலேசியாவில் பணிபுரிந்த தந்தை, கிராமபோன் ஒன்றை வீட்டுக்குக் கொண்டுவர, கவ்வாலி இசையையும், அன்று பிரபலமான தமிழ் இஸ்லாமியப் பாடகர் காரைக்கால் ஏ.எம்.தாவூத்தின் இசைத்தட்டுக்களையும் கேட்டுத் தன் இசைஞானத்தை மெருகேற்றிக்கொண்டார் ஹனீபா.
  • இளம் வயதாயினும், அட்சரப் பிழையின்றி கணீரென்று ஒலிக்கும், மனதைக் கவரும் குரலினால் ‘நாகூர் கவ்தியா பைத்து சபை’யின் முன்னிலைப் பாடகராக, திருமண ஊர்வலங்களிலும், மேடைகளிலும், மீலாது நபி போன்ற சமூக நிகழ்ச்சிகளிலும் அவருக்குப் பாட வாய்ப்புக் கிடைத்தது. பின்னாளில் தனது நண்பரான நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ. காதரின் உதவியுடன் கர்னாடக இசையில் தனது ஞானத்தை வளர்த்துக்கொண்டார்.

திராவிட இயக்கம் மீது ஈர்ப்பு:

  • தனது சிறு வயதில், மலேசியாவிலிருந்து தந்தை கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, சுயமரியாதை இயக்க ஏடான பெரியாரின் ‘குடிஅரசு’, தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியைப் போதித்த பா தாவூத் ஷாவின் ‘தாருல் இஸ்லாம்’ ஆகிய பத்திரிகைகளை வாங்கி அவருக்கு அனுப்புவது ஹனீபாவின் வழக்கம். அனுப்பும் முன்னர் அவற்றை ஆர்வமாகப் படிக்க, சுயமரியாதை இயக்கத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் தாக்கத்தில், 1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கறுப்புக்கொடி காட்டுமளவுக்கு ஹனீபா மாறினார்.
  • திருவாரூரில் உறவினர் கடையில் வேலை செய்யச் சென்றபோது, ஹனீபாவைப் போலவே, மேடையில் ஏறி இளம் வயதிலேயே சுயமரியாதைக் கருத்துக்களை முழங்கிய முத்துவேல் கருணாநிதியுடன் தொடர்பு ஏற்பட்டது. ஹனீபாவைவிட ஏறக்குறைய ஓரிரண்டு வயது மூத்தவர் கருணாநிதி. 1940இல், நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வத்தின் எதிர்பாரா மரணம் குறித்து திருவாரூரில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ‘பரகதி சேர்ந்தனையோ பன்னீர் செல்வமே’ என்று ஹனீபா பாட, கூடியிருந்த மக்கள் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.
  • தந்தை பெரியாரின் மயிலாடுதுறை - நாகை சுற்றுப்பயணங்களில் உடன் பயணித்து திராவிட இயக்கப் பாடல்களையும் பாடிய ஹனீபா, பேரறிஞர் அண்ணா 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவுடன், அவருடன் ஐக்கியமாகி திமுகவின் கொள்கைகளை எழுச்சிமிக்க பாடல்களாகப் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் கொண்டுசெல்லத் தொடங்கினார்.

வலிமைமிக்க குரல்:

  • ‘நம் நாடு’ பத்திரிகையில் வெளியான, ‘அழைக்கின்றார் அண்ணா’ பாடலை ஹனீபா பாட வேண்டும் என்று கருணாநிதி விரும்ப, மேற்கொண்டு நடந்ததை கருணாநிதியே ஹனீபாவின் முத்துவிழா மலர் (1993) வாழ்த்துரையில் விவரிக்கின்றார்: “அழைப்பு விடுத்தேன் பாடச் சொல்லி! மெட்டு அமைத்துப் பாடிக் காட்டினார்! அந்தப் பாடல் அனிபாவுக்கு திருவாடுதுறை ராஜரத்தினத்திற்கு தோடி ராகம் போல! எங்கு சென்றாலும் அந்தப் பாடலை பாடச் சொல்கிறார்கள். நான் எழுதிய திரைப்படம் ஒன்றில் அந்தப் பாடலை ஹனீபாவே பாட வேண்டுமென்றேன், பாடினார். ஆனால் அந்தக் காலத்துத் தணிக்கை அதிகாரி அந்தப் பாடலை வெட்டிவிட்டார்.”
  • “அழைக்கின்றார் அண்ணா என்று ஹனீபாவைப் பாடவைத்துப் படம் எடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால் திராவிட நாடு பெற்றுவிடுவேன்” என்று அண்ணா சொல்லுமளவுக்கு அந்தப் பாடல் சாமானிய மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனாலென்னவோ ஏ.பீம்சிங் இயக்கத்தில் உருவான ‘அம்மையப்பன்’ படத்தில் சேர்க்கப்பட்டிருந்த அப்பாடலைத் தணிக்கை அதிகாரிகள் நீக்கிவிட, சற்றும் மனம் தளராமல் ஹெச்.எம்.வி. நிறுவனத்தின் இசைத்தட்டாக ஹனீபா வெளியிட்டு தமிழக மக்களிடம் பாடலைக் கொண்டுசென்றார்.
  • ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’, ‘ஓடி வருகிறான் உதய சூரியன்...” என்று எண்ணற்ற ஹனீபாவின் பாடல்கள் திமுகவைப் பலப்படுத்தின. ஹனீபாவின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அவருக்குப் பாடல்கள் எழுதித் தரப் புலவர் ஆபிதீன், சமுதாயக் கவிஞர் தா. காசீம், கவிஞர் சலீம், சாரண பாஸ்கரனார், கவிஞர் அப்துல் சலாம், பேராசிரியர் கா.அப்துல் கஃபூர், கவிஞர் அப்துர் ரஹீம், கவிஞர் வீரை ரஹ்மான் இன்பராஜ் என்று பல நண்பர்கள் இருந்தனர்.
  • 1961இல் ஈ.வெ.கி. சம்பத் திமுகவிலிருந்து வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’யைத் தொடங்கினார். திமுகவில் ஏற்பட்ட முதல் பிளவு இது. மனம் வருந்திய திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த ஹனீபா தன் நண்பர் கவிஞர் நாகூர் சலீமை அணுக, உருவான பாடல்தான் ‘வளர்த்த கடா மார்பில் பயந்ததடா’.

பதவிகளை விரும்பாதவர்:

  • வெறும் இசைப்பணியை மட்டும் தன் இயக்கப் பணியாகக் கொண்டிராமல், களத்திலும் சரிக்குச் சமமாக இறங்கி வேலை செய்தவர் ஹனீபா. அண்ணாவுடன் சேர்ந்து உரக்கப் பாடிக்கொண்டே திருச்சி மாநகரின் தெருக்களில் கைத்தறி விற்பதாகட்டும் அல்லது இந்தி எதிர்ப்பில் சிறை செல்வதாகட்டும், ஹனீபா தன்னை முழுவதுமாக இயக்கத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். 1957 தேர்தலில் நாகப்பட்டினத்தில், 2002 இடைத்தேர்தலில் வாணியம்பாடியில் போட்டியிட அவருக்குக் கட்சி வாய்ப்பு வழங்கியது. இரண்டிலும் அவர் தோல்வியுற்றார். அவரை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி மேலவை உறுப்பினராக்கினார்.
  • பின்னர் வக்ஃப் வாரியத் தலைவராக்கியும் மகிழ்ந்தார். பெரிதும் படித்திராத ஹனீபாவுக்குப் பதவிகளைத் தேடித் செல்வதில், வகிப்பதில் பெரும் ஆர்வம் இருந்ததில்லை என்கிறார் அவரது மகன் நவ்ஷாத் அலி. திராவிட இயக்கத்தைத் தாண்டி ஹனீபா பெரிதும் மதித்த தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்.
  • காயிதேமில்லத்தும் ஹனீபாவின் தீவிர ரசிகர். விழுப்புரத்தில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் ஹனீபாவின் பாடலைக் கேட்டு உறங்க முடியாமல், அவரை நள்ளிரவில் மீண்டும் பாடக் கேட்டு மகிழ்ந்தவர். ‘இதுதான் நாங்கள் செய்த துரோகமா?’ மற்றும் ‘மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே’ ஆகிய பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்த ஹனீபாவின் பாடல்கள்.

திரைப் பாடல்கள்:

  • தனது கம்பீரம் பொங்கும் குரலால் தனக்கென்று இசைத் துறையில் ஓர் இடத்தை ஏற்படுத்திக்கொண்ட ஹனீபா ‘குலேபகாவலி’, ‘பாவமன்னிப்பு’, ‘தர்ம சீலன்’, ‘என்றென்றும் காதல்’, ‘செம்பருத்தி’, ‘ராமன் அப்துல்லா’ எனப் பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார்.
  • இளையராஜா தனது திரையுலகப் பிரவேசத்துக்கு முன்னதாகவே இசைத்தட்டுக்காக இசைமுரசு ஹனீபாவின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இளையராஜாவின் இசையில் ‘அல்லாஹு அக்பர்’ என்ற படத்துக்கு ஹனீபா ஆறு பாடல்கள் பாடியிருக்கிறார். அப்படம் இதுவரை வெளிவரவில்லை.
  • கட்சிப் பணியில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட காலத்திலும் இஸ்லாமியப் பாடல்களைப் பாடுவதிலும் இனிய தமிழ் பாடல்களைப் பாடுவதிலும் ஹனீபா தொடர்ந்து பணியாற்றினார். பாரதிதாசன், குணங்குடி மஸ்தான் சாகிபு ஆகியோரின் பாடல்களையும், பிற இஸ்லாமியப் பாடல்களையும் பாடுவது மட்டுமின்றி இசைத்தட்டாகவும் வெளியிட ஆரம்பித்தார்.
  • அவ்வாறு ஹனீபா மெனக்கெட்டு மெட்டமைத்த பாடல், மதங்களைக் கடந்து அவருக்கு ரசிகர்களைப் பெற்றுத் தந்த பாடல்தான் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’. குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனம் மகா குரு சோமசுந்தரத் தம்பிரான், உள்பட மதங்களைக் கடந்தும் கடல் கடந்தும் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் ஹனீபாவின் பாடலுக்கு ரசிகர்கள் உண்டு!

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories