TNPSC Thervupettagam

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: மாறியது என்ன, ஏன்? - ஒரு விரைவுப் பார்வை

December 15 , 2023 200 days 181 0
  • திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறவும் அதற்கு மாற்றாக சிலவற்றை அமல்படுத்தவும் வகை செய்கின்றன. ஒவ்வொரு சட்டத்திலும் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • இதற்கு மாற்றாக முறையே, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 புதிய மசோதாக்கள் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற நிலைக்குழுவின் (உள் துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு, சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இந்த பரிந்துரை அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்தார். திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறவும் அதற்கு மாற்றாக சிலவற்றை அமல்படுத்தவும் வகை செய்கின்றன. ஒவ்வொரு சட்டத்திலும் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
  • அதன்படி அவ்வாறாக மாற்றப்பட்ட சில சட்டங்களும், அவற்றிற்கான தண்டனை மாற்றங்கள் பற்றியும் காண்போம்.

கைவிலங்கு யாருக்கு

  • பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023-ன் (பிஎன்எஸ்எஸ்) சட்டப்பிரிவு 43 (3)ன் படி, கைவிலங்குகளை யாருக்கு இட வேண்டுமென்பதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கொடுங்குற்றம் புரிந்தவர்களை கைவிலங்கிட்டு கூட்டிச் செல்லலாம், போலீஸார், காவல் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி இவ்வாறாக கைவிலங்கிடலாம் என்ற திருத்தத்தை உள்துறையின் நாடாளுமன்ற நிலைக் குழு வரவேற்றது. இருப்பினும் பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடுங்குற்றம் புரிந்தவர்களுக்கே கைவிலங்கிடலாம் பொருளாதாரக் குற்றங்கள் புரிந்தவர்களுக்கு அல்ல என்றும் பரிந்துரைத்தது.
  • ஏனெனில் பொருளாதாரக் குற்றங்கள் என்பது சிறிய அளவிலான ஏய்ப்புகள் தொடங்கி மிகப்பெரிய அளவிலான குற்றங்கள் வரை உள்ளடக்குவதால் இதன் கீழ் பதிவாகும் அனைத்து குற்றங்களிலும் கைதாகும் நபர்களையும் கைவிலங்கிட வேண்டியதில்லை என்று குழு பரிந்துரைத்தது. அதேவேளையில் ஆள் கடத்தல், ஆள் மாறாட்டம் போன்ற குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்பவர்கள், காவலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் பழக்கம் கொண்டவர்களை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதைத் தொடரலாம் எனப் பரிந்துரைத்தது.

மாற்றம் என்ன

  • இந்நிலையில் இந்தப் பரிந்துரையை ஏற்று கைவிலங்கிட தகுதியானவர்கள் பட்டியலில் பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு கைவிலங்கிடுவது காவலர்களின் முடிவுக்கு உட்பட்டதாக இருக்கும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேவை, சூழலுக்கு ஏற்ப பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி கைவிலங்கிடலாம் அல்லது நீக்கலாம்.

கருணை மனுக்கள்

  • பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) 2023-ன் சட்டப்பிரிவு 473(1)-ன் படி மரண தண்டனை பெற்றோர் தங்களின் சட்டபூர்வ வாரிசுகள் அல்லது உறவினர்கள் மூலம் கருணை மனு தாக்கல் செய்ய வழி உள்ளது. இதற்கான பழைய நடைமுறையில், சிறைத்துறை அதிகாரிகளின் கவனத்தைப் பெற்று மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி அவரது வாரிசு/உறவினர் மூலம் கருணை மனுவை ஆளுநரிடம் தாக்கல் செய்யலாம்.
  • சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததில் இருந்து 30 நாட்களுக்குள் ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். அது நிராகரிக்கப்பட்டால். அதிலிருந்து 60 நாட்களுக்குள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுவை சமர்ப்பிக்கலாம். அதன் மீது குடியரசுத் தலைவர் வழங்கும் உத்தரவை எதிர்த்து எந்த நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்ய இயலாது. மேலும் முந்தைய நடைமுறைப்படி ஆளுநர், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு கருணை மனுவினை அனுப்பும் முன்னர் அதனை மத்திய அல்லது மாநில அரசுகளின் உள்துறை பார்வைக்கு சமர்ப்பிக்க வழிவகை இருந்தது.
  • இந்நிலையில் புதிய திருத்ததில் நாடாளுமன்ற நிலைக்குழு வேறு ஒரு பரிந்துரையை முன்வைத்தது. அதன்படி, பகுதி நீதிசார் வாரியம் (குவாசி ஜுடிசியல் போர்டு) முன்னர் இதுபோன்ற கருணை மனு, தண்டனைக் குறைப்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதன்மூலம் நீதி சார்ந்த நடவடிக்கைகளின் மீதான முடிவை நேரடியாக ஆளுநர், குடியரசுத் தலைவர் போன்ற நியமனத் தலைமைகளிடம் விடாமல் தவிர்க்கலாம். அதேபோல் கருணை மனுக்கள் மீதான விசாரணைக்கும் கால அவகாசம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

மாற்றம் என்ன

  • இந்த சட்டப்பிரிவை 473ல் இருந்து 472 ஆக மாற்றியதோடு புதிய மசோதாவில் கருணை மனுக்களை மத்திய, மாநில அரசுகளின் உள்துறையின் பார்வைக்கு அனுப்பும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • சட்டப்பிரிவு 473(7)ன் படி, குடியரசுத் தலைவர் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 72-ன்படி கருணை மனு மீது பிறப்பிக்கும் உத்தரவை மேல்முறையீட்டுக்கு உட்படுத்த முடியாது எனக் கூறியது ஆனால் சட்டப்பிரிவு 472 (7) ஆனது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161ன் படி ஆளுநர் ஒரு கருணை மனு மீது பிறப்பிக்கும் உத்தரவையும் மேல்முறையீடு செய்ய இயலாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த மனுக்கள் மேல்முறையீட்டுக்குச் செல்ல இயலும் என்பது ஆளுநரின் அதிகாரத்துக்குக் கீழ் வந்துவிடும்.

தடுப்புக் காவல் அதிகாரங்கள்

  • பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 172(2)ன் படி காவல் அதிகாரி சட்டத்தின்படி ஒரு நபரை எச்சரிக்கும்போது அவர் தனக்கு ஒத்துழைக்க மறுத்தால், அசட்டை செய்தால் அவரை தடுப்புக்காவலில் எடுக்கலாம். உள்பிரிவு (1)ன்படி அவரை குற்றவியல் நீதித்துறை நடுவர்.(ஜுடிசியல் மேஜிஸ்திரேட்) முன் நேர்நிறுத்தி அவரை குறிப்பிட்ட நிகழ்வின் (போராட்டம், தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை போன்ற நிகழ்வுகள்) காலம் கடந்ததும் விடுவிக்கலாம். இது சாதாரண வழக்குகளுக்குப் பொருந்தும்.
  • இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு இந்த நடைமுறையில் கால நிர்ணயம் தொடர்பாக சிலப் பரிந்துரைகளைச் செய்தது. பழைய சட்டத்தில் “release him when the occasion is past” அதாவது ’நிகழ்வு முடிந்தவுடன் நபரை விடுவிக்கலாம்’ என்பது பொத்தாம்பொதுவாக இருப்பதால் அதில் திருத்தம் தேவை என வலியுறுத்தியது.

மாறியது என்ன

  • புதிய சட்ட மசோதாவில் தடுப்புக் காவலில் எடுப்பவர்களை மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர்படுத்தி அதிகபட்சம் 24 மணி நேரத்துக்குள் விடுவிக்கலாம் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முந்தைய நடைமுறைப்படி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர் என்பது இந்தப் புதிய சட்டத்தில் மாஜிஸ்திரேட் என்று மாற்றப்பட்டுள்ளது.

சமூக சேவை

  • பிஎன்எஸ்எஸ்-ன் முந்தைய நடைமுறையில் சமூக சேவை “community service என்பது தற்கொலைக்கு முயற்சி செய்தல், அதிகார துஷ்பிரயோகம், அவதூறு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போதையுடன் திரிதல் போன்றவற்றுக்கு ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையாக இருந்தது. இதில் சமூக சேவை என்பது எது என விளக்கி, விவரிக்கப்படாமல் இருந்தது.

மாற்றம் என்ன

  • புதிய திருத்ததின்படி பிஎன்எஸ்எஸ் பிரிவு 23-ன் கீழ் சமூக சேவை என்பது விளக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் ஒரு குற்றவாளியை சமூக சேவை செய்யுமாறு பணித்தால் அந்தச் சேவையை அந்த நபர் பொதுமக்கள் நன்மை பெறும்வகையில் கைமாறாகக் கூலி ஏதும் பெறாமல் செய்ய வேண்டும் என்று விவரித்துள்ளது.
  • அதேபோல் சட்டவிரோதமாக பொது ஊழியர்களை பயன்படுத்துதல், சட்டப்பிரிவு 84-ன் கீழ் உரிமை கோரும் வழக்கில் ஆஜராகத் தவறுதல் ஆகியனவற்றையும் சமூக சேவை விதிக்கப்பட தகுதியான குற்றங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இவ்வாறாக சட்டத்திருத்தத்தில் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

நன்றி: தி இந்து (15 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories