TNPSC Thervupettagam

திருத்தொண்டர் புராணம் அருளிய தெய்வ சேக்கிழார்

June 28 , 2024 199 days 483 0
  • தொண்டை நாட்டில் குன்றத்தூரில் அவதரித்த சேக்கிழார் பெருமான், சோழ மன்னனின் முதலமைச்சர். தில்லை அம்பலவாணன் திருவருளால் திருத்தொண்டர் மாக்கதையாகிய பெரிய புராணத்தை அருளியவர்.
  • தெய்வ சேக்கிழார் சான்றோர் நிறைந்த தொண்டை நன்னாட்டில் 24 கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர் கோட்டத்து குன்றத்தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் அருண்மொழி தேவர் என்ற இயற்பெயருடன் அவதரித்தார். அருண்மொழி தேவர், பாலறுவாயர் ஆகிய இரு சகோதரர்களும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர்.
  • அருண்மொழி தேவரின் கல்வியறிவு ஒழுக்கங்களை உணர்ந்த அநபாய சோழன் அவரை சோழ நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கப் பணித்தார். அருண்மொழித் தேவர் சோழ நாட்டில் தங்கி அந்நாட்டு திருத்தலங்களில் ஒன்றாகிய திருநாகேஸ்வரத்து இறைவரை தம் ஆன்ம நாயகராக கொண்டு, அந்த கோயில் அமைப்பிலேயே தம்முடைய ஊராகிய குன்றத்தூரிலும் திருநாகேஸ்வரம் என்ற பெயரால் ஒரு கோயில் அமைத்து வழிபாடும் திருவிழாவும் நடைபெற ஏற்பாடு செய்தார்.
  • அந்நாளில் சோழ மன்னன் சைவ சமய நூல்களின் பெருமை உணராது சமண நூலாகிய சீவக சிந்தாமணியை மனமகிழ்ந்து பாராட்டி கேட்டு வந்தார். இதுகண்ட அருண்மொழிதேவர், "அரசே தங்கள் சைவ சமயத்தில் பிறந்திருந்தும் இம்மை மறுமை வீடு என்னும் மும்மை நலன்களை கேளாது, நமது முழுமுதற் பொருளாகிய சிவபெருமானை நிந்திக்கும் புற சமயத்தர்களுடைய புனைக்கதையான இதனை பாராட்டிக் கேட்பது தகுதியன்று" என அறிவுறுத்தினார்.
  • இதனைக் கேட்ட அநபாய சோழன் தாங்கள் அச்சிவனடியார்களின் வரலாற்றை தொகுத்து விரிவாக நூல் இயற்றித் தர வேண்டுமென வேண்டினார். சேக்கிழார் அது இவ்விடத்திலிருந்து இயற்றுதல் அரிது, தில்லைக்கு செல்ல வேண்டுமெனக் கூறியதும், மன்னர் அவர் சிதம்பரத்தில் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.
  • அருண்மொழித் தேவர் தில்லையை அடைந்து சிவகங்கையில் நீராடி கூத்த பெருமான் திருமுன்பு மனம் உருகி வழிபட்டு "பெருமானே நின்பால் அன்புமிக்க அடியார்களின் வரலாறுகளை பெருங்காப்பியமாக அடியேன் விரித்துப் பாடுவதற்கு அடி எடுத்து கொடுத்து அருளல் வேண்டும்” என வேண்டினார்.
  • அங்குள்ள அனைவரும் கேட்கும்படி தில்லையம்பலவன் திருவருளால், ‘உலகெலாம்’ என்ற அசரீரி எழுந்தது. சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்துள்ளார். தில்லைவாழ் அந்தணர்கள் ஆனந்த கூத்தனுக்கு சாத்திய திரு நீற்றையும் திருமாலையும் திருப்பரிவட்டத்தையும் அருண்மொழித் தேவருக்கு அணிவித்தனர்.
  • அருண்மொழித் தேவரும் திருநேறித் தலைவர்களாகிய தேவார மூவர்களையும் வணங்கிப் போற்றி சிவ சின்னங்கள் அணிந்து 1,000 கால் மண்டபத்தில் அமர்ந்து இறைவன் அருளிய, ‘உலகெலாம்’ என்ற சொல்லையே முதன் முதலாக முதல் மொழியாகக் கொண்டு ‘திருத்தொண்டர் புராணம்’ என்ற தெய்வ காப்பியத்தை பாடி முடித்தார்.
  • நூல் இனிது நிறைவேறியதைக் கேட்டு சோழ மன்னர் மகிழ்ந்து தில்லை வந்தடைந்து சேக்கிழாரை வணங்கிப் போற்றினார். ஈசனே தம் வாக்கால் உலகெலாம் என்று அடி எடுத்துக் கொடுக்க சேக்கிழார் தம்முடைய தொண்டர்களது அடிமைத் திறத்தை விரித்து நூலாக செய்து முடித்தார்.
  • புராண அரங்கேற்றத்துக்கு மன்னர் விரிவான ஏற்பாடுகளை செய்தார். சேக்கிழார் பெருமான் சித்திரை மாத திருவாதிரை நாளில் திருத்தொண்டர் புராணத்தை அரங்கேற்ற தொடங்கி மறு ஆண்டு அதே நாளில் நிறைவு செய்தார்.
  • சோழ மன்னர் தன் பட்டத்து யானையின் மீது அரியணையில் திருத்தொண்டர் புராணத்தையும், சேக்கிழார் பெருமானையும் அமரச் செய்து தான் அவர் பின் ஏறி நின்று கொண்டு தன்னுடைய இரு கரங்களாலும் வெண்சா மரம் வீசி இறைவரது திருவருளை நினைத்து, ‘இதுவன்றோ நான் செய்த தவப்பலன்’ என்று கூறி உளமுறுகினார்.
  • தில்லை நடராஜப் பெருமான் திருமுன்பில் சேக்கிழார் புராணத்தை வைத்தார். சோழ மன்னன் சேக்கிழார் பெருமானுக்கு ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்ற திருபெயர் சூட்டி வழிபட்டு போற்றினார். அநபாய சோழன் திருத்தொண்டர் புராணத்தை செப்பேட்டில் எழுதி முன்னுள்ள பதினொரு திருமுறைகளுடன் சேர்த்து பன்னிரண்டாம் திருமுறை எனப் போற்றி சிறப்பு செய்தார்.
  • பின்பு சேக்கிழார் பெருமான் அமைச்சர் பதவியை துறந்து சிவ வேடம் தாங்கி தில்லையில் தங்கி தவம் இயற்றி கூத்தப்பிரானை வழிபாடு செய்ததோடு திருத்தொண்டர் புராணத்தையும் சிந்தித்து பல்லாண்டு வாழ்ந்து வைகாசி மாத பூசத்தில் தில்லைக் கூத்தன் திருவடிகளை அடைந்தார்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories