TNPSC Thervupettagam

திருநங்கையர் வாழ்வில் ஒளியேற்றும் கரங்கள்

April 14 , 2024 272 days 196 0
  • தமிழகத்தில் திருநங்கை மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறிவருகிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் திருநங்கையர் பலர் பொதுவெளியில் செயல் படுவதைக் காண முடிகிறது.
  • இதற்குப் பலரின் முன்னெடுப்புகளும் காரணம். அவர்களில் சிலரைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 2015ஆம் ஆண்டு மாநிலங்களவையில் திருநர் மசோதாவைத் தனிநபர் மசோதாவாகக் கொண்டு வந்து அதை வெற்றிபெறச் செய்தவர் திருச்சி சிவா. மத்திய அரசு மாற்றுப்பாலினத்தோருக்கான பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர இதுவே முன்னோடியாக இருந்தது.

சமூக அங்கீகாரம்

  • 2008 கூவாகம் திருவிழாவில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் கலந்துகொண்டதைத் திருநங்கையர் பெரிதும் வரவேற்றனர். அக்காலக்கட்டத்தில் திருநங்கையர் நடத்தும் விழாக்களில் பிரபலங்கள் அவ்வளவாகக் கலந்துகொண்ட தில்லை. ஆனால், கூவாகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜாத்தியம்மாள் பேசியது திருநர் சமூகத்துக்கு அங்கீகாரம் தரும்விதமாக அமைந்தது.
  • சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள திருநங்கையர் அமைப்புகளில் சேவை பெற வரும் திருநங்கையர் அனைவருக்கும் இலவச மதிய உணவு அளிக்கிறார் மோகன் சி.லாசரஸ். குடும்பத்தால் விரட்டப்பட்டவர் களுக்குத் தந்தைபோல் அவர் உதவி வருகிறார்.
  • ‘வி.எச்.எஸ்’ நிறுவனம் மூலமாகத் தமிழகத்தில் திருநங்கையருக்கான திட்டங்கள் 2004 முதல் 2014 வரை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப் பட்டன. அதில் ‘வி.எச்.எஸ்’ இயக்குநராக இருந்த டாக்டர் லட்சுமிபாயின் பங்கு முக்கியமானது.

அரசின் துணை

  • விழுப்புரத்தில் கூவாகம் திருவிழா என்றதும் நினைவுக்கு வருபவர் அம்மாவட்டத்தின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ். இவர் அந்தத் தொகுதியின் அமைச்சரோடு இணைந்து திருநங்கையர் அந்த விழாவைச் சிறப்பாகக் கொண் டாட அனைத்து ஏற்பாடுகளையும் சிரித்த முகத்தோடு செய்து தந்துவிடுவார்.
  • எந்த ஆட்சியாக இருந்தாலும் முக்கியப் பொறுப் பில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன், திருநங்கையரின் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு எங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார். சுகாதாரத்துறையில் இவர் பணியாற்றிய போது அரசு மருத்துவர் களிடையே மூன்றாம் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவினார்.
  • ‘SAATHII’ அமைப்பின் மூலம் LGBTIQ மக்கள் குறித்து உலக அளவில் பேசிவருபவர் எல். ராமகிருஷ்ணன். LGBTIQ சமூகம் குறித்த எந்தத் தகவலாக இருந்தாலும் இவரிடம் பெறலாம். தமிழக அரசின் LGBTIQ கொள்கை வரைவுக் குழுவின் உறுப்பினர் இவர்.
  • தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் DD-TI பொறுப்பில் இருந்த பிரமோத்தும் தற்போது அப்பொறுப்பில் இருக்கும் ஜானகிராமனும் தமிழகத்தில் உள்ள பல தொண்டு நிறுவனங்கள் மூலமாகப் பால்வினை நோய்த் தடுப்புத் திட்டத்தைச் சிறப்பாகக் செயல்படுத்தினர். அனைவரையும் பாராட்டித்தட்டிக்கொடுத்து வேலை பார்ப்பதில் சிறந்தவர்கள் இவர்கள்.

திரையில் நிகழ்ந்த மாற்றம்

  • நடிகர் ராகவா லாரன்ஸ் தயாரித்து நடித்த ‘காஞ்சனா’ திரைப்படத்தைத் திருநங்கையர் வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். இந்தப் படத்தைப் பார்த்துப் பல குடும்பங்களில் தங்களது திருநங்கைக் குழந்தையை ஏற்றுக்கொண்டுள்ளனர். திருநங்கையர் கலை விழாக்களில் குறிப்பாக, ‘மிஸ் சென்னை’ போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் திருநங்கையருக்கு ஒப்பனை செய்து மேடை ஏற்றி அழகு பார்ப்பவர் ரேச்சல். குழந்தைப் பருவத் திருநங்கையரின் கல்வி பாதிக்கப்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றைச் சரிசெய்ய அரசுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அரவிந்த் - விவேக் இருவரும் 2014ஆம் ஆண்டு திருநங்கையர் தொடர்ந்து 60 மணிநேரம் நடத்திய கலைநிகழ்வைச் சாதனை நிகழ்வாக ‘புக் ஆஃப் ரெகார்ட்’ஸில் பதிவு செய்து பெருமை சேர்த்தனர். வருடந்தோறும் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளோடு இரண்டு திருநங்கையரையும் விமானப் பயணம் அழைத்துச் செல்கின்றனர்.

நாயக்குகளுக்கு நன்றி

  • கரோனா காலத்திலிருந்து திருநங்கையருக்கு உதவிபுரிபவர் காவல் ஆய்வாளர் ஆனந்திபாபு. திருநங்கையருக்குப் தொழில்பயிற்சி அளித்து தொழில் தொடங்கித் தந்தவர். ‘NCCI’ நிறுவனத்தின் பொதுச்செயலாளரான ஆசிர், திருநங்கையர் குறித்து இளம் பாதிரிமார்கள் புரிந்துகொள்ள ஒரு குறிப்பேட்டை (Theological Educators Module) உருவாக்கியவர். திருநங்கையரையும் திருநம்பிகளையும் பிறர் புரிந்துகொள்ள உதவக்கூடியது இந்தக் கையேடு. ’PDI’ நிறுவனம் மூலமாகத் திருநங்கையருக்குப் பணிகளைச் செய்துவரும் அம்பலவாணன், ‘ARM’ நிறுவனம் மூலமாகத் திருநங்கையருக்குப் பணிபுரியும் பக்தவத்சலம் ஆகியோரும் போற்றத்தக்கவர்கள்.
  • இவர்களோடு, தமிழகத்தில் உள்ள திருநங்கையர் தலைவர்களான அனைத்து நாயக்குகளையும் நாம் நினைவுகூரவேண்டும். குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும் திருநங்கையரை வாழ வைப்பவர்கள் இவர்கள்தாம். அந்தச் சிறுவனின் மனதில் உள்ள பெண்மையை ஏற்றுக்கொண்டு அவன் விருப்பப்படியே வாழ உதவிவருபவர்கள் இவர்கள்.இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பலர் மாற்றுப்பாலினமக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள்தாம் திருநங்கையர் வாழ்க்கையில் சிறிது ஒளியையாவது ஏற்றிவைக்கிறார்கள். அந்த ஒளி திசையெங்கும் பரவ வேண்டும் என்பதுதான் எங்கள் சமூகத்தின் விருப்பம்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories