TNPSC Thervupettagam

திருநர் வாழ்வில் ஒளியேற்றும் தீர்ப்பு

June 18 , 2024 206 days 289 0
  • கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் திருநர்கள் சிறப்புப் பிரிவினராகக் கருதப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. திருநர் சமூகத்தினர் அரசு வழங்கும் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் உள்ள தடைகளை நீக்குவதில் இந்தத் தீர்ப்பு பெரும் பங்களிக்கக்கூடும்.
  • திருநங்கை ஆர்.அனுஸ்ரீ, 2017-18இல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2ஏ தேர்வை எழுதி 121.5 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். ஆனால், அவர் பட்டியல் சாதிப் பெண்கள் என்னும் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணைவிடக் குறைவாகப் பெற்றிருந்ததால் பணிவாய்ப்பைப் பெறுவதற்காகத் தனது சான்றிதழ்களைப் பதிவேற்ற அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து அனு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
  • இந்த வழக்கில், கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்புராயன், திருநர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கல்வி, வேலைவாய்ப்பு விஷயங்களில் சிறப்புப் பிரிவினராகக் கருதப்பட வேண்டும் என்றும் ஆண்கள் அல்லது பெண்களுக்கான பிரிவுகளில் சேர்க்கப்படக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு உள்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு, திருநர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான சிறப்பு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அனைத்து அரசுப் பணிநியமன அமைப்புகளும் இதைப் பின்பற்றுவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இடஒதுக்கீட்டைப் பெறும் பிற சிறப்புப் பிரிவினருக்கு வழங்கப்படுவதுபோல் திருநர்களுக்கும் வயது வரம்புத் தளர்வு வழங்கப்படலாம் என்றும் கூறியுள்ளார். அனு பணிவாய்ப்புக்காகத் தனது சான்றிதழ்களைப் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என்று பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  • 2014இல் ‘தேசிய சட்ட சேவைகள் ஆணையம் எதிர் இந்திய அரசு’ (நால்சா) வழக்கில், உச்ச நீதிமன்றம் திருநர்கள் தொடர்பான மைல்கல் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் திருநர்கள் மூன்றாம் பாலினத்தவராகக் கருதப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நீதிபதி பவானி இதைத் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். நால்சா தீர்ப்பு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், இந்தியாவில் திருநர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அந்தத் தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அரசுகள் உரிய அக்கறை செலுத்தாதது இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பின்னணியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
  • இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை முன்னுதாரணமாகக் கொண்டு பிற மாநில அரசுகளும் திருநர்களைச் சிறப்புப் பிரிவினராகக் கருதி அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். திருநங்கையர் மட்டுமல்லாமல் திருநம்பிகளுக்கும் இந்தப் பயன்கள் சென்று சேர்வதை அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.
  • பன்னெடுங்காலமாகப் பொதுச் சமூகத்தின் புறக்கணிப்பைத் திருநர் சமூகத்தினர் எதிர்கொண்டுவருகின்றனர். இதனால் கல்வியையும் வேலைவாய்ப்புகளையும் பெற முடியாததால்தான் அவர்களில் சிலர் இழிவானதாகக் கருதப்படும் தொழில்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். எனவே, அவர்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பொதுச் சமூகத்தினர் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.
  • திருநர்கள் பிற பாலினத்தவரைப் போல் சமமான கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெறுவதன் மூலமாகவே அவர்கள் மீது சுமத்தப்பட்ட சமூக இழிவை முழுமையாக அகற்ற முடியும். அதற்கான தொடக்கமாக இந்தத் தீர்ப்பு அமையட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories