TNPSC Thervupettagam

திருநர்கள் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கேரளம்

July 11 , 2023 555 days 334 0
  • பொதுச் சமூகத்தால் பலவிதங்களில் புறக்கணிப்புக்கு உள்ளாகிவருகிறது திருநர் சமூகம். முறையான கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்காத காரணத்தால், அவர்களது சமூக வாழ்க்கையும் கேள்விக்கு உரியதாக இருக்கிறது. இந்தச் சூழலில், ‘பிரைடு புராஜெக்ட்’ (Pride Project) என்கிற பெயரில் திருநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டதைக் கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளச் சமூக நீதித் துறையின் உதவியுடன் செயல்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை.
  • திருநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களையும் பொருட்டு பல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அதில் கேரளம் முன்னோடியாக உள்ளது. 2014இல் தேசியச் சட்ட சேவைகள் ஆணையத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வழக்கில், திருநர் உரிமைகள் குறித்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது.
  • சமூகத்தில் திருநர்கள் மோசமாக நடத்தப்படுவதைக் குறித்து இந்தத் தீர்ப்பு கவலையை வெளிப்படுத்தியது. ஆண், பெண் ஆகிய பால் அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு மூன்றாம் பாலினமாக அவர்கள் இருப்பதைச் சமூகம் ஏற்காதது, இந்திய அரசமைப்புச் சட்டக்கூறுகள் 14, 21 ஆகியவற்றை மீறும் செயலாகும் என்றும் அந்தத் தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டது.
  • வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு, திருநர்களுக்கான சமூக மாற்றத்துக்குத் துணைநின்றது. திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் திருநர்களுக்கான திட்டங்களை வகுப்பதற்கும் தூண்டுகோலானது. இதைத் தொடர்ந்து முதன்முறையாகத் தமிழ்நாடு அரசு திருநர்கள் மேம்பாட்டு வாரியத்தை அமைத்தது. அதன் பிறகு கேரளம் உள்பட 11 மாநிலங்கள் இந்த வாரியத்தைத் தொடங்கின. இதில், பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் திருநர்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதில், வாழ்க்கை மேம்பாட்டை உருவாக்குவதில் கேரளம் முன்னணியில் இருக்கிறது.
  • கேரளத்தில் திருநர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் பல ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளன. ‘சாகல்யம்’ என்கிற பெயரில் திருநர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம், தொலைதூரக் கல்வி அளிப்பதற்கான ‘வர்ணம்’ திட்டம், ‘ஸஃப்லம்’ தொழிற்கல்வி அளிக்கும் திட்டம், ‘யத்னம்’ என்கிற பெயரில் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம், சட்டப்படி திருமணம் செய்துகொள்ளும் திருநர்களுக்கான உதவித் திட்டம் எனப் பல திட்டங்களைக் கேரள அரசு செயல்படுத்திவருகிறது.
  • இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 2018இல் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் அளிக்கும் திட்டத்தை அறிவித்து, கேரள அரசு செயல்படுத்திவருகிறது. இந்தச் சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவ உதவியாக மாதம் தலா ரூ.3,000 என 12 மாதங்களுக்கு வழங்கும் திட்டமும் அம்மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு மதுரை ராஜாஜி, சென்னை ராஜிவ் காந்தி ஆகிய மருத்துவமனைகளில் திருநர்களுக்காகத் தனி மையத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
  • கேரள அரசு தற்போது அறிவித்துள்ள ‘பிரைடு புராஜெக்ட்’ திருநர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தை அளிக்கக்கூடியது. நாட்டில் அடிப்படைவாதமும் வேற்றுமை உணர்வுகளும் அதிகரித்துவரும் சூழலில் மதம், சாதி, பாலினம் அடிப்படையில் வேற்றுமை கூடாது என்கிற அடிப்படை ஜனநாயகப் பண்பை நிலைநிறுத்துவதற்கான ஒரு முன்னுதாரணமாகவும் இந்தத் திட்டம் இருக்கிறது. இதுபோன்ற திட்டங்களைப் பிற மாநிலங்களும் பின்பற்றி திருநர் வாழ்க்கையில் ஏற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories