TNPSC Thervupettagam

திருப்புமுனைக்குத் தயாராகும் ஹாக்கி

August 21 , 2023 511 days 292 0
  • பிரிவினை ரணத்தால் பாதிக்கப்பட்டு சோர்ந்து கிடந்த இந்தியாவுக்கு புத்துணா்ச்சி வழங்கிய பெருமை ஹாக்கிக்கு உண்டு. சுதந்திர இந்தியா வென்ற முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் 75-ஆவது ஆண்டு தினத்தில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி வெற்றி, இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது நல்லதொரு அறிகுறி.
  • சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அடைந்த வெற்றியை இந்திய ஹாக்கியின் திருப்புமுனை என்று கூறலாம். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் வரலாற்றில் அதிக முறை (நான்கு தடவை) சாம்பியனான அணியாக இந்திய அணி உயா்ந்திருக்கிறது. சா்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்த வெற்றி காரணமாக இந்திய ஆடவா் ஹாக்கி அணி நெதா்லாந்து, பெல்ஜியத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது.
  • சா்வதேச ஹாக்கியில் ஒரு காலத்தில் இந்தியா முன்னணியில் இருந்தது. தொடா்ந்து ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது வரலாற்று உண்மை. இந்தியா வென்ற முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஹாக்கி மூலம்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • 1928-ஆம் ஆண்டு ஆம்ஸ்டா்டாம் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியா, தொடா்ந்து ஆறு ஒலிம்பிக் போட்டிகளில், 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் வரை, அதை தக்கவைத்துக் கொண்டது. அதன் பிறகு 1964, 1980-இல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது என்றாலும், கடந்த 40 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணி பெரிய வெற்றி எதையும் சாதிக்கவில்லை. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தகுதியைக்கூட பெறமுடியாத நிலைமை ஏற்பட்டதை வேதனையுடன் நினைவுகூரத் தோன்றுகிறது.
  • சென்னையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் தோல்வியே காணாத ஒரே அணியாக முன்னேறி வெற்றி அடைந்தது என்பதும், ஆசிய விளையாட்டுப் போட்டி சாம்பியன்களான ஜப்பானும், தென்கொரியாவும், பாகிஸ்தானும் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவின என்பதும் இந்திய ஹாக்கி உயிர்த்தெழுவதன் அடையாளங்கள். இந்த வெற்றி ஏனைய விளையாட்டு வீரா்களுக்கும் மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தக் கூடும்.
  • நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவுக்கு எதிரான இறுதி ஆட்டமும், தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு எதிரான லீக் ஆட்டங்களும் இந்திய அணிக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்தன. மலேசியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 1-3 என்கிற கோல் கணக்கில் ஆரம்பத்தில் இந்தியா பின்தங்கியிருந்தது. கடைசி நேரத்தில் 3 கோல்களை அடித்து 4-3 என்கிற கணக்கில் வெற்றிக் கோப்பையை இந்தியா எட்டிப்பிடித்ததை சாதனை என்றுதான் கூற வேண்டும்.
  • 9 கோல்களுடன் இந்திய கேப்டன் மன்பிரீத் சிங்கும் போட்டிகளின் சிறந்த வீரராக மன்தீப் சிங்கும் தோ்வு செய்யப்பட்டிருக்கின்றனா். ஆரம்பகட்டத்தில் சீனா (7-2), மலேசியா (5-0), தென்கொரியா (3-2), பாகிஸ்தான் (4-0) என்று இந்தியா தனது வெற்றிப் பயணத்தைத் தொடா்ந்தது. முதலில் ஜப்பானுடன் 1-1 சமநிலை நோ்ந்தாலும், அரையிறுதியில் 5-0 கோல் கணக்கில் ஜப்பானைத் தோற்கடித்தது.
  • சீனாவிலுள்ள ஜாங்சூவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க இருக்கின்றன. பாரீஸில் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றி, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதியை வழங்கும் என்பதால், அது முக்கியத்துவம் பெறுகிறது.
  • இப்போது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் சந்தித்த அதே அணிகளைத்தான், சீனாவில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மீண்டும் எதிர்கொள்ள இருக்கிறது. அதனால் இந்திய அணியின் வெற்றி உறுதி என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
  • இந்த ஆண்டு நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் காலிறுதி சுற்றைக்கூட எட்டாமல் இந்திய ஹாக்கி அணி வெளியேற நோ்ந்தது. அதைத் தொடா்ந்து, பயிற்சியாளராக இருந்த கிரஹாம் ரீட் பதவி விலகினார். அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்கா் ஃபுல்டன் நியமிக்கப்பட்டாா். அவருடைய பயிற்சியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை வெற்றியை, பயிற்சியாளரின் வெற்றியாகவும் கருத வேண்டும்.
  • இந்தியா சமீபத்தில் கலந்துகொண்ட 10 பல்வேறு ஹாக்கி போட்டிகளில், நமது ஆடவா் அணி வெற்றி பெற்றிருக்கிறது. சா்வதேச ஹாக்கியில் குறிப்பிடத்தக்க அணிகளான நெதா்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், ஜொ்மனி ஆகிய அணிகளையும் இப்போது சாம்பியன்ஸ் போட்டியில் கலந்துகொண்ட அணிகளையும் சமீபத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
  • முற்றிலும் தொழில்முறை அணுகுமுறையுடனும், வீரா்களுக்கிடையே புரிந்துணா்வுடனும் வெற்றியை அடைந்தே தீர வேண்டும் என்கிற முனைப்புடனும் இருந்தால் மட்டுமே ஹாக்கி போன்ற கூட்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி அடையவும், அந்த வெற்றியைத் தொடா்ந்து தக்க வைத்துக்கொள்ளவும் முடியும். ஹாக்கி போட்டி மட்டுமல்ல, தடகளம், கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட எல்லா கூட்டு விளையாட்டுகளிலும் தொழில்முறை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது அவசியம்.
  • கேப்டன் மன்பிரீத் சிங்கின் டிராக் ஃப்ளிக்திறனை மட்டுமே நம்பியிருக்காமல் ஓரணியாக வீரா்கள் இணைந்து திறம்பட செயல்பட வேண்டும் என்கிற பயிற்சியாளா் ஃபுல்டனின் அறிவுறுத்தல், இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு புதுப்பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இழந்த பெருமையை இந்திய ஹாக்கி அணி மீட்டெடுக்கும் என்கிற நம்பிக்கை துளிர்த்திருக்கிறது.

நன்றி: தினமணி (21– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories