- பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு நாளான நவம்பர் 25 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற கருத்தரங்கில் இன்றைக்கும் முக்கியமான பிரச்சினையாக வரதட்சிணையைப் பெரும்பாலான பெண்கள் குறிப்பிட்டனர். திருமணங்களின் போக்குகளும் அவற்றின் தன்மைகளும் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுவிட்டபோதும் இப்போதும் தொகைகள் பேசி, நகைகள் பேசி, கொடுக்கல் வாங்கலோடுதான் கல்யாணங்கள் நிகழ்கின்றன. காதலித்துக் கல்யாணம் செய்பவர்களும் அக்காதலை வீட்டில் தெரிவிக்கும்போது சாதி, மதம் என்பதோடு ‘வசதி எப்படி?’ என்கிற பேச்சும் எழுகிறது.
- கல்வியில் முதன்மை வகிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணத்துக்கான தொகையும் அதிகம். நகைகள் கிலோ கணக்கில் பேசப்பட்டு, தொகைகள் கோடிக்கணக்கில் கைமாறப்படுகின்றன. இரண்டு மனங்களின் கூடுகையை வெறும் பணத்தில் தீர்மானித்துவிட்டு அதைப் புனிதமென்று மினுக்கம் பூசுவதுதான் வேடிக்கை. கணவன் வீட்டுக்குப் போகும்போது தான் எடுத்துக்கொண்டு போகும் பணம், பவுன், சீர்களை வைத்தே தங்கள் கெளரவத்தைத் தீர்மானிக்கிறார்கள் பல பெண்கள்.
- அதிக தொகை தரும் பெண்ணைக் கல்யாணம் செய்கிறவனையே அதிக மதிப்பு கூடியவனாகச் சமூகத்தில் தீர்மானித்துவிடுகிறார்கள். அவனும் அதில்தான் பெருமிதப் படுகிறான். அவரவர் கெளரவத்தை நிலைநிறுத்தும் ஒரு தளமாகவே திருமணங்களை வடிவமைக்கிறார்கள். பேசும் தொகையில், நகையில் ஒரு கிராம் குறைந்தால்கூடப் பிறந்த வீட்டில் சண்டையிடும் பெண்கள் உண்டு. பேசிய தொகையில் சில ஆயிரங்கள் குறைந்தால்கூட மனைவியின் குடும்பத்தில் சண்டையிடும் ஆண்கள் உண்டு.
சுழல் வியாபாரம்
- பிறந்த வீட்டில் சகல செளகரியங்களோடு வளர்த்த மகளை இன்னொரு குடும்பத்தில் வாழ அனுப்பும்போது தன் கணவனிடம்கூட அவள் கையேந்தக் கூடாது என்று பிறந்த வீட்டுச் சீதனமாக அளித்த அன்பளிப்பே இன்று வரதட்சிணையாக வளர்ந்து பெரும் குற்றமாகி நிற்கிறது. வலிமைக்கு மீறிப் பேசும் தொகையால் எத்தனையோ வீடுகளில் உள்ள ஆண்கள் அண்ணன், தம்பி, அப்பா எனக் கடனாளிகளாக வாழ்க்கை முழுவதும் விலங்கு பூட்டிக்கொள்கிறார்கள். கடன்களின் நெருக்கத்தில் தற்கொலை முடிச்சுகளில் போய் விழுகிறார்கள். சொந்த சகோதரிகளின் கல்யாணக் கடன்களைத் தீர்க்க, இன்னொரு பெண்ணைத் தொகையோடு கல்யாணம் செய்கிறார்கள். இதுவும் சுழல் முறை வியாபாரமாகிவிட்டது.
- பேரம் பேசாத கல்யாணத்துக்கு வளரும் தலைமுறை களேனும் முன்வர வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி னாலும் அப்படியெல்லாம் பெரிய மாற்றத்துக்குப் பலரும் முன்வரவில்லை. சாதாரண வீடுகளிலும் குறைந்த பட்ஜெட்டாக ஐம்பது பவுன் நகை, இருபது லட்சம் ரூபாய் கையில் தொகை, இது போக கார், வீட்டுமனை, அது இதுவென கல்யாணச் சந்தைகள் பெருகி வளர்ந்துகொண்டே இருக்கின்றன. கல்யாணச் சந்தைகளின் வளர்ச்சிக்குப் பெண்கள் பலர் தங்கள் உயிரை விலையாகக் கொடுக்கின்றனர். அண்மையில் கேரளத்தைச் சேர்ந்த மருத்துவ மேற்படிப்பு மாணவி ஒருவர், மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சிணை கேட்டதால் தற்கொலை செய்துகொண்டது வேதனையானது. இவ்வளவுக்கும் இது காதல் திருமணமாம்.
- விலை பொருள் அல்ல பெண்: இரண்டு மனிதர்களுக்கான இணைவைச் சமூகக் கொண்டாட்டாமாக்கி அதை ஓர் ஊர்த் திருவிழா கோலமாக்கி வீதி முழுவதும் தோரணங்கள், அறுசுவை உணவு வகைகள், விருந்துகள், வண்ண வண்ண விளக்குகள், மேள தாளங்கள், பேனர்கள் போன்றவை வீதி முழுவதும் நிரம்பி வழியும். சில வீடுகளின் கல்யாணக் களிகளில் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டுவிடும். அடிப்படையில் அன்பை மட்டுமே மையமாகக் கொண்ட திருமணங்கள் எல்லாம் கொடுக்கல் வாங்கல் என்கிற கெளரவத்தின் அடிப்படையில் ஒருவருக்கு இன்னொருவர் போட்டி போட்டுத் தொகைகளைப் பேசுகிறார்கள், கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள்.
- பெரும்பாலான வீடுகளில் பெண் வீட்டில் கொடுக்கும் தொகையிலிருந்தே முப்பது நாற்பது பவுனுக்குத் தாலிமாலை செய்கிறான் மணமகன். அதைத்தான் புனிதமென அர்ச்சித்துப் பெண்ணின் கழுத்தில் பூட்டுகிறான். தன் அப்பனோ, சகோதரனோ, முப்பாட்டானோ ரத்தம் சிந்தி சம்பாதித்த பணத்தில் வாங்கிய தாலிமாலையில் கணவனின் அன்பை நம்புகிறாள், தேடுகிறாள் பெண்.
- கல்யாணம் இயல்பிலே மிகவும் நல்லது. இரு மனங்கள் சங்கமிக்கும் அழகான உறவு அது. அங்கே பணமோ கெளரவமோ உயர்ந்தவன் தாழ்ந்தவனோ அழகோ அசிங்கமோ முக்கியமில்லை. அன்பு மட்டுமே முக்கியம். ஆனால், இதன் தன்மைகளையும் அர்த்தங்களையும் வெறும் வியாபார நோக்கில் வளர்த்துவிட்டார்கள். இருப்பவர்கள் கொடுக்கும்போதெல்லாம் இல்லாதவர்கள் இழிவுபட்டு வீட்டுக்கு வீடு முதிர் கன்னிகளும், முதிர் ஆண்களும் பெருகிக்கொண்டே வருகிறார்கள். ஒரு வகையில் இப்போதெல்லாம் இத்தகு தொகைகளுக்கு மத்தியில் தன்னை ஒரு விலை பொருளாக நிறுத்தத் தயங்கும் பல பெண்கள் வேலை என்கிற துணைவனை ஏற்றுக்கொண்டு சொந்தமாக வாழத் தொடங்கிவிட்டார்கள்.
- கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்கிற சட்டம் இருந்தும் எல்லாரும் வரதட்சிணையைக் கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள். இல்லறத்துக்கான அடிப்படை அன்பு மட்டும் ஆதரவின்றிக் கிடக்கிறது!
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 12 – 2023)