TNPSC Thervupettagam

திறமையின் ஆண் விகுதி

October 6 , 2024 110 days 122 0

திறமையின் ஆண் விகுதி

  • சந்தியாவுக்கு வேலை கிடைத்து சரியாக மூன்று மாதங்களில் அவள் நன்றாக வேலை செய்த காரணத்தை முன்வைத்து ஒரு பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், அவளுடன் வேலை பார்க்கும் சில ஆண்களுக்கு அது பொறாமையை ஏற்படுத்தியது. அவள் மேலதிகாரியுடன் ஒரு நாள் மட்டும் டூர் போய் வந்ததாக ஒரு கதையைக் கிளப்பிவிட்டார்கள். அந்த நேரம் பார்த்து அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருந்த குடும்பத்தாரின் நண்பர் சந்தியா வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவளைப் பற்றி விசாரித்தார். இந்த டூர் விஷயம் அவர் காதில் விழ, அந்த வரன் அப்படியே கழிந்துவிட்டது.

வதந்தியால் தொலைந்த வேலை

  • யாரோ சொன்னார்கள் என்பதால் சந்தியாவின் நடத்தை மீது அந்த மாப்பிள்ளைக்கு நம்பிக்கை போய் திருமணம் நின்றுவிட்டது; அவ்வளவு தானே? ஆனால், அதையும் ஊதி அந்த அலுவலகத்தில் வதந்தியாக உலாவரச் செய்தார்கள். அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் சந்தியாவின் காதுகளில் இந்தச் செய்தி வந்து விழுந்தது. அவளால் அதைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. எதிர்வினை ஆற்றவும் இயலவில்லை. மேலதிகாரியின் அறைக்கு அவள் தனியாக உள்ளே போனால் அவளை மொய்க்கும் கண்கள் வேட்டை நாய்களைப் போல அவளைப் பின் தொடர்ந்தன. ஒருகட்டத்தில் அவள் அந்த வேலையை ராஜினாமா செய்தாள். ஒரு மழை நாளில் எனக்கும் சந்தியாவுக்கும் நடுவில் இருந்த இரு தேநீர்க் கோப்பைகளைப் பார்த்தபடி உடைந்த குரலில் இந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்தாள்.
  • இந்த உலகத்தில் பெண்களின் திறமை நம்பிக்கைக்கு உரியதாக இருப்பதில்லை. அவள் தன் உடலை உபயோகித்துத்தான் தனக்கான இடத்தை அடைகிறாள் என்கிற பொதுப் புத்தியிலிருந்து கிளர்ந்த ஒரு நம்பிக்கை சுற்றியிருக்கும் காற்றின் ஒவ்வோர் அசைவிலும்கூட ஒளிந்திருக்கிறது.
  • இன்றைய தேதியில் பெரும்பாலும் பெண்களுக்கு அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கிறது. அந்த வேலையை அவர்கள் மிகுந்த பற்றுதலோடு செய்கிறார்கள். அதற்கான காரணமும் இருக்கிறது. பெண்களுக்குத் தங்களை நிரூபிக்க வேண்டிய ஒரு மனநிலை எப்போதும் இருந்துகொண்டே இருக்கி றது. குடும்பத்தில், வீட்டில், சமூகத்தில் என்று எல்லாத் தளங்களிலும் ஒரு பெண் இரண்டாம் பிரஜையாகவே இருக்கிறாள். எனவே, தன்னாலும் யோசிக்க முடியும், தன்னாலும் தேர்ந்தெடுக்க முடியும் என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவள் வாழ்நாள் முழுவதும் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவக்னளுக்கு இருக்கிறது

குடும்பத்தின் அங்கீகாரம்

  • சில வீடுகளில் சில அம்மாக்கள் அடுத்த நாள் சமையல் குறித்து அவ்வளவு போராடிக் கொண்டிருப் பார்கள். அவர்கள் தங்களுடைய சமையல் திறனை, வீட்டை நிர்வகிக்கும் திறனைத் தங்கள் குடும்பத்திடம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தின் வெளிப்பாடுதான் இந்த மெனக்கெடல். கைவசம் இருக்கும் பொருள்களை வைத்துச் சமைப்போம் என்கிற மனநிலை பெரும்பாலும் பெண் களிடம் இருப்பதில்லை. அதற்குக் காரணம் தாங்கள் செய்யும் எதிலும் தேர்ச்சி உடையவர்களாக அந்தக் குடும்பம் அங்கீகரிக்க வேண்டும் என்கிற ஒரு கட்டாயம் அவர்கள் மனதை ஆட்கொண்டிருக்கின்றது. இந்த மனநிலையை நாம் அவமானப் படுத்தியோ நிராகரித்தோ கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், இந்த மனநிலை தான் இந்தச் சமூகத்தில் ஒரு பெண் மீது பிம்பமாகப் படிந்திருக்கிறது. கடந்து சென்றுவிட்டால் நாம் ஏற்கெனவே இருக்கக்கூடிய பிழைகளைத் திருத்திக் கொள்ளாதவர்களாக இருந்து விடுவோம்

யாருக்கும் நிரூபிக்க வேண்டாம்

  • வடநாட்டுக்குச் சென்றிருந்தபோது நான் சந்தித்த ஒரு பெண் ஹூமாஷினி. அவள் 16 வயதில் வீட்டை விட்டு ஒருவனுடன் சென்றாள். அவனது துன்புறுத்தல் தாங்காமல் மீண்டும் பிறந்த வீட்டுக்கு வந்தபோது அவர்களும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஒரு தள்ளு வண்டிக் கடை போட்டுப் பிழைத்துக் கொண்டிருந்தாள். இரவு கடையைச் சாத்திவிட்டு அவள் பலருடன் தொடர்பில் இருப்பதாக அந்தத் தெருவெங்கும் பேச்சு என்று என்னிடம் சொன்னவளின் கண்களில் ஒரு துளி கண்ணீர்கூட இல்லை. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. அவள் கைகளைப் பற்றிக்கொண்டபோது அவள் அதை உறுதியாகப் பற்றிக் கொண்டு, “நம்ம வாழ்க்கையை, நம்ம பிரச்சினையை வேற யார் புரிஞ்சுக்க முடியும்? புரிஞ்சுக்காதவங்க ஆயிரம் பேசுவாங்க. ஆனா ஒண்ணு... மாசா மாசம் நாம படுற அவதியும் கஷ்டமும்கூட அவங்களுக்குப் புரியாது. அவங்களுக்குப் புள்ளை பொறந்தாகூட அது சந்தோஷம் மட்டும்தான். பொண் டாட்டியோட உடம்பு வலி எல்லாமே அதுல சம்பந்தப்பட்டிருக்குன்னு அவங்களுக்குத் தெரியாது. நான் யாரைப் பத்திக்கா கவலைப்படணும்? என்னைப் பத்தி மட்டும்தான் கவலைப் படணும். அப்பதான் வாழ முடியும். அது எனக்கு நல்லா தெரியும்” என்று சொன்னாள். அந்தத் தெளிவு எனக்கு பிரமிப்பூட்டியது. மிகவும் படித்த பெண்களுக்குக்கூட இந்தத் தெளிவு இல்லாமல் இருப்பதற்குக் காரணமான சமூக அழுத்தங்கள் பற்றி அந்த இரவு நான் கண்விழித்து யோசித்துக்கொண்டிருந்தேன். தினம் தினம் உடலாலும் மனதாலும் புண்பட்டு வாழும் வாழ்க்கை ஒரு பெண்ணுக்கு அல்லது ஓர் ஆணுக்கு என்ன சந்தோஷத்தைத் தந்துவிட முடியும்? அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஒரு திருமணம் ஏற்படுத்தும் எனில் அந்தத் திருமணத்திற்கான அர்த்தம் என்ன?
  • பெண் பார்க்கும் படலத்தில் காபி கொண்டு வந்து தரும் அந்த ஐந்து நிமிடங்களில் ஒரு வாழ்க்கையின் நீட்சியை எப்படித் தீர்மானிக்க முடியும்? இப்போது அது காபியிலிருந்து ஜூஸாக மாறியிருக்கிறது. பெண் பார்க்குமிடம் வீட்டிலிருந்து ஹோட்டலாக மாறி யிருக்கிறது. ஆனால், அதன் உள் அர்த்தமும் தாத்பரியமும் மாறவே இல்லை என்பதுதான் பேருண்மை.
  • இன்றைய தேதியில் பழமைவாதம் என்பது நவீனப்படுத்தப்பட்டிருக்கிறது அவ்வளவே. அதற்கு மேல் ஒரு பெண்ணை மரியாதையுடனும் மதிப்புட னும் கண்ணியத்துடனும் பார்க்கும் - பேசும் வழக்கமெல்லாம் இங்கு புழக்கத்தில் இல்லை. அப்படித்தான் எங்களைப் பார்க்க வேண்டும் என்று நாம் அவர்களை வற்புறுத்த முடியாது. அவர்கள் நமது உலகத்தில் இல்லை என்பது போல அவர்களைப் புறக்கணிப்பதே அவர்களுக்குக் கொடுக்கப்படும் மிகச் சிறந்த தண்டனை. நம் வாழ்வை, உணர்வை, உடலை நாம் புரிந்து கொள்வோம். அது மட்டுமே போதும். பெண்ணின் வாழ்வுக்கும் திறமைக்கும் பாலின அடையாளத்தைப் புகுத்துவதை வன்மையாக எதிர்ப்போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories