TNPSC Thervupettagam

தீ விபத்துகள் இனியும் தொடரக் கூடாது!

December 17 , 2024 32 days 100 0

தீ விபத்துகள் இனியும் தொடரக் கூடாது!

  • திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஆறு பேரின் உயிரைப் பறித்த தீ விபத்து, செயற்கைப் பேரிடர்களைத் தவிர்ப்பதிலும் எதிர்கொள்வதிலும் நம்மிடையே உள்ள பற்றாக்குறைகளை மிகுந்த வலியோடு உணர்த்தியிருக்கிறது. எலும்புமுறிவுக்குச் சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவமனை இருபது ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல்லில் இயங்கிவருகிறது.
  • மருத்துவமனைகளின் பொதுவான கட்டமைப்பின்படி, தரைத்தளத்தில் நிர்வாக வேலைகளும் சோதனைப் பணிகளும், மூன்று மேல் தளங்களில் சிகிச்சையும் இம்மருத்துவமனையில் நடைபெறுகின்றன. இந்நிலையில், டிசம்பர் 12 இரவில் தரைத்தளத்தில் கட்டணம் செலுத்துவதற்கான பிரிவில் மின்கசிவு ஏற்பட்டதாகவும் யுபிஎஸ் பேட்டரி வெடித்துத் தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
  • அப்போது ஏறக்குறைய 42 உள்நோயாளிகள் உள்பட நூறு பேர் மருத்துவமனையில் இருந்துள்ளனர். நுழைவாயிலை வழிமறிப்பதுபோல தீ எரிந்தது. மேல் தளங்களுக்குப் புகை வேகமாகப் பரவியது. மருத்துவர்களும் பிற ஊழியர்களும் நோயாளிகளையும் உடனிருப்பாளர்களையும் அவசரக் கால வழி மூலம் பாதுகாப்பாக வெளியேற்றினர். தீயணைப்புப் படையோடு, மழைவெள்ளத் தடுப்புப் பணிக்காகத் தங்கியிருந்த பேரிடர் மீட்புக் குழுவினரும் சேர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சாலையில் நின்றிருந்த மக்களும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தினர்.
  • எனினும், தீ விபத்தின்போது பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் மின் இணைப்பைத் துண்டிக்கும் நடவடிக்கை, இங்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. நோயாளிகளைக் காண வந்தவர்களில் எட்டுப் பேர், மேல் தளங்களிலிருந்து விரைவாக இறங்க மின்தூக்கியைப் பயன்படுத்தியதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இடையே நின்றுவிட்ட மின்தூக்கியில் அவர்கள் சிக்கிக்கொண்டதும் உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்படாதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. மின்தூக்கிக்கு உள்ளேயும் புகை பரவியதில் மூச்சுத் திணறி அவர்களில் ஆறு பேர் இறந்துள்ளனர். இவர்களில் ஆறு வயதுச் சிறுமி ஒருவரும் அடக்கம்.
  • உயிரைக் காக்கும் மருத்துவமனையிலேயே இப்படியொரு விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஏற்கெனவே, செப்டம்பரில் மதுரையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் குளிர்பதனப் பெட்டி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து மூன்று பெண்களின் உயிரைப் பலி வாங்கியது. திரையரங்கம், திருமண மண்டபம் போன்ற பெருங்கட்டுமானங்களைப் போல, சிறு, நடுத்தர மருத்துவமனைகள், பல்பொருள் அங்காடிகள், ஆடை விற்பனையகங்கள் போன்றவையும் தீயணைப்புத் தடுப்பு வசதிகளுடன் இயங்குகின்றனவா என்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.
  • 60 சதவீத தீ விபத்துகளுக்கு மின்கசிவுதான் காரணம் எனக் கூறப்படும் நிலையில், தீயணைப்புத் துறை மின்சார வாரியத்துடன் இணைந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இத்தகைய இடங்களில் சோதனை மேற்கொள்ள வேண்டும். இயல்பான சூழலில் சிறிதளவு வெப்பமோ புகையோ ஏற்பட்டால் கூட அலாரம் அடித்துத் தெரிவிக்கும் எம்சிபி (Manual Call Point) உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்ப வசதிகளைத் தங்கள் இடங்களில் ஏற்படுத்த தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
  • தீப்பிடித்தல், மக்கள் நெரிசல் போன்றவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி, ஊழியர்களுக்குக் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் மின்தூக்கியை இயக்கத் தனி ஊழியர் இருந்தாரா என்கிற கேள்வியும் சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ளது.
  • தீயணைப்புத் துறை, காவல் துறை ஆகியவற்றின் விசாரணை முடிவுகள் விபத்துக்கான முழுப் பின்னணியையும் வெளிக்கொண்டுவர வேண்டும். மக்கள் கூடுகிற அரசு/ தனியார் கட்டிடங்களில் தீயணைப்புக் கருவி வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே வைக்கப்படும் நிலை இனியும் தொடரக் கூடாது. இனி ஒரு தீ விபத்து ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories