- பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குத்தீப்பெட்டி உற்பத்திசெய்து அனுப்பிக் கொண்டிருந்த ஸ்வீடன் நாட்டில் முதலாம் உலகப் போரின் விளைவாக பெருமளவில் தொழில் முடக்கம் ஏற்பட்டது. போரின் காரணமாக, ஸ்வீடன் நாட்டினர் இந்தியாவுக்கு வந்து பல பகுதிகளில் விம்கோ (Western India Matches Company Limited) தொழிற்சாலைகளைத் தொடங்கினர். இந்த வேளையில் சிவகாசியைச் சேர்ந்த தொழில்முனைவோரான அய்ய நாடார், கொல்கத்தா சென்று தீப்பெட்டித் தொழில்நுட்பத்தைக் கற்றுவந்து சிவகாசியில் அத்தொழிலை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பட்டாசு உற்பத்தித் தொழிலும் அறிமுகமாகி தொழில் உற்பத்தி நகரமாக சிவகாசி உருவெடுத்தது.
ஓவியப் பரிணாமத்தில் ஒரு மைல்கல்
- தீப்பெட்டித் தொழில் வந்த பிறகு வணிக வளர்ச்சிக்காக விளம்பர வில்லைகள் (லேபிள்) தேவைப்பட்டன. இவற்றை அச்சடிப்பதற்காக பிரத்யேகமாக ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டது. அச்சு இயந்திரத்தில் இந்த வில்லைகளை அச்சடித்த பிறகு, அவற்றை அச்சிட்ட நேரம் போக, மீதமிருக்கும் நேரத்தில் இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்குவதற்காகக் காலண்டர்களை அச்சடிக்க ஆரம்பித்தனர்.
- இந்தக் காலண்டர்களுக்கான கருப்பொருளான வண்ண மயமான கடவுளர் படங்களை வரைந்து கொடுத்தவர்கள் கோவில்பட்டியை மையமாகக் கொண்டு இயங்கிய கொண்டைய ராஜு தலைமையிலான ஓவியர்கள். சிவகாசி யில் இயங்கிய வண்ண அச்சுக்கூடங்களும் கோவில்பட்டியில் ஓவியர் கொண்டைய ராஜு தலைமையிலான ஓவியர்களின் செயல்பாடுகளும் இணைந்த ஒரு தற்செயல் நிகழ்வு, இந்திய ஓவிய வரலாற்றின் பரிணாமத்தில் ஒரு மைல்கல். அவர் உருவாக்கிய கடவுள் ஓவியங்களுக்கு இந்த வண்ண அச்சுக்கூடங்கள் சிறப்பான அங்கீகாரத்தை உருவாக்கித் தந்தன.
ஓவியத்தில் உயிர்பெற்ற தெய்வங்கள்
- கொண்டைய ராஜு தலைமையிலான ஓவியர்கள் ரவிவர்மா பாணியில் நிலவியல் காட்சிகளைப் பின்னணியில் வரைந்தாலும், நாடகக் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட இந்தக் கலைஞர்களின் ஓவியங்களில் கட்டிடக் கலை, நுணுக்கமான மேடை அமைப்பு, வேலைப்பாடுள்ள தூண்கள் ஆகியவையும் பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக இடம்பெற்றன.
- கொண்டைய ராஜு குழுவினரின் ஓவியங்களில் உள்ளூர் வட்டார தெய்வங்கள் உருவம் பெற்று உயிர்ப்புடன் இருந்தன. இந்த உயிர்ப்பான கடவுள் படங்கள் சாதாரண மக்களின் வீட்டுப் பூஜை அறைகளில் மாட்டி வழிபடக்கூடிய முக்கிய இடத்தைப் பெற்றன.வட்டாரப் பெண் தெய்வங்களான சங்கரன்கோவில் கோமதி, கன்னியாகுமரி பகவதி, நெல்லை காந்திமதி, சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன் போன்ற கடவுளர்களின் வண்ண ஓவியங்கள் வீட்டுப் பூஜையறையை அலங்கரிக்கத் தொடங்கின.
- ஆரம்பக் கட்டங்களில் முருகர் ஓவியங்கள் முதன்மையாக இடம்பெற்றன. பாலமுருகன், பாலகிருஷ்ணன் ஓவியங்களுக்கு ஓவியர்கள் தங்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகளை ‘மாட‘லாகப் பயன்படுத்தினர். ஜெர்மன் நடிகை தமிழ் தெய்வத்துக்கான ‘மாட’லாக இடம்பெற்ற சுவாரசியமும் நடந்தது.
- கொண்டைய ராஜு ஓவியக் குழுவில் இடம்பெற்ற ஒவ்வொருவரும் தனித்திறமை பெற்றிருந்தனர். ஓவியர்மீனாட்சிசுந்தரம் ஸ்டுடியோவுக்கான பின்னணி வடிவமைப்பை (‘பேக்டிராப் டிசைன்’) வரைவதில் புகழ்பெற்றார். இவர் வரைந்த ஸ்டுடியோ பேக்டிராப் திரைச்சீலைகள் இந்தியா முழுமையும் ஸ்டுடியோக்களில் பரவலாக இடம்பெற்றன. ஓவியர்கள் டி.எஸ்.சுப்பையா, எம்.ராமலிங்கம் போன்றோர் காலண்டர் ஓவியங்களை வரைந்து தனித்துவம் பெற்றார்கள். ஓவியர் அருணாசலம் ஒளிப்படக் கலையில் தேர்ச்சி பெற்றார்.
ஓவியப் படைப்பில் புதுமை
- குழுவின் திறன்களாகப் பார்க்கப்பட்ட கலை முயற்சிகள், காலண்டர் ஓவியங்களின் வருகைக்குப் பின்பு தனிப்பட்ட ஒருவருடைய திறனை அடையாளம் காணும் விதமான அரிய மாற்றம் நிகழ்ந்தது. ரவிவர்மாவுக்குப் பிறகு கொண்டைய ராஜு என்று கையொப்பமிட்ட ஓவியங்கள் ஓவிய உலகில் தனிக்கவனம் பெற்றன.
- வளரும் அச்சுக்கலைப் போட்டிகளை எதிர்கொள்ளும் விதமாக கோவில்பட்டி ஓவியக் கலைஞர்கள் கேன்வாஸில் வரையப் பட்ட தைல வண்ணம், போஸ்டர் வண்ணம், நீர் வண்ண ஓவியங்களைத் தொடர்ந்து வரைந்து, தங்களைத் தகவமைத்துக்கொண்டனர். ஏர் பிரஷ் அறிமுகமும், இவர்களது ஓவியப் படைப்பில் புதுமையை நிகழ்த்தியது.
- காலண்டர் ஓவியங்களில் தீவிரமாக இயங்கிவந்த கொண்டைய ராஜு தலைமையிலான ஓவியர்களில் எம்.ராமலிங்கம் வரைந்த ஓவியங்களுக்குக் கூடுதல் மதிப்பு உண்டானது. இவரது ஓவியங்கள் வடக்கு நோக்கிச் சென்றதன் காரணமாக, சிவகாசி காலண்டர்களுக்குத் தனித்துவமான பெயர் ஏற்பட்டது. எம்.ராமலிங்கம் தமது வாழ்நாளில் 30 ஆண்டுகளில் சுமார் 1,400க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.
- அடுத்ததாக டி.எஸ்.சுப்பையா 30 ஆண்டுகளில் 1,200 ஓவியங்கள் வரைந்துள்ளார். டி.எஸ்.சுப்பையாவின் ஓவியங்களில் அணிகலன்கள் மிக நுட்பமாக வரையப்பட்டிருக்கும். இந்த இரண்டு ஓவியர்களின் காலண்டர் பிரின்ட்டுகள் 13.5 கோடிக்கும் அதிகமாக காலண்டர்கள், புத்தக அட்டைகள், அழைப்பிதழ்கள், லேபிள்கள், சுவரொட்டிகள் போன்ற பல வடிவங்களில் அச்சாகி, இந்தியா மட்டுமின்றி இந்தியர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ அங்கெல்லாம் பிரபலமடைந்தன.
தொடரும் ஓவிய மரபு
- மக்கள் மனதில் வெகுஜனக் கடவுள் உருவங்கள், கொண்டைய ராஜு குழுவினரின் ஓவியங்கள் வழியாக நீங்கா இடத்தைப் பிடித்திருக்கின்றன. கொண்டைய ராஜு ஓவியர் குழுவில் இடம்பெற்ற கடைசி ஓவியர் எம்.சீனிவாசன், மரபு வழியில் இப்போதும் ஓவியங்கள் வரைந்துகொண்டிருக்கிறார். ஓவியர் கொண்டைய ராஜு குழுவினரால் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு, தற்போது சென்னை ஆழ்வார் திருநகரில்அமைந்துள்ள சித்ராலயம் அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
- நவம்பர் 7: ஓவியர் கொண்டைய ராஜு 125ஆம் பிறந்தநாள்
நன்றி:இந்து தமிழ் திசை (07 – 11 - 2023)