TNPSC Thervupettagam

தீர்வை வழங்கிய தீர்ப்பு!| அயோத்தி தீர்ப்பு

November 11 , 2019 1894 days 1149 0
  • அடுத்த சில நாள்களில் பதவி ஓய்வு பெற இருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீண்டகாலப் பிரச்னையான அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலான தீர்ப்பை வழங்கி நீதித் துறை வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்.
  • 19-ஆம் நூற்றாண்டின் கடைசியில் உருவான பாபர் மசூதி, ராமஜென்ம பூமி விவகாரம் நூற்றாண்டு கால இடைவெளியைத் தாண்டி நீண்டு நின்றதற்கு அரசியல் ஒரு மிக முக்கியமான காரணம்.
  • ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒருசேர திருப்திப்படுத்தும் வகையில் தீர்ப்பை வழங்கியிருப்பதற்காக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, அசோக் பூஷண், டி.ஒய். சந்திரசூட், எஸ். அப்துல் நஸீர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வை எத்தனை பாராட்டினாலும் தகும்.

ஒருமனதான முடிவு

  • 1,045 பக்கங்கள், 805 பத்திகள், மூன்று லட்சத்து மூவாயிரம் வார்த்தைகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை அடிக்கோடிட்டு ஆய்வு செய்தபோது பளிச்சிட்டது இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தியிருக்கும் நீதிபதிகளின் சாதுர்யம்.
  • அதைவிட முக்கியமானது அவர்களுக்குள் காணப்பட்ட கருத்தொற்றுமை.
  • அரசியல் சாசனப் பிரச்னைகளில் தீர்ப்பு வழங்கும் உச்சநீதிமன்ற அமர்வுகளில் ஒருமனதாக முடிவை எட்டும் தீர்ப்புகள் மிகமிகக் குறைவு.
  • சாதாரணமான வழக்குகளில்கூட 4-1 அல்லது 3-2 என்று ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் பிளவுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன.
  • இந்தத் தீர்ப்புக்கு வலிமை சேர்த்திருப்பது ஐந்து பேர் அமர்வின் ஒருமனதான முடிவு என்பதுதான்.
  • அரசும் சரி, எதிர்க்கட்சியும் சரி ஒருமனதாக முடிவெடுத்தாலும்கூட, விமர்சனத்துக்கு இடமுண்டு. அயோத்தி போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்னையில் தீர்மானமான முடிவு என்பது உச்சநீதிமன்றத்தின் ஒருமித்த குரலுடனான தீர்ப்பாகத்தான் இருக்க முடியும்.

வழக்கு

  • குறிப்பிட்ட இடத்திலுள்ள ராம் சபூத்ராவில் வெவ்வேறு தரப்பினர் தொழுகை நடத்தவும், பூஜைகள் நடத்தவும் உரிமை கோரி 1885-இல் வழக்கு தொடுக்கப்பட்டது (பத்தி 446).
  • பல்வேறு சாட்சிகளின் அடிப்படையில் ஹிந்துக்கள் ராம் சபூத்ரா என்கிற வெளிப்பிராகாரத்தில் தொடர்ந்து வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது (பத்தி 795 - 801).
  • 1857-க்கு முன்பாகவே வெளிப்பிராகாரத்தை ஹிந்துக்கள் பூஜைக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
  • முஸ்லிம்கள் 1600 முதல் 1949 வரை அவ்வப்போது தொழுகை நடத்தியிருந்தாலும்கூட, உள்பிராகாரம் அவர்களுடைய தனிக் கட்டுப்பாட்டில் இருந்தது நிரூபிக்கப்படவில்லை.
  • 1949-இல் அவர்கள் வழிபாடு செய்வது சட்டவிரோதமாகத் தடுக்கப்பட்டது. இவையெல்லாம் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் விவரங்கள்.

தீர்ப்பு

  • சட்டத்துக்கு விரோதமாக 1949-இல் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் உரிமை தடுக்கப்பட்டதற்கு நியாயம் வழங்குவதற்காக உச்சநீதிமன்றம் அரசியல் சாசன சட்டப்பிரிவு 142-ன் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அயோத்தியில் மசூதி அமைப்பதற்காக ஐந்து ஏக்கர் இடம் இன்னோர் இடத்தில் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.

சாட்சிகள்

  • இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிக்கையைத் தீர ஆய்வு செய்து அதனடிப்படையில், தகர்க்கப்பட்ட மசூதிக் கட்டடத்தின் கீழ் ஹிந்து கலாசாரத்துக்கும் மதத்துக்கும் தொடர்புடைய அம்சங்கள் உள்ள கட்டடங்கள் இருந்ததை நீதிபதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள் (பத்தி 508-512).
  • அதனடிப்படையில்தான் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதை அனுமதித்திருக்கிறார்கள்.
  • அந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என ஹிந்துக்கள் நம்புகிறார்கள் (பத்தி 556-558). ஆனால், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
  • மேலும், பாபர் மசூதி கட்டடம் இடிக்கப்பட்டது தவறு, சட்ட விரோதமானது என்பதை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளாமல் இல்லை.
  • அதனால், 1949-இல் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கும், பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்கும் பரிகாரமாகத்தான் மசூதி கட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்படுகிறது என்கிறது தீர்ப்பு.

தீர்ப்பில் உள்ள சூட்சுமம்

  • இந்தத் தீர்ப்பில் ஒரு மிகப் பெரிய சூட்சுமம் அடங்கியிருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், வழக்கு தொடர்ந்த முஸ்லிம் அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதற்குப் பதிலாக, திருப்தி அடையாவிட்டாலும் ஏற்றுக்கொண்டிருப்பதற்கு, பாபர் மசூதி விவகாரத்தில் முஸ்லிம்களின் உண்மையான அச்சம் என்ன என்பதை நீதிபதிகள் புரிந்துகொண்டிருப்பது தெரிகிறது.
  • பொதுவாக விக்கிரக வழிபாடு செய்யும் இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை செய்வதில்லை.
  • ஆனால், இந்தியாவின் மீது படையெடுத்த கஜினி, கோரி தொடங்கி இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அவர்கள் பார்வையில் பட்ட கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள் என்பது வரலாறு.
  • அந்தக் கோயில்களிலிருந்து தூண்களையும், கற்களையும் பயன்படுத்தி மசூதிகள் எழுப்பியிருக்கிறார்கள் என்பது குறித்த ஆதாரப் பதிவுகள் இருக்கின்றன.
  • அயோத்தியிலுள்ள பாபர் மசூதி, தரைமட்டமாக்கப்பட்ட கோயில் மீது எழுப்பப்பட்டதா அல்லது சிதைக்கப்பட்ட கோயிலிலிருந்து பல்வேறு கற்களையும் தூண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதா என்பதற்கான முடிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
  • 1949-இல் ராமர் விக்கிரகத்தை மசூதிக்குள் வைத்து ஹிந்துக்கள் வழிபட்டதைத் தொடர்ந்து அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது.
  • அப்படி இருந்தும் பாபர் மசூதிக்கு முஸ்லிம்கள் தீவிரமாக உரிமை கொண்டாடுவதற்குக் காரணம், அந்த இடம் தங்களுக்கு வேண்டும் என்பதற்காக அல்ல, அயோத்தி போலவே மதுராவில் கிருஷ்ணஜன்ம பூமியிலும், வாராணசியில் காசிவிஸ்வநாதர் ஆலயத்திலும் (வாபி மஸ்ஜித்) கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது.
  • பாபர் மசூதியை விட்டுக் கொடுத்தால் இதேபோல இன்னும் பல இடங்களில் ஹிந்து அமைப்புகள் இந்தியாவிலுள்ள பல்வேறு இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிமை கோரக் கூடும் என்கிற அச்சம்தான் அயோத்தி பிரச்னையில் அவர்களது பிடிவாதத்திற்குக் காரணம்.
  • அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதித்திருக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, முஸ்லிம்களின் அச்சத்தை அகற்றும்விதமாக இன்னொன்றையும் கூறியிருக்கிறது.
  • 1947-க்கு முற்பட்ட ஏனைய வழிபாட்டுத் தலங்கள் குறித்து இனிமேல் யாரும் உரிமை கோர முடியாது என்பதுதான் அது.
  • ஹிந்துக்களின் உணர்வையும் மதித்து, முஸ்லிம்களின் அச்சத்தையும் அகற்றியிருக்கும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வை எத்தனை பாராட்டினாலும் தகும்.

நன்றி : தினமணி (11-11-2019)

***********************

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories