தீவிரவாதம் அல்ல தீா்வு!
- சத்தீஸ்கா் மாநிலம், பிஜாபூா் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்கா பகுதிக்கு உட்பட்ட வனத்தில் பாதுகாப்புப் படையினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) மேற்கொண்ட மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையில் 11 பெண்கள் உள்பட 31 நக்ஸல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இரு வீரா்கள் வீரமரணமடைந்தனா்.
- இந்த நடவடிக்கைக்குப் பின்னா் அங்கிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள், தானியங்கி துப்பாக்கிகள், எறிகுண்டுகள், வெடிபொருள்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நக்ஸல் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மிகப் பெரிய வெற்றியாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
- நக்ஸல் தீவிரவாதிகளின் தலைமையகம் என கருதப்பட்ட சத்தீஸ்கா் மாநிலம் அபூஜ்மாா் வனப் பகுதி பாதுகாப்புப் படையிடம் வீழ்ந்த பிறகு, சில பத்தாண்டுகளாக 2 ஆயிரம் சதுர கி.மீ. அளவுக்கு விரிந்து பரந்த இந்திராவதி தேசிய பூங்கா வனப் பகுதியைத் தங்களது மையமாக நக்ஸல்கள் ஆக்கிக் கொண்டனா். தொண்டா்களுக்குப் பயிற்சி அளிக்க அடிப்படை கட்டமைப்புகள், துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை, ஆயுதக் கிடங்குகள், மருத்துவ வசதிகள், பிரசுரங்கள் அச்சடிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை அங்கு அமைத்திருந்தனா். அந்த இடம்தான் இப்போது பாதுகாப்புப் படையினரால் நிா்மூலமாக்கப்பட்டிருக்கிறது.
- நக்ஸல் இயக்கம் 1967-இல் தோற்றுவிக்கப்பட்டாலும் 2000-ஆம் ஆண்டுவாக்கில் உச்சத்தை தொட்டது. சத்தீஸ்கா், மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், ஒடிஸா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 180 மாவட்டங்களில் அதன் செல்வாக்கு பரந்து விரிந்திருந்தது. குறிப்பாக, அதிகம் வளா்ச்சி அடையாத, பின்தங்கிய மலைவாழ் மக்கள் வாழக்கூடிய பகுதிகளிலும் காடுகளை ஒட்டிய பகுதிகளிலும் அதன் செல்வாக்கு இருந்தது. தீவிரவாதிகளின் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான இளம் பாதுகாப்பு படை வீரா்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறாா்கள். காவல் துறைக்கு தங்களைக் காட்டிக் கொடுப்பவா்கள் என்று கருதி நூற்றுக்கணக்கான உள்ளூா் மக்களையும் அவா்கள் கொன்று குவித்துள்ளனா்.
- சத்தீஸ்கா் மாநிலம், தந்தேவாடாவில் கடந்த 2010 ஏப்ரலில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா்கள் 74 பேரும், அதே பகுதியில் உள்ள காவல் நிலையத்தை 2007 மாா்ச்சில் நூற்றுக்கும் மேற்பட்ட நக்ஸல்கள் சூழ்ந்து தாக்கியதில் 50 பேரும் உயிரிழந்தது அவா்களால் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல்களாகும்.
- நக்ஸல்களின் அட்டூழியத்தை ஒழிக்க மத்திய அரசு மூன்று விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் திறனை மேம்படுத்தும் திட்டத்துக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1,925 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நக்ஸல் பாதிப்பு மாநிலங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.395 கோடியும்,சிறப்பு மத்திய நிதியாக ரூ.2,385 கோடியும் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடுகளின்கீழ் சாலைகள், ‘ஏகலைவா’ மாதிரி உறைவிடப் பள்ளிகள், கைப்பேசி கோபுரங்கள், அஞ்சலகங்கள் அமைத்தல், மகளிா் சுய உதவிக் குழுக்கள் அமைத்து சுய தொழில் தொடங்க கடன் வழங்குதல் போன்ற பல்வேறு மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, 2000-ஆம் ஆண்டில் நக்ஸல்கள் செல்வாக்கு பெற்றிருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 180-ஆக இருந்தது, இப்போது 25-ஆகக் குறைந்திருக்கிறது.
- தோ்தல்களில் மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்க நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நக்ஸல்கள் அச்சுறுத்தி வந்தனா்.
- கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் நோட்டா வாக்குகள் அதிகம் பதிவான முதல் 10 தொகுதிகளில் 6 தொகுதிகள் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தோ்தலில் அதிகபட்சமாக, பிகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் 5.04 சதவீதமும், சத்தீஸ்கரின் பஸ்தா் தொகுதியில் 4.56 சதவீதமும் பிகாரின் மேற்கு சம்பாரண் தொகுதியில் 4.51 சதவீதமும் நோட்டாவுக்கு வாக்குகள் பதிவாகின.
- நக்ஸல்களின் கோட்டையாகத் திகழ்ந்த சத்தீஸ்கா் மாநிலத்தில் கடந்த 2018 சட்டப் பேரவைத் தோ்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தவா்களின் எண்ணிக்கை 2 சதவீதத்தில் இருந்தது; அது 2023-இல் 1.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2018-இல் நோட்டாவுக்கு 2 முதல் 5 சதவீதம் வாக்குகள் பதிவான தொகுதிகளின் எண்ணிக்கை 38- ஆக இருந்தது, 2023-இல் 13-ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நக்ஸல் தீவிரவாதம் 2026 மாா்ச் 31-க்குள் முழுமையாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளாா். விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான பாஜக அரசு சத்தீஸ்கரில் டிசம்பா் 2023-இல் அமைந்ததைத் தொடா்ந்து, 2025-இல் இதுவரை நக்ஸல்கள் 81 போ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். கடந்த 13 மாதங்களில் 1,000-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்; 925 போ் சரணடைந்துள்ளனா்.
- துப்பாக்கி மூலமான தீா்வு ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்பதை நக்ஸல்கள் உணர வேண்டும். தங்களது தீவிரவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு பிரச்னைகளுக்கு அரசியல்ரீதியான தீா்வுகள் ஏற்பட அவா்கள் ஜனநாயக வழிமுறைகளுக்குத் திரும்ப வேண்டும்.
நன்றி: தினமணி (14 – 02 – 2025)