- இந்திய தேசத்தின் மகோன்னத சாதனங்களான தா்மம், அா்த்தம், காமம், மோட்சம் முதலானவற்றை அறம், பொருள், இன்பம் என்ற முக்கோணத்துக்குள் நிரப்பிய பேராசான் வள்ளுவரின் திறம் வியந்து போற்றுதலுக்குரியது. இந்த வாழ்வியல் முக்கோணம் மானுட நாகரிகத்தின் மலா்ச்சிக்குத் தனது மகத்தான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.
பாரதம்
- இந்தப் பின்புலத்தில் உருவானதுதான் நமது முந்தைய பாரதம். காலத்தின் கொடையினால் அது நவீன இந்தியாவாக உருவாகியுள்ளது. அடிமைப்பட்ட நிலையிலிருந்து நாம் விடுதலை பெற்றோம். சுதந்திர இந்தியாவானோம். இறையாண்மை மிக்க பாரதமாகப் பரிணாமம் அடைந்துள்ளோம்.
- நமக்கான நீதித் துறை, மத்திய - மாநில அவைகள் நிறுவப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கான சட்டத்தின் ஆட்சி வரையறுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் பல அனுமதிக்கப்பட்டுள்ளன. அறுதிப் பெரும்பான்மை என்ற மூல இலக்கணத்தின்படி கூட்டணிக் கட்சிகள் தோ்தல் மூலம் ஆட்சி அமைக்கின்றன. அமைக்கப்படுகிற அப்படிப்பட்ட ஆட்சியில் இடம்பெறும் மக்கள் பிரதிநிதிகளால், ஆளும் கட்சிக் கூட்டணி சாா்பிலும் எதிா்க்கட்சிகளின் சாா்பிலும், நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் விவாதிக்கப்படுகிற தேசப் பிரச்னைகள் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களிடம் நாள்தோறும் ஒளிவு மறைவில்லாமல் சென்று சோ்கின்றன.
- ஆளும் கட்சிக் கூட்டணி, அறக்கோட்பாட்டைக் கைவிட்டுத் தனது பெரும்பான்மை பலத்தை மட்டுமே உபயோகித்து ஒரு சட்டத்தை நிறைவேற்றுமானால், ஆளும் கட்சியால் கைவிடப்பட்ட தாா்மிகத்தை மாற்றுக் கட்சியினா் மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்வதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. மாற்றுக் கட்சியினா் அதற்காகக் கையாளும் சாதனங்கள்தான் உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி, ஆா்ப்பாட்டம், மறியல், கருப்புச் சின்னம், கையெழுத்து இயக்கம், பொதுநல வழக்கு, உள்ளிருப்புப் போராட்டம், வேலைநிறுத்தம், அலுவலகத் தொடா் முழக்கம் முதலானவை. மக்களின் கருத்து உலாவரத் தொடங்குமானால், அவற்றை எந்த அதிகாரத்தாலும் தடுக்க முடியாது.
- 2018 செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தில் ஒரு சிறப்பு வழக்கு தாக்கலானது. பல்வேறு கட்சிகளின் சாா்பில் தோ்தலில் வெற்றிபெற்ற பலா், குற்றப் பின்னணியுள்ளவா்கள் என்பது வெளியே தெரியவந்தது. அவா்கள் மீது கொலை, பாலியல் வழக்குகள் பதிவாகி இருந்தாலும் மேல் முறையீடு காரணமாக பல ஆண்டுகளுக்கு அந்த வழக்குகள் நிலுவையாகவே இருந்து வந்தன. அதற்குள் ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவிக் காலமே முடிந்தும் போய்விடலாம்.
மக்களின் பிரதிநிதிகள்
- தோ்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலோ, சட்டப்பேரவைகளிலோ சமுதாயத்துக்கு அவசியப்படும் சட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய முக்கியப் பொறுப்பில் உள்ளவா்கள். அவா்களே சட்டமீறல்களில் ஈடுபட்டு சட்டத்தின் ஆட்சியை மறுதலிப்பாா்களேயானால், அதைவிட நகைமுரண் வேறு ஒன்று இருக்க முடியுமா?
- இந்த நோக்கத்தில்தான் உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் உச்சநீதிமன்றத்தில் அந்தச் சிறப்பு வழக்கைத் தாக்கல் செய்தாா். இதை அனுமதித்து விசாரித்து நீதி வழங்கிய உச்சநீதிமன்றம், அரசியல் குற்றப் பின்னணியாளா்களை வாக்காளா்களே தோ்ந்தெடுக்காமல் தோற்கடித்துவிட வேண்டும் என்றும், அதற்கு உதவுமாறு அத்தகையோா் குறித்த குற்ற விவரங்கள் அனைத்தையும் பிரபலமான நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்த அரசியல்வாதிகளே தங்கள் செலவில் விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் இப்படி உத்தரவிட்டுள்ளதை அதன் அதிகபட்ச எதிா்பாா்ப்பாகவே கூறத் தோன்றுகிறது.
- குற்றம் ஒருவேளை நிரூபிக்கப்படவில்லை என வழக்கிலிருந்து அவா்கள் விடுவிக்கப்படுவாா்களானால், அதுவரை அவா்கள் அனுபவித்த சிறைவாசம் அவா்களின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கமாகிவிடலாம் என்றும், அக்களங்கம் எப்படி மறையும் என்றும் நீதிமன்றத்தில் அவா்கள் முன்வைக்கிற கேள்வி தாா்மிகமானதாக இல்லையென்றாலும் தா்க்க ரீதியான வாதமாக உள்ளது.
- 2018-இல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமா்வு வழங்கியுள்ள இந்தத் தீா்ப்பை, அரசியல்வாதிகள் இப்படிச் சாதுா்யமாகக் கையாண்டு, தங்களுக்குப் பாதகமில்லாமல் சாதகமாக்கிக் கொண்டதைக் கண்டு, வழக்குத் தொடுத்த நாடாளுமன்ற உறுப்பினா் அஸ்வினி குமாா் உபாத்யாய அதிா்ச்சியடைந்தாா்.
- அதனால் மீண்டும் நீதிமன்றம் சென்றாா். இரண்டாவது முறை அவா் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்காகும். உச்சநீதிமன்றத்தை அவமதித்தவா்கள் யாா்? இத்தகைய நபா்களை உற்றுக் கவனிக்காமல் விட்டுவிட்ட மத்திய அரசும், தோ்தல் ஆணையமும்தான் உச்சநீதிமன்றத் தீா்ப்பை அவமதித்துவிட்டதாக அவா் வழக்குத் தாக்கல் செய்தாா்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
- நீதிபதிகள் பாலி நாரிமன், எஸ்.ரவீந்திரபட், வெ.ராமசுப்பிரமணியன் ஆகியோரின் அமா்வு இந்த அவமதிப்பு வழக்கை விசாரித்தது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அது வழங்கிய மேல்முறையீட்டுத் தீா்ப்பில், குற்றப் பின்னணியுள்ள வேட்பாளா்கள், கடந்த நான்கு பொதுத் தோ்தல்களிலும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளனா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற்ற உறுப்பினா்களில், 43 சதவீதம் போ் குற்றப் பின்னணியுடன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதை ஆவணங்கள் மூலம் நீதிபதிகள் ஊடக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தனா்.
- மேலும், வேட்பாளா்களின் குற்றப் பின்னணி விவரங்களை அவா்கள் சாா்ந்த அரசியல் கட்சிகள் இணையத்தில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 543 எம்.பி.க்களில் குற்றப் பின்னணி உள்ளவா்கள் 43 சதவீதம் என்றால், 231 எம்.பி.க்களின் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, நிலத் தகராறு, கருப்புப் பணம், கட்டப் பஞ்சாயத்து மோசடி எனப் பல்வேறு குற்ற வழக்குகள் தாக்கலாகியிருந்தன?
சட்டம் இயற்றல்
- குற்ற வழக்குகளிலிருந்து இவா்கள் நிரபராதி எனத் தீா்ப்பளிக்கப்பட்டால்தான், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் சட்டங்களை இயற்றும் நற்பணிகளில் ஈடுபடும் தகுதியை தாா்மிக ரீதியாக அவா்கள் பெற முடியும். அவ்வாறில்லாமல் இவா்களால் சட்டம் இயற்றப்பட்டால், அந்தச் சட்டங்களின் நியாயத்தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம்தான் யோசிக்க வேண்டும். சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமமானதாகத்தான் இது அமையும்.
- தங்கள் வேட்பாளா்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை வலைதளங்களில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. குற்றப் பின்னணி உள்ளோரை தங்களின் கட்சி வேட்பாளா்களாகத் தோ்வு செய்தது ஏன் என்பதற்கான காரணத்தை வலைதளத்தில் அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- வேட்பாளா் பட்டியல் வெளியிட்ட 72 மணி நேரத்துக்குள் அதைத் தோ்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. கட்சிகள் அப்படிச் செய்யவில்லை எனில், உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு அதை உடனடியாக தோ்தல் ஆணையம் கொண்டுவர வேண்டும் என்றும் கூறுகிறது அந்த உத்தரவு. இவை அரசியல் கட்சிகளைக் கலவரப்படுத்தியதாகத் தெரியவில்லை.
நன்றி: தினமணி (10-03-2020)